டிடிவி தினகரன் Vs தங்க தமிழ்செல்வன்…தேனியின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன?

அரசியல் சிறப்புக் கட்டுரை

15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட தேனி தொகுதி இந்த தேர்தலில் எல்லோரும் கவனிக்கக் கூடிய சூடு பிடிக்கும் களமாக மாறியிருக்கிறது. திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். தங்க தமிழ்செல்வன் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்ததால் அதிமுகவில் எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டவர். அவரே தினகரனுக்கு எதிராகப் போட்டியிடுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சூழல் தேனியில் நிலவுகிறது. அதிமுக சார்பில் முதல்முறை வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஜெயபாலன் போட்டியிடுகிறார்.

சட்டமன்றத் தொகுதிகள்

இத்தொகுதி 2008க்கு முன்புவரை பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்து பின்னர் தேனி மக்களவை தொகுதியாக மாற்றம் பெற்றது. தேனி நாடாளுமன்றத் தொகுதி என்பது சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும்.

மூன்று முதலமைச்சர்கள்

தமிழ்நாட்டிற்கு மூன்று முதலமைச்சர்களை இத்தொகுதி கொடுத்திருக்கிறது. 1984-இல் எம்.ஜி.ஆர் தேனி தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே இத்தொகுதியில் அதிமுகவிற்கான செல்வாக்கு என்பது அதிகம். இதுமட்டுமல்லாமல் டிடிவி தினகரன் முதல் முறையாக எம்.பி தேர்தலில் போட்டியிட்டு வென்ற தொகுதியும் இதே தேனி மக்களவை தொகுதிதான்.

சமூக வாரியாக வாக்குகள்

தேனி தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இதில் மறவர், பிறமலைக் கள்ளர், சேர்வை, ஈச நாட்டுக் கள்ளர் என பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக 31% சதவீதம் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 20% இருக்கிறார்கள். பட்டியலினத்தில் ஆதி திராவிடர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அத்துடன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

பிள்ளைமார் 7%, கவுண்டர் 7%, நாயக்கர் 6%, செட்டியார் 5%, கிறித்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் 5%, நாடார் 4% மற்றும் இதர பிரிவினர் 15% இருக்கிறார்கள்.  முக்குலத்தோர் சமூக வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் பிரதான காரணியாக இருக்கும் என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளும் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்தே வேலை செய்கின்றன.

கம்பம், தேவகானம்பட்டி மற்றும் பெரியகுளம் பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தபோது இங்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முகமது ஷெரீஃப் தனியாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரனை வீழ்த்த கலைஞர் போட்ட பிளான்

1999 இல் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் 2004 தேர்தலிலும் தேனி தொகுதியிலேயே களமிறங்கினார். அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு எதிரான அதிருப்தி மக்களிடையே பெரும்பான்மையாக இருந்தது. இதன் காரணமாக அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவும் என்று கணிக்கப்பட்டபோது, தேனி தொகுதியில் மட்டும் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று சர்வேக்கள் தெரிவித்தன. திமுகவிலிருந்து கலைஞருக்கு வந்த சர்வேக்களும் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், தேனியில் மட்டும் அதிமுக வெற்றிபெறும் என்றுதான் தெரிவித்தன. அப்போது கள நிலவரங்களை கேட்டறிந்த கலைஞர் தேனியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆரூணிடம் பேசி கொடைக்கானல் பகுதியில் கவனமெடுத்து வேலை செய்தால் தினகரனை தோற்கடிக்கலாம் என்று தெரிவித்தார்.

அதன்பிறகு ஆரூண் கொடைக்கானலில் இருந்த சிக்கல்களை சரிசெய்தார். மேலும் அந்த காலக்கட்டத்தில் அரசு ஊழியர்கள் எஸ்மா சட்டத்தின் மூலம் ஜெயலலிதா அரசாங்கத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் எல்லோரும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்று விரும்பினர். அதன்படி தேர்தல் பணியாளர்களாக சென்ற அரசு ஊழியர்கள் ஒவ்வொரு பூத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை திமுக கூட்டணிக்கு விழச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அவர்களும் அதிமுகவிற்கு எதிராக வேலை செய்தனர். இதன் காரணமாக தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு அதிமுகவில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை. இப்போதுதான் மீண்டும் தேனியில் களமிறங்குகிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் & 2021 சட்டமன்றத் தேர்தல் ஒப்பீடு

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 38 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போது, தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,993 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2019 பாராளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் பெற்ற வாக்குகளின் விவரங்களை, 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த தொகுதியில் இரண்டு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சில மாற்றங்கள் நாம் கவனிக்க முடியும்.

