அ.இ.அ.தி.மு.க: ஒரு அரசியல் கட்சியின் அவல நிலை!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

பொதுமக்களில் பலருக்கும் இப்போதெல்லாம் அ.இ.அ.தி.மு.க குறித்தும், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், சசிகலா குறித்தும் பேசுவதற்கே விருப்பமில்லை; பொது இடங்களில், பயணங்களில் இந்த பேச்சை எடுத்தாலே அலுத்துக்கொள்கிறார்கள், பேச்சை மாற்றுகிறார்கள். அந்த அளவு கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா மறைவுக்குப் பின் அந்த கட்சியில் நடந்த பதவி சண்டைகளைக் கண்டு அனைவரும் சலித்துப் போயிருக்கிறார்கள். தர்மயுத்தம், கூவாத்தூர், ஆர்.கே.நகர், இரட்டைத் தலைமை, ஒற்றைத் தலைமை என்று பேசிப்பேசி அலுத்துப் போய்விட்டது மக்களுக்கு.

ஆனாலும் கூட தொடர்ந்து ஊடகங்கள் அந்த கட்சி தொடர்பான செய்திகளை பரபரப்பான செய்திகளாக வெளியிட்டுத்தான் வருகின்றன. தொடர்ந்து அந்த கட்சிக்கு ஒன்றரை கோடி “தொண்டர்கள்” இருப்பதாக ஒரு நகைச்சுவை வசனத்தை பலரும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் பெற்ற வாக்குகளே ஒன்றரை கோடிதான். வாக்களித்தவர்கள் அனைவரையும் தொண்டர்கள் என கூறிக்கொள்ளும் அளவு ஒரு அபத்தமான மன நிலையில்தான் அந்த கட்சி இயங்கி வருகிறது.

இருப்பினும் நேற்று (ஜூலை 11) நடைபெற்ற காட்சிகளை அரசியலில் அக்கறை உள்ளவர்கள் எளிதில் கடந்து செல்ல முடியாது. அந்த கட்சியின் வரலாற்றில் இது முக்கியமான நாள்தான். என்னதான் இருந்தாலும் ஒன்றைரை கோடி வாக்குளை கடந்த தேர்தலில் பெற்ற ஒரு கட்சி இவ்வளவு மோசமாக அரசியல் வீழ்ச்சிக்கு வழி தேடுவது பரிதாபமாக இருக்கிறது. ஆனால் நடந்த நிகழ்ச்சிகள் ஒரு சரியான அரசியல் பார்வையில் விமர்சிக்கப் படுவதில்லை என்பதால் விடுபட்ட கோணங்களை எழுத வேண்டியுள்ளது. உதாரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்களின், மாவட்ட செயலாளர்களின், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது; அதனால் என்னவேண்டுமானால் செய்யலாம் என்பதைத் தவிர வேறு எந்த கோணத்திலும் விவாதங்கள் நிகழ்வதில்லை.

பெரும்பான்மை என்பது என்ன வேண்டுமானால் செய்யலாமா?

பெரும்பான்மை வாக்குகளை பெற்றவர்கள்தான் கட்சியிலோ, ஆட்சியிலோ பதவி வகிப்பார்கள் என்பது உண்மைதான். அதுதான் மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் அந்த பெரும்பான்மை என்பது கருத்துக்களின் முரண்பாடுகளினால் நிகழும் மோதலில் தேர்வாகும் பெரும்பான்மை என்றே பொருள்படும். அதன் பின்னரும் கருத்துக்கள், விவாதங்கள், தர்க்கங்கள் சார்ந்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இருந்துவிட்டால் என்ன வேண்டுமானல் செய்யலாம் என்பது மக்களாட்சியும் அல்ல, அரசியலும் அல்ல. இந்த முக்கியமான அம்சத்தைத்தான் விமர்சகர்களும், ஊடகங்களும் வலியுறுத்த தவறிவிடுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றின் முக்கிய பணி என்னவென்றால் ஒவ்வொரு பிரச்சினையை குறித்தும் விவாதிப்பதுதான். அந்த விவாதங்கள் பகிரங்கமாக பொதுவெளியில் அனைவரும் அறிந்துகொள்ளத்தக்க வகையில் நடப்பதுதான் பொதுமன்றத்தின் வலுவில் இயங்கும் மக்களாட்சியாகும். அதற்காகத்தான் நாடாளுமன்ற அமர்வுகளை தொலைகாட்சியில் ஒளிபரப்புகிறார்கள். இந்த அவைகளில் எடுக்கப்படும் முடிவுகள் விவாதங்கள் ஊடாக ஆராயப்பட்டு வடிவமைக்கபட வேண்டும்; உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒரு மசோதாவை ஆதரித்தாலும், விவாதங்களில் கட்சி சார்பினை கடந்தும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை, சிந்தனைகளை பேச வேண்டும். இதை ஆங்கிலத்தின் பொதுவான பகுத்தறிவு “Public Reason” என்று அழைக்கிறார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. எதிர்கட்சி உறுப்பினர்களை கடமைக்கு பேச விட்டாலும், அவர்கள் கூற்றுக்களை தர்க்கரீதியாக எதிர்கொள்ளாமல், குரல் வாக்கெடுப்பில் தாங்கள் நினைத்த சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டே செல்கிறது பாஜக அரசு. அது மக்களாட்சியை பொருளற்றதாக்குகிறது. ஊடக வெளியிலும் அரசின் கட்டுப்பாடும், “செல்வாக்கும்” கோலோச்சுவதால் அங்கும் விரிவான விவாதங்கள் நிகழ்வதில்லை.

