தமிழக காவல்துறை மத்திய அரசின் பிடியில் இருக்கிறது எனவும் வீசிய செருப்பின் மதிப்புதான் பாஜகவிற்கு என்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் நேற்று (ஆகஸ்ட் 15) 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 3,200 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய தேசிய கொடியை கையில் பிடித்து, காங்கிரசார் பாதயாத்திரையாக சென்று, சென்னை அண்ணா சாலை அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் , இந்த நிகழ்ச்சியில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ”இதுவரையில் நாம் தான் தேசிய கொடியை கையில் ஏந்தி பவனி வந்தோம். ஆனால் இப்போது நாட்டு மக்களை பிரிக்க நினைத்த தேசத்துரோகிகளும் மூவர்ணக்கொடியை கையில் ஏந்த ஆரம்பித்துவிட்டனர். நிதி அமைச்சரின் காரில் பாஜக வினர் செருப்பு வீசியதை பற்றி என்னிடம் கேட்டனர். ஒரு அமைச்சரை நோக்கி, ஒரு தேசிய கொடியை நோக்கி செருப்பை வீசியிருக்கிறீர்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு தைரியம் உங்களுக்கு என்று நான் கேட்கிறேன். வீசிய செருப்புக்கு இருக்கும் மரியாதை தான் இவர்களுக்கும் இருக்கிறது.
தமிழகத்தில் மதவாத சக்திகளை எதிர்த்து ஆக வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம்.
தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுந்தால் பாஜகவினர் பொசுங்கி விடுவார்கள். இப்போது காமராஜர் பிறந்த நாளை பாஜகவினர் கொண்டாடுகின்றனர்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்த போது டெல்லியில் அவர் தங்கி இருந்த இல்லத்தில் தீ வைத்தவர்கள் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக வினர். காமராஜர் பிறந்தநாளை கொண்டாட எந்த தகுதியும் இல்லாதவர்கள் இவர்கள் என்று கூறினார்.
மேலும், காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கிறார். ஆனால், ஒரு சில காவல் துறை அதிகாரிகள் அதை செயல்படுத்துவது இல்லை. தமிழக காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல் துறை போல சில நேரங்களில் செயல்படுகிறது. இதுபோல செயல்படும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்