“தமிழர்களிடம் செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” என தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ’தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் தான் காரணம்’ என்று கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனையடுத்து ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புப்படுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஷோபா மன்னிப்பு கோரினார்.
இதற்கிடையே தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மத்திய இணையமைச்சர் ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” என தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் விளக்கம் அளித்தார்.
அதற்கு பதில், மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய இணையமைச்சர் ஷோபா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, ”செய்தியாளர் சந்திப்பின் போது தமிழர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நிலையில் அதே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால் தான் சரியாக இருக்கும்” என கருத்து தெரிவித்தார்.
மேலும் வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ஷோபா மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆம்ஸ்ட்ராங் கொலை… அஸ்வத்தாமன் கைது! சதித் திட்டத்தின் முழுப் பின்னணி!
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் வலியுறுத்தல்!
Comments are closed.