  • முதலில் சோழவந்தான் (தனி) சட்டமன்றத் தொகுதி.

2019 பாராளுமன்றத் தேர்தலில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விட அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 22,794 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார்.

ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியை திமுக கைப்பற்றியிருக்கிறது. திமுக வேட்பாளர் ஏ.வெங்கடேசன் அதிமுக வேட்பாளரை விட 17,045 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார்.

சோழவந்தான் தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், அதிமுகவின் வாக்கு எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

  • இரண்டாவதாக உசிலம்பட்டி தொகுதி.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் திமுக கூட்டணியை விட 24,145 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அய்யப்பன் திமுக வேட்பாளரை விட 7477 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தார்.

2 ஆண்டுகளில் அதிமுகவின் வாக்கு வித்தியாசம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

  • மூன்றாவதாக ஆண்டிப்பட்டி தொகுதி.

2019 இல் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விட 6071 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார்.

ஆனால் 2021 இல் அதிமுகவை வீழ்த்தி 8538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் மகாராஜன்.

  • நான்காவதாக பெரியகுளம் (தனி) தொகுதி.

இத்தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரவீந்திரநாத்தை விட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 6,451 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவே 21,132 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு ஆண்டுகளில் பெரியகுளம் தொகுதியில் திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.

  • ஐந்தாவதாக போடிநாயக்கனூர் தொகுதி

2019 இல் போடிநாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் திமுக கூட்டணியை விட 26,488 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

ஆனால் 2021 இல் ஓ.பன்னீர் செல்வம் இத்தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வனை விட 11,021 வாக்குகளே அதிகம் பெற்றார்.

இங்கும் அதிமுக பெற்ற வாக்கு வித்தியாசம் பாதியாகக் குறைந்திருக்கிறது.

  • ஆறாவதாக கம்பம் தொகுதி

2019 இல் ரவீந்திரநாத் இங்கு திமுக கூட்டணியை விட 4627 வாக்குகள் அதிகம் பெற்றார்.

ஆனால் 2021இல் திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வீழ்த்தினார்.

2021 சட்டமன்றத் தொகுதியில் 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 4 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக சேர்த்துப் பார்க்கும்போது 2019-இல் 76,000 வாக்குகள் திமுக கூட்டணியை விட அதிமுக கூட்டணி அதிகம் பெற்றிருந்தது. ஆனால் 2021 இல் நிலைமை தலைகீழாகி திமுகவின் வாக்கு சதவீதம் பெருமளவு கூடியிருக்கிறது. அதிமுக கூட்டணியை விட திமுக 70,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

தேனியில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் தற்போது அதிமுகவில் இல்லை. உசிலம்பட்டி தொகுதியில் அய்யப்பனும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பி.எஸ்-சும் வெற்றி பெற்றிருந்தனர். அய்யப்பன் இப்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார்.

 யாருக்கு சாதகமாக இருக்கிறது களம்?

தேனியில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஈசநாட்டுக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது கூட்டணியில் உள்ள ஓ.பி.எஸ் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். தேனியில் சேர்வை, மறவர் மற்றும் ஈசநாட்டுக் கள்ளர் பிரிவினர் 16% இருக்கிறார்கள். இதனால் டிடிவி தினகரனின் பலம் மேலும் கூடுகிறது. அதேபோல் பிள்ளைமார் மற்றும் யாதவர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பெரும்பாலும் பாஜக சார்புடையவர்களாக இருக்கிறார்கள். இதனால் அந்த வாக்குகளிலும் டிடிவி தினகரன் செல்வாக்கு செலுத்துவார். மேலும் தினரனுக்காக அவரது மனைவி அனுராதா முழுநேரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தனிப்பட்ட செல்வாக்கைத் தாண்டி, கட்சி ரீதியாக அமமுக பலமாக இல்லாதது தினகரனின் பலவீனமாக இருக்கிறது.