இதையெல்லாம் கூறுவதற்கு காரணம் ஒரு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்றவையும் சட்டமன்றம், நாடாளுமன்றம் போலத்தான். அவற்றிலும் விவாதங்கள் நிகழவேண்டும்; கருத்து முரண்கள் தர்க்க ரீதியாக அலசப்பட வேண்டும். கட்சி அமைப்புகள் இவற்றை பொதுவெளியில் பகிராமல் இருக்கலாம். ஆனாலும் எந்த முடிவும் பொதுக்குழுவில் அலசி ஆராய்ந்தே எடுக்கப்பட வேண்டும். அ.இ.அ.தி.மு.க-வின் பொதுக்குழு எந்த விவாதமும் இன்றி, காரண காரியங்களை ஆராயும் முயற்சிகளை அறவே மேற்கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து வருகிறது.

முதலில் ஜெயலலிதா மறைந்தவுடன் 2016 டிசம்பரில் பொதுக்குழு கூடி வி.கே.சசிகலாவை இடைக்கால/ தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது. அந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கவே இல்லை. கூட்டம் முடிந்த பிறகு முக்கிய தலைவர்கள் அனைவரும் சசிகலாவை சந்தித்து காலில் விழுந்து வணங்கி அவரிடம் பொதுக்குழு தீர்மானத்தைக் கூறி தலைமை ஏற்கும்படி கூறினார்கள். இந்த முடிவு குறித்து விவாதங்கள் எதுவும் பொதுக்குழுவில் நிகழ்ந்ததாக தெரியவில்லை. அன்றைய நிலையில் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்டு அவருடன் இணைந்து கட்சியிலும். ஆட்சியிலும் முடிவுகள் எடுத்துவந்த, சின்னம்மா என்று அழைக்கப்பட்ட சசிகலாவை, தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததை ஒரு எதிர்பாராத நிகழ்வாக யாரும் கருதவில்லை என்றுதான் கூறவேண்டும். அ.இ.அ.தி.மு.க விதிகளின்படி பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் தற்காலிக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டார். அவர் பொதுச்செயலாளராக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் முன்னமே காட்சிகள் மாறின. அவர் சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்துவிட்டு சென்றார்.

பொதுக்குழு அதிரடி- பொதுச்செயலாளரே தேவையில்லை!

அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து கூடிய பொதுக்குழு எந்த விளக்கங்களும் சொல்லாமல் சசிகலாவையும், தினகரனையும் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கியது. அது மட்டுமல்லாமல் கட்சியின் அடிப்படை விதிகளை அப்பட்டமாக மீறி, பொதுச்செயலாளர் பதவியையே ரத்து செய்தது. பொதுக்குழுவிற்கு பொதுச்செயலாளர் பதவியை நீக்கும் அதிகாரம் இல்லை என்று கட்சியின் அடிப்படை விதிமுறை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. அவ்வாறு நீக்குவதற்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வகித்த பதவியை இனி யாரும் வகிக்க முடியாது என்ற காரணம் கூறப்பட்டது. ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக விளங்குவார் என்று கூறி, கட்சியினை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளே கட்சியை கட்டுப்படுத்தும் என்று அறிவித்தார்கள் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொதுக்குழு தீர்மானத்தால் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு செய்தது செல்லாது என்று கே.சி.பழனிச்சாமி தொடுத்த வழக்கு இன்றும் நிலுவையில் இருக்கிறது. சட்டம் சரிவர தன் கடமையை செய்தால் அந்த முடிவினை செல்லாது என்று அறிவிப்பதே சரியாக இருக்கும்.

இந்த முடிவை பொதுக்குழு எடுத்தாலும், அடிப்படை உறுப்பினர்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குறை இருந்து வந்தது. அதனால் எட்டு மாதங்களுக்கு முன்னால் 2021 டிசம்பர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இருவரும் மனு தாக்கல் செய்து, வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அடிப்படை உறுப்பினர்களால் அந்த பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். ஐந்தாண்டுகாலம் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் அவர்கள் வகித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ததாக வலுவடைந்தன. இரண்டு தலைவர்களும் இரட்டை குழல் துப்பாக்கிகள், இருவரும் இணைந்து கழகத்தை வலுப்படுத்துகிறார்கள் என்று ஓயாமல் அனைவரும் கூறிவந்தார்கள். குறிப்பாக வி.கே.சசிகலா தரப்பினரின் விமர்சனங்களை கடுமையாக எதிர்கொண்டார்கள்.

மீண்டும் பொதுக்குழு அதிரடி – பொதுச்செயலாளர் வேண்டும்!

இப்போது எட்டே மாதத்தில் மீண்டும் பொதுக்குழு கூடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி்விட்டோம், ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானத்தையும் நீக்கிவிட்டோம், எடப்பாடி பழனிசாமியை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கிறோம் என்று அறிவிக்கிறார்கள். பொதுக்குழுவில் பெரும்பான்மை இருப்பதால் இவ்வாறு முடிவெடுக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆறு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டதாக கட்சி ஓயாமல் வலியுறுத்திய இரட்டை தலைமை எப்படி திடீரென சுமையாக மாறியது? எதனால் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குகிறார்கள்? பொதுக்குழுவில் யாரும் இந்த முயற்சியை குறித்து கேள்வி் கேட்டார்களா? ஏதெனும் விவாதம் நடந்ததா? அடிப்படை உறுப்பினர்கள் பொதுக்குழு என்ன சொன்னாலும் தலையாட்டிவிட்டு போக வேண்டுமா? இப்போதுதானே ஏழு மாதத்திற்கு முன்னால் அடிப்படை உறுப்பினர்கள் பெயரில் இரட்டை தலைமையை உறுதி செய்தார்கள்? அதற்கு என்ன மரியாதை? பெரும்பான்மை இருந்தால் நினைத்தபடி எத்தனை முறை வேண்டுமானாலும் கட்சியின் அடிப்படை விதிகளையே மாற்றி அமைக்கலாமா?

மக்களாட்சி தத்துவம் புரிந்தவர்கள் இவ்வளவு கொச்சையான பெரும்பான்மைவாதம் பேச மாட்டார்கள். தேசத்தின் அரசியலமைப்பு சட்டம் எப்படி முக்கியமானதோ அதைப்போலத்தான் கட்சியின் அமைப்பு சட்டமும். ஒவ்வொரு அரசும் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை நினைத்தபடி மாற்றினால் அரசின் தொடர்ச்சி, நிலைத்தன்மை என்பது என்னவாகும்? அதனால்தான் சில சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு உகந்ததா என்பதை பரிசீலிக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது. உதாரணமாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஆதிக்க ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரிக்கும்போது இந்த சட்டத்தை ஏற்க மறுக்கலாம். இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்குத்தான் என்றாலும் வெறும் பெரும்பான்மையை மட்டும் காட்டி ஒரு சட்டத்தை நியாயப்படுத்திவிட முடியாது என்பதுதான் முக்கியம்; அதனால்தான் நீதிமன்றம் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கிறது. இந்த அடிப்படையில் சிந்தித்து பார்த்தால் அ.இ.அ.தி.மு.க-வின் பொதுக்குழு நினைத்தபடியெல்லாம் கட்சி விதிகளை மாற்றியமைப்பது நகைப்பிற்குரியது மட்டுமல்ல, கட்சியினை சீர்குலைக்கும் செயல் என்று உறுதியாகச் சொல்லலாம். ஒரு அரசு என்பதோ, கட்சி என்பதோ வரலாற்று தொடர்ச்சி என்பதில்தான் அடங்கியுள்ளது. அதனால்தான் அடிப்படை விதிகளை மாற்றுவதற்கு நிறைய சிந்திக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால் அ.இ..அ.தி.மு.க தன் கட்சியின் அரசியல் மாண்பினை தானே அழிக்கத் துடிக்கிறது. பதவி வெறியும், அதிகாரப் பித்தும் தலைவர்களை ஆட்டுவிக்க அரசியல் அதல பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது!

எடப்பாடி பழனிச்சாமியின் தகுதிதான் என்ன?

இதில் பெரிய வியப்பு என்னவென்றால் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் வகித்த பதவியில், அவருக்குப் பின் “மாண்புமிகு புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா” என்று அவர்களால் மூச்சையடிக்கி அழைக்கப்படும் ஜெயலலிதா இருபத்தேழு ஆண்டுகள் வகித்த பதவியில் மற்றொருவர் அமர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றெல்லாம் கூறியவர்கள், திடீரென எடப்பாடி பழனிசாமி அந்த பதவிக்கு அருகதையானவர் என்று எப்படி தீர்மானித்தார்கள் என்பதுதான்.

கூவாத்தூரில் அவர் தேர்வு செய்யப்படும் வரை இப்படி ஒருவர் அ.இ.அ.தி.மு.க அமைச்சரவையில் இருந்தார் என்பதே பலருக்கும் தெரியாது. கமலஹாசன் வெளிப்படையாகவே அதை கூறினார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை கேள்விப்பட்டதேயில்லை என்பதை குறிப்பிட்டார்கள். இப்படி பரவலாக அறியப்படாதவர் முதல்வராவதில் தவறில்லை. அதன் பிற்கு அவர் எதற்காக அறியப்பட்டார் என்பதுதான் முக்கியம். தமிழ் நாடே கொந்தளித்த தூத்துக்குடி துப்பாகி சூடு சம்பவமாகட்டும், இந்தியாவே கொந்தளித்த குடியுரிமை சீர்திருத்த சட்டமாகட்டும் தனக்கு தொடர்பேயில்லாத பிரச்சினைகள் போல செயலற்று இருந்தார் பழனிசாமி. தன் அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் உத்தரவிட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறி நகைப்பிற்கிடமானார். எந்த அரசியல் பிரச்சினையிலும் தன்னுடைய நிலைபாட்டை எடுத்துக்கூறி விளக்கும் ஆற்றலற்றவர். உண்மையில் அவருக்கு அரசியலே தெரியுமா என்பதையும் திட்டவட்டமாக கூற முடியவில்லை. அரசியலால் ஆதாயம் பெறத் தெரியும் என்பதும், அந்த ஆதாயங்களை ஆதரவாளர்களுக்கு பகிர்ந்தளிக்க தெரியும் என்பதுமே அவரது பலமாக கூறப்படுகிறது. தன்னை வெளிப்படையாக விமர்சித்த, ஊழல்வாதி என்று கூறிய ஓ.பன்னீர்செல்வத்துடன் பாரதீய ஜனதா கட்சியின் அழுத்தத்தால் கைகுலுக்கி, அவருடன் சேர்ந்து இரட்டைத்தலைமை அமைப்பை உருவாக்கினார். தன்னை முதல்வராக்கிய சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என தோல்விகளையே கட்சிக்கு பரிசளித்தார். மக்களை ஈர்க்கும் வல்லமை அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. கம்பராமாயணத்தின் இலக்கிய தகுதி குறித்து பொதுமேடையில் தமிழறிஞர் சோமசுந்தர பாரதியுடன் விவாதித்தவர் அறிஞர் அண்ணா. அவருடைய் பெயர் தாங்கிய கட்சியில் ”சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்” என்று குழறும் அளவு பேச்சாற்றல் கொண்டவர் பழனிசாமி.

இதெல்லாம் கூட பிரச்சினையல்ல. இதுவரை இரண்டு பெரிய திராவிட கட்சிகளுமே அனைத்து ஜாதிகளுக்கும் பொதுவான தலைவர்களையே, வெகுஜன தலைவர்களையே உருவாக்கி வந்துள்ளன. தி.மு.க-வின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினும் தன் பெயரிலும், குணத்திலும் அந்த பொதுத்தன்மையையே நிறுவுகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவரது பலமாக கொங்கு மண்டலம் என்ற பகுதியையும், ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சார்ந்தவர் என்ற அடையாளத்தையுமே கொண்டிருப்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் போல திராவிட கட்சிகளும் வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் அந்தந்த தொகுதிகளின் ஜாதி, வகுப்பு சார்ந்த மக்கட்பரப்பை கணக்கில் கொண்டாலும், வெகுஜன தலைமை என்பது குறுகிய அடையாளங்களுக்கு அப்பாற்பட்டதாக விளங்குவதாகவே உருவாக்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சமூக விலக்கத்திற்கு ஆட்பட்ட பிரிவுகளிலிருந்து தி.மு.க-வின் பேராளுமைகளான தலைவர்கள் உருவாகி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தலைமை வகிப்பவர்களாக விளங்கினார்கள். ஆனால் அ.இ.அ.தி.மு.க கண்களை திறந்துகொண்டே குழியில் விழுவதை போல குறுகிய பிரதேச, வகுப்பு அடையாளத்தை தன் அரசியல் மூலதனமாகக் கொண்டவரை, அதைகடந்து பொதுவான மக்கள் தலைவராக உருவாகும் ஆற்றல் இல்லாதவரை பொதுச்செயலாளராக வெறும் பொதுக்குழு பெரும்பான்மையை வைத்து முடிவு செய்திருப்பது கட்சியின் அழிவிற்கு வித்துடுவது என்றால் மிகையாகாது. நன்றாக சிந்தித்துப் பார்த்தால் அ.இ.அ.தி.மு.க வரலாற்றின் முடிவுரையை காலம் எழுதத் துவங்கிய நாள் ஜூலை 11, 2022 என்றுதான் எதிர்காலத்தில் கூற வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *