முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து ‘கள்ளத்தனமாக’ வருபவர்களைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவின் தென் எல்லையில் நீண்ட எல்லைச் சுவர் ஒன்றை எழுப்புவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சொன்னது நினைவிருக்கலாம். அந்தச் சுவர் அரசியலை எதிர்த்து சுதந்திரவாதிகளும் குரலெழுப்பினர்.
ஆனால், எல்லைச் சுவர்கள் மேற்கில் எப்போதுமே பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லைச் சுவர்கள் எதிரிகள் சம்பந்தப்பட்டது. அதனாலேயே ட்ரம்ப்பின் ‘சுவர் அரசியல்’ தேர்தல் தோல்வி அடையவில்லை.
எல்லை அரசியல் மேற்கத்திய காலனிய அரசாங்கங்களில் முக்கியமானதோர் அரசியல் பண்பு. இது குறித்து மேற்கொண்டு பேசும் முன், எல்லை அரசியல் வளரும் நாடுகளிடமும் இருந்துவருவதை இங்கே பதிவு செய்வது நியாயமானது. உதாரணம்:
இந்தியாவும் வங்காள தேசமும் 4097 கிலோமீட்டர் நீளத்திற்கு எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்தியா கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டருக்கு முள் வேலி கொண்ட எல்லைச் சுவரை எழுப்பியுள்ளது. அது மட்டுமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நீர் நிலைகள், கடலெனெ ஓடும் பிரம்மபுத்திரா ஆறு, சதுப்பு நிலக் காடுகள் போன்ற பரப்புகளில் முள்வேலி அமைப்பது கடினம். அப்பகுதிகளில் இந்திய அரசு ‘லேசர்’, ‘ஸ்மார்ட் சென்சர்’ போன்றவற்றை அமைத்திருக்கிறது. இதன் மூலம் வங்காள மனிதர் நீர்நிலைகளில் இந்திய எல்லையைத் தாண்டும்போது அன்னாரின் உடலில் இருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்களைத் தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடிப்பதன் மூலம் எல்லைக் கண்காணிப்பை இந்திய அரசாங்கம் ‘மேம்படுத்தி’வருகிறது.
எனவே, காலனிய நாடுகளின் ‘சுவர் எல்லை’ அரசியல் வளரும் நாடுகளையும் பீடித்துவருகிறது என்றால் மிகையல்ல. ஆனால், இந்தச் சிறப்புப் பத்தி மேற்கத்தியக் காலனிய அரசியல் பற்றியது. எனவே, இக்கட்டுரை மேற்குலக எல்லை அரசியலை மட்டும் இங்கு கவனப்படுத்துகிறது.
அச்சத்தை விளைவிக்கும் சுவர்கள்
மேற்குலகின் எல்லைச் சுவர்கள் சொல்லும் செய்தி உளவியல் சார்ந்தது. குடிமக்களின் மனதில் அச்சத்தை விதைக்கும் வல்லமை படைத்தது. வாஷிங்டனில் வசிக்கும் எனக்குத் தெரிந்த சில நடுத்தர மக்கள் – டொனால்டு ட்ரம்ப்பின் சுவர்க் கொள்கையை ஆதரித்துப் பேசினர். ஏன் என்று கேட்டபோது, மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் உழைக்காமல் அரசாங்கத்தை அண்டி வாழ்வதாகக் குற்றம்சாட்டினர். ஆனால், அது குறித்து அவர்களால் எந்தவிதமான புள்ளிவிவரமோ, குறிப்போ அல்லது சாட்சியமோ தர முடியவில்லை. ஊடகத்தில் சொல்லப்படும் இன பேத விவரணையை மட்டுமே அவர்கள் நம்பியிருந்தனர். இதே சூழல்தான் பிரிட்டனிலும் நிலவிவருகிறது.
சில வலதுசாரி அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்ட அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான வலிமையான ஊடகப் பிரச்சாரம்தான், பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு வெளியில் செல்ல முடிவெடுக்க ஏதுவாக இருந்தது. இப்பிரச்சாரங்கள் பொய்யானவை; மிகவும் நம்பகத்தன்மை அற்றவை என்பது சமீப காலத்தில் சாட்சியங்களுடன் தெரியவந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ‘பார்டர் செக்யுரிட்டி’ போன்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. தினசரி பகல் நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சிகள், ‘கள்ளத்தனமாக’க் குடி புகுபவர்களால் மேற்கத்திய நாடுகளின் இறையாண்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு மாயையை உண்டாக்குகிறது. அதாவது வெள்ளையர்கள் ஒருவிதமான ‘அகதிகள் வெள்ளத்தில்’ இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. சிறுபான்மையினர் (குறிப்பாக முஸ்லிம்கள், பிறகு கறுப்பர்கள்) வெள்ளைப் பெரும்பான்மையினரை மக்கள்தொகையில் தோற்கடித்துவிடுவார்களோ என்ற ஒரு பொதுப்புத்தியை இந்நிகழ்ச்சிகள் உண்டாக்குகிறது.
‘அந்நியர்கள்’ குறித்த மாயை
தெற்கு லண்டனில் சௌதால் (Southall) என்றொரு பகுதி உண்டு. இங்கு சீக்கியர்கள், பாகிஸ்தானிகளின் எண்ணிக்கை அதிகம். இங்கே சௌதால் ப்ளாக் சிஸ்டர்ஸ் (Southall Black Sisters) என்ற ஒரு கள அமைப்பு சிறுபான்மைப் பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு கோரி 1979ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. அவர்களது மாதாந்தரக் கூட்டத்தில் பல்வேறு வகையான வெள்ளையரற்ற பெண்கள் பங்கெடுத்துப் பயன் பெறுவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு கூட்டம் நடக்கையில் பிரிட்டனின் பார்டர் ஏஜென்ஸி (குடிபுகல் துறை), கள்ளக் குடியேறிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் ஒரு வண்டியைக் கூட்டம் நடக்கும் இடத்தின் முன் நிறுத்தியது (யாரையும் பிடித்து அடைக்கவில்லை). இம்மாதிரியான நடவடிக்கைகளின் மூலம் பிரிட்டனில் உள்ள சிறுபான்மையினர் வெள்ளையர்களின் நலனுக்கு எதிரானவர்கள் போலவும், சௌதாலில் உள்ள சீக்கியர்களும் பாகிஸ்தானிகளும் தீவிரவாத ஆதரவாளர்கள் போன்றும் ஒரு மாயையை வெள்ளை பிரிட்டன் தோற்றுவிக்கிறது.
பார்டர் ஏஜென்சியானது லண்டன், மான்செஸ்டர், பிர்மிங்காம், லெஸ்டர் போன்ற நகரங்களில் உள்ள இன சிறுபான்மையினரின் வீடுகளுக்குத் தங்களது படையுடனும் (துப்பாக்கி போன்ற ஆயுதம் உள்பட), கேமராக்களுடனும் சென்று ‘கள்ளக் குடியேறிகளை’ கைதிகளாகப் பிடித்து ரியாலிட்டி டிவியாக தொடர்ந்து ஒளிபரப்புகிறது [காணொளி உதாரணம் இங்கே](https://www.youtube.com/watch?v=oMfRThHNGu4). இம்மாதிரியான ‘ரெய்டுகள்’ மிகுந்த ஊடக வெளிச்சத்துடனும், ஒரு சினிமா சண்டைக் காட்சிகளுக்கு இணையான பரபரப்புடனும் நிகழ்த்தப்படுகின்றன [காணொளி இங்கே](https://www.youtube.com/watch?v=IXi1WrMcWl4).
இவர்களில் பலரும் கள்ளத்தனமாக வந்தனர் என்பதென்னவோ உண்மையாக இருக்கலாம். ஆனால், இவர்கள் பெரும்பாலும் பொருளாதார அகதிகள் அல்லது பிழைப்பு தேடி வந்த குடியேறிகள். உள்ளூர் தாதாக்கள் துணையின்றி இது சாத்தியமில்லை. பார்டர் ஏஜென்சியோ, ஊடகங்களோ பிரச்சினையின் வேர்கள் குறித்துக் கவலைப்படுவது கிடையாது. ரியாலிட்டி டிவியும் பார்டர் ஏஜென்சியும் அகதிகள் மற்றும் கள்ளக் குடியேறிகளைச் சமூக விரோதிகள் அல்லது தீவிரவாதிகள் போன்ற சித்திரிப்பை உருவாக்குகிறது.
இம்மாதிரியான ‘ரெய்டுகள்’ – வீடுகளில், வியாபாரம் நடக்கும் இடங்களில், விமான நிலையங்களில் எனப் பல பொது இடங்களில் ஊடக வெளிச்சத்தோடு வெளிக்கொண்டு வரப்படுகின்றன. இது ஊடகங்களின் கருத்துரிமையாகவும் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகள், பிரிட்டன் நாடே குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது போன்ற தோற்றத்தை மக்கள் மனதில் உண்டாக்குகிறது.
இந்த மாதிரியான மனநிலையும் அச்சப் போக்கும்தான் 1948ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து வேலை செய்வதற்காக ‘அழைத்துவரப்பட்டவர்களை’ 2016இல் எந்தவிதமான மனித உணர்வும் இல்லாமல் வெளியே அனுப்பக் காரணமாக உள்ளன.
அச்சத்தை விதைக்கும் பிரச்சாரம்
ஐரோப்பியக் கண்டம் முழுக்க வெள்ளையர்கள் சிறுபான்மையினராகி, முஸ்லிம்கள், கறுப்பர்கள், ஆசியர்களின் மக்கள்தொகை அதிகமாகிவிடும் என்ற பிரச்சாரம் பெருவாரியான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுவருகிறது.
மேற்கத்திய ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் மாசற்றதல்ல.
மேற்கின் ஊடகக் கருத்துச் சுதந்திரக் கருத்தியலுக்குப் பின் ஐரோப்பிய மறுமலர்ச்சியைத் தருவித்த வெள்ளை இனத்தின் சுயப் பெருமையும் அவர்களின் கிறிஸ்துவ தாராளவாதமும் (Christian liberalism) பின்புலமாக உள்ளன. அதனாலேயே ஃப்ரெஞ்ச் தேசத்தில் தாராளவாதமும் சோஷலிசமும் பேசும் ஒருவர் முஸ்லிம்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் வாழும் முறையையும், ஃப்ரெஞ்ச் தேசத்தின் (கிறிஸ்துவ) மதச்சார்பின்மைக்கு எதிரானதாகப் பார்க்க முடிகிறது. பெண்கள் தலைப் பகுதியை மறைப்பது பெண்களுக்கு எதிரானது; மேற்கத்திய ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரானது என்ற வாதத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
இப்படி வாதிடுவதால், குடியேறிகளால் மேற்குலகில் பிரச்சினை ஏற்படுவது கிடையாது என்றும் பொருளல்ல. 2015/2016 புதுவருடக் களியாட்டத்தின்போது, ஜெர்மனியில் உள்ள கலோன் நகரத்தில் கொண்டாடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான (ஒரு கணக்குப்படி 1200) பெண்கள் அங்கே குடிபுகுந்த வட ஆப்பிரிக்க, அரேபிய ஆண்களால் பாலியல் அவதிக்குள்ளானோர். 24 பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
மேற்குலகில் கொண்டாடப்படும் பாலியல் சமத்துவம் போன்ற சமூக மாண்புகள், இஸ்லாமிய மற்றும் வளரும் நாடுகளிலிருந்து வரும் ஆண்களின் கலாச்சாரத்திற்கு அந்நியமானதாக இருப்பது இம்மாதிரியான பாலியல் வன்முறை நிகழ்வுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. அக்கூற்றில் கசப்பான உண்மையும் இருக்கிறது. அதே சமயத்தில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்கெனவே காலனிய சமுதாயத்தில் நிலவிவரும் அகதிகள் மற்றும் குடியேறிகளின் மீதான பயத்தினையும் வெறுப்பையும் அதிகரிக்கின்றன. இதனால் நடுத்தர வர்க்க தாராளவாதிகள், வெளியில் இருந்து வரும் அகதிகள், குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரிகளின் நிலைப்பாட்டினை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
பெரும்பான்மை இனவாதமும் தேசியத்துவமும்
சுதந்திரவாதிகளும், தாராளவாதிகளும் தங்களைத் தேசியவாதிகளாக மறுபரிசீலனை செய்யும்போது, அவர்கள் சார்ந்திருக்கும் பெரும்பான்மை இனக் குழுவின் அடையாளமும் அவர்களின் மத அடையாளமும் தேசியத்துவத்தின் கூறுகளாக உருப்பெறுகின்றன. இது ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் பொருந்தும்.
ஐரோப்பியக் கண்டமானது கிறிஸ்துவ மதத்தினை பெரும்பான்மையாகக் கொண்ட சிறு சிறு இனக்குழுக்களால் ஆனது. அதாவது கிறிஸ்துவ ஃப்ரெஞ்ச்; கிறிஸ்துவ பிரிட்டன்; கிறிஸ்துவ இத்தாலி; கிறிஸ்துவ ஸ்பெயின்; கிறிஸ்துவ செக்; கிறிஸ்துவ போலந்து; கிறிஸ்துவ பல்கேரியா எனச் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே ஐரோப்பியர்களது மதச்சார்பின்மையானது, சமீபகாலம் வரை, கிறிஸ்துவ மதக் குழுக்குள்ளேயே இயங்கிவந்துள்ளது. அதாவது ஐரோப்பிய மதச்சார்பின்மை என்பது, கிறிஸ்துவ மதத்தை (church) அரசுக்கு (state) வெளியில் வைப்பது பற்றியது மட்டுமே ஆகும்.
பொருளாதார உலகமயமாக்கத்தின் பின்னரும், அதன் மூலமாக ஏற்பட்ட போக்குவரத்தின் காரணமாகவும் மற்ற மதத்தினரும் இனக்குழுக்களும் இப்போது ஐரோப்பாவில் கலக்க ஆரம்பித்துள்ளனர். இவ்வருகையானது கிறிஸ்துவ மதச்சார்பின்மையையும் வெள்ளை இனப் பெருமையையும் கேள்விக்குள்ளாயிருக்கிறது.
இதைப் புரிந்துகொள்ள டென்மார்க் தேசத்தின் குடிபுகல் கொள்கையைப் பார்க்கலாம். 2016ஆம் ஆண்டு டென்மார்க் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, டென்மார்க்கில் குடியுரிமை கோரும் அகதிகளின் உடைமைகளின் மதிப்பு 10,000 டேனிஷ் குரோனருக்கு (சற்றேறக்குறைய ஒரு லட்சம் ரூபாய்) அதிகமாக இருப்பின் அந்த உடைமைகளை அரசாங்கம் கைப்பற்றிக்கொள்ள அச்சட்டம் வழி செய்கிறது. ஜனநாயக நாட்டில் வழியற்று வரும் அகதிகளின் உடைமைகளைப் பறித்துக்கொள்வது மனித உரிமைக்கு எதிரான கொள்கை. இப்படிப்பட்ட சட்டத்தின் பின்னணியானது அகதிகளின் அடிப்படைச் சுயமரியாதையைக் களைந்து, கண்ணியத்தைப் பறித்து அவர்களை இரண்டாந்தரக் குடிகளாக உள்ளூர் வெள்ளை சமுதாயத்துக்கு அறிவிக்கும் முயற்சியே ஆகும். டென்மார்க் படித்த தேசம் (99%). மக்கள்நலக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் ஜனநாயக அரசாங்கம். ஆக, இப்படிப்பட்ட சட்டம் எப்படி சாத்தியமாயிற்று?
எல்லைகளின் மீதான அச்சம்.
சொந்த இனப் பெருமை.
மற்ற மதத்தின் மீதான சந்தேகம்.
அடிப்படையில், ஐரோப்பிய மறுமலர்ச்சி மதச்சார்பின்மை என்பது வெள்ளை இனக் கிறிஸ்துவ மதம் சார்ந்தது.
முஸ்லிம் மற்றும் வெள்ளையரல்லாத அகதிகளைத் தொடர்ந்து அனுமதித்தால், வெள்ளை ஐரோப்பா தனது அடையாளத்தினை இழந்துவிடும் என்ற பரப்புரை ஊடகத்தின் மூலம் மிக வலிமையாகத் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டுவருகிறது.
பெருவாரியான ஐரோப்பிய வெள்ளை மக்கள், தங்களது நாடுகளின் எல்லையைத் திறந்துவைக்கும் பட்சத்தில் அவர்களது இன அடையாளம், உணவு / மதப் பழக்கம் போன்ற அடிப்படைக் கூறுகள் பன்மைத்தன்மை அரசியலின் முன் விலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்துவருவது வலதுசாரிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபோகிறது. வலதுசாரிகளும், ஊடகங்களும் அதற்குத் தேவையான தீனிகளை ஐரோப்பியப் பொதுப்புத்திக்குத் தொடர்ந்து அளித்துவருகிறார்கள்.
ஒருபுறம் எல்லைகளே இல்லாத உலகமயமாக்கலை உருவோக்குவோம் என்று கூவும் மேற்கத்திய நாடுகளே, மறுபுறம் தங்கள் இன, மத, மொழி அடையாளங்களைப் பாதுகாத்துக்கொள்ள, எல்லைகளையும் சுவர்களையும் எழுப்பிய வண்ணம் உள்ளன.
ஊடகங்களின் வாயிலாக மிக நாசூக்காகப் பொது விவாதம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் என்ற வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால் கிறிஸ்துவ மதச்சார்பின்மையும் வெள்ளை இனப்பெருமையும் பரப்புரை செய்யப்படுகின்றன.
மனிதர்களின் நுழைவுகளை ஒதுக்கும் மேற்குலகம், வர்த்தகத்திற்கு மட்டும் எல்லை இல்லை என்று கூறுவதில் உள்ள அரசியலை வரும் வாரங்களில் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]
கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]
கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]