திமுக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆண்டிப்பட்டி இவரது சொந்த தொகுதி அங்கு 3 முறை இவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அவரின் பலம். பிறமலைக் கள்ளர் சமூகத்தைப் பொறுத்தவரை தேனி தொகுதியில் 16% மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் பெரும்பான்மை வாக்குகள் தங்க தமிழ்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் பிரியக் கூடும் என்பதாக தொகுதியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்டியலினத்தவர் வாக்குகள் வெற்றி தோல்வியில் முக்கியமான தாக்கத்தை செலுத்தும் என்பதால் இதனைப் பெறுவதில் கடும் போட்டி இருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஜான் பாண்டியன் டிடிவி கூட்டணியில் இருப்பதால் குறிப்பிடத்தக்க வாக்குகளை அவர் பிரிக்கக் கூடும்.

அதேபோல் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருக்கிறது. அவர் அதிமுக கூட்டணியில் இருப்பதால் அதிமுக கூட்டணிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் பிரியக் கூடும். திமுக, பாஜக இரண்டு கூட்டணிகளும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும்போது, அதிமுக நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த நாராயணசாமியை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. முக்குலத்தோர் வாக்குகளை தங்க தமிழ்செல்வனும், தினகரனும் பிரிக்கும்போது, நாயக்கர் வாக்குகளை மொத்தமாக பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அதிமுக இறங்கியிருக்கிறது. இதனைத் தாண்டி தொகுதியில் அதிமுகவுக்கென்று தனி செல்வாக்கு எப்போதும் இருப்பதால் இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கான பலத்தைக் கொடுக்கிறது.

தங்க தமிழ்செல்வனைப் பொறுத்தவரை தொகுதியில் இன்னும் திமுக நிர்வாகிகளோடு பெரிதாக ஒத்துப் போவதில்லை என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக கட்சியினர் இறங்கி வேலை பார்ப்பதில் ஏற்படும் சுணக்கம் அவரது பலவீனமாக இருக்கிறது. ஆனால் ஆண்டிப்பட்டியில் உள்ள அவரது சொந்த பலம், போடி தொகுதியில் இறங்கி ஓ.பி.எஸ்-க்கு கடும் போட்டியைக் கொடுத்தது இதெல்லாம் அவரது முக்கியமான பாசிட்டிவ் விசயங்களாக இருக்கிறது. மேலும் 2021 தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியிருக்கிறது என்பதால் அந்த வாக்கு சதவீதத்தை நம்பி களத்தில் தெம்புடன் நிற்கிறார் தங்க தமிழ்செல்வன்.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை 2019-இல் 27,864 வாக்குகளைப் பெற்றிருந்தது. அது 2021 இல் 75,764 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் இந்த முறை இன்னும் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் அக்கட்சியினர் வேலை செய்து வருகிறார்கள்.

அமமுகவில் தங்க தமிழ்செல்வன் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்து டிடிவி தினகரனுடன் முரண்பட்டு வெளியில் வந்தவர் என்பதால் தேனியின் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது. தொகுதியில் நீண்ட காலமாக செல்வாக்கு செலுத்தும் கட்சி என்பதால், கட்சி பலத்தை நம்பி அதிமுக நிற்கிறது. மொத்தத்தில் தேனியில் ஒரு கடுமையான மும்முனைப் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாக்டர் கிருஷ்ணசாமி Vs ஜான் பாண்டியன்…தென்காசியைக் கைப்பற்றப்போவது யார்?

சூரியனோடு மோதும் தாமரை… பிந்தும் இரட்டை இலை…வேலூர் தொகுதி நிலவரம்!

மீண்டும் வெல்வாரா தமிழச்சி…குறிவைக்கும் ஜெயவர்தன்…தட்டிப் பறிப்பாரா தமிழிசை..தென்சென்னை ரேஸில் முந்துவது யார்?

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *