அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூர், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு ஏலம் வழங்கியது. இதனை எதிர்த்து மதுரையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர்.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கனிம வளத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியையும் மதுரை கிராம மