மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் மகளிரணி நிர்வாகியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென்காசியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கடந்த 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வியை, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசவிடாமல் தடுத்ததாக கூறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி ”மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம். ஆனால் எங்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லையா?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த சிவபத்மநாதன் ஆதரவாளர்கள், அவர் கையில் வைத்திருந்த மைக்கை பிடுங்கி தமிழ்செல்வியை மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமைக்கு புகாரும் சென்றுள்ளது. பின்னர் இதுகுறித்து சிவபத்மநாதனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சிவபத்மநாதனை விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (ஜுலை 25)வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் பொ.சிவபத்மநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!
வலுவிழந்த நிலையில் அரசு ஊழியர்களின் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்!
‘கக்கன்’ திரைப்பட ஒலிநாடாவை வெளியிட்ட முதல்வர்
தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் மூன்று எம்.எல்.ஏ-க்கள்!