”மதத்தின் பெயரால் ஒரு போதும் தேசியம் உருவாகாது. ஆனால் இன்று இந்து தேசியம் என்ற இல்லாத ஒரு கற்பிதத்தை நம்மீது திணிக்க பார்க்கிறார்கள்” என்று இளைஞரணி மாநாட்டில் ஆ. ராசா எம்.பி. பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று (ஜனவரி 21) திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.
அதில், ’திராவிட மாடல் – எல்லோருக்கும் எல்லாம்’ எனும் தலைப்பில் திமுக எம்.பி. ஆ.ராசா உரையாற்றினார்.
திராவிட மாடலின் 5 கொள்கைகள்!
அவர் பேசுகையில், “திராவிட மாடலை கடந்த மூன்றாண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறோம். பில் டியூரண்ட் என்ற வெளிநாட்டு அறிஞர் எழுதிய நாகரீகத்தின் கதை என்ற புத்தகத்தில் திராவிடம் வருகிறது. அவரைத்தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள் திராவிடம் குறித்து எழுதினார்கள்.
எதிரிகள் திரிசூலத்தை ஏந்தினார்கள். திமுக இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், கிருஸ்தவர்களுக்கு எதிரானவர்கள், மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் என்று கூறினார்கள்.
அதோடு பகுத்தறிவாதிகள், பொதுவுடமைவாதிகள் மற்றும் மெக்காலே கல்வி முறைக்கு எதிராகவும் பேசி வருகிறார்கள்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் நமக்கு திராவிட மாடல் என்பது ஐந்து கொள்கைகளை அடிப்படையாக கொண்டது என்ற தத்துவத்தை கூறினார். சுயமரியாதை, சமத்துவம், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, தேசிய இனங்களின் உரிமை என்பன அவை.
படித்த சமூகம் எப்போது காணாமல் போனது?
மெக்காலே கல்வி முறையை எதிர்க்கும் அவர்களுக்கு சொல்கிறேன். சங்கத்தமிழ் கண்ட ஒளவையார் முதல் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் படித்தவர்கள். கல்விக்கு முன்னுரிமை அளிப்பவர்கள்.
’பெண்ணுக்கு நீண்ட கூந்தலோ, பருத்த மார்பகமோ, அழகிய இடையோ அழகல்ல. அந்த பெண் படித்திருந்தால் அது தான் அழகு’ என்று நமது சங்கத்தமிழ் சொல்கிறது.
ஆணும் பெண்ணும் படித்த சமூகம் நம்முடையது. அது எங்கே, எப்போது காணாமல் போனது?
பெண்கள், சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி ஆரிய தத்துவம் எப்போது வந்ததோ அப்போது நமது படித்த சமூகம் காணாமல் போனது. அந்த ஆரிய தத்துவம் தான் மெக்காலே கல்வி முறையையும் தவறு என்கிறது.
சாதி சொல்லி படிப்பை நிறுத்தப்பட்ட நிலையில், 1835ஆம் ஆண்டு மெக்காலே கல்வி முறை வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் பள்ளர், பறையர், அருந்ததியர், கவுண்டர், செட்டியார், முதலியார், பிள்ளைமார்கள் என அனைவரும் படித்தார்கள்.
எதிர்த்து நிற்கின்ற ஒரே இயக்கம்!
பெரியாருக்கு கடவுள் மேல் கோபம் இல்லை. கடவுள் பெயரால் நம்மை பிரித்து படிக்க விடாமல் செய்த ஆரிய கூட்டத்தின் மேல் தான் கோபம்.
இன்றைக்கு நாம் ஆதரிக்கும் சுயமரியாதை, சமத்துவம், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, தேசிய இனங்களின் உரிமை உள்ளிட்ட ஐந்தையும் ஆரியர்கள் எதிர்க்கிறார்கள். அந்த கூட்டத்தின் நச்சு திட்டங்களுக்கு எதிராக தான் பெரியார், அண்ணா, கலைஞர் பேசினார்கள். இதனைதான் திராவிட மாடல் என்கிறோம்.
மேலும் இங்கு நடந்து வருவது தமிழ்நாட்டுக்கான மாநாடு மட்டுமல்ல. இந்தியா முழுமைக்கும் இது தேவைப்படுகிறது. ஆரியத்தை வீழ்த்த டெல்லியை சுற்றியிருக்கும் அனைத்து மாநில தலைவர்களுக்கு என்ன ஆயுதம் எடுப்பது என்று தெரியவில்லை.
மொழியின் பெயரால் தேசியம் உருவாகலாம். ஆனால் மதத்தின் பெயரால் ஒரு போதும் தேசியம் உருவாகாது. இந்த நிலையில் தான் இன்று இந்து தேசியம் என்ற இல்லாத ஒரு கற்பிதத்தை நம்மீது திணிக்க பார்க்கிறார்கள்.
ஆனால் அதனை எதிர்த்து நிற்கின்ற ஒரே இயக்கம் திமுக தான். ஒரே கொள்கை திராவிட மாடல் தான். ஒரே தலைவர் ஸ்டாலின் தான். இவை அனைத்தையும் பாதுகாக்க திமுக இளைஞர் படை இருக்கிறது.
உண்மையில் பாஜக உள்ளேயே யுத்தம் ஆரம்பித்துவிட்டது. இன்று பிரதமர் மோடி ராமர் கோயில் குடமுழுக்கில் பங்கேற்பதற்கு ஆறில் 4 சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தான் உண்மையான இந்து என்றால் மோடி நீங்கள் யார்? இந்து என்ற பெயர் சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். பிரிக்காதீர்கள்.
அப்படிபட்ட இந்து தேசியம் எங்களுக்கு தேவை இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலே வேண்டும். வரும் 2024ஆம் ஆண்டு இந்தியாவில் மத தேசியம் ஒழிந்து, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமையும். அதற்கு இந்த இளைஞரணி மாநாடே சாட்சியாக அமையும்” என்று ஆ.ராசா பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”பொதுவிடுமுறை அறிவியுங்கள்” : பன்னீர் கோரிக்கை!
சாய் பல்லவி வீட்டில் விசேஷம்… வெளியானது நிச்சயதார்த்த புகைப்படம்!
சோயப் மாலிக் திருமணம்: சானியா மிர்சா என்ன சொல்லி இருக்காரு பாருங்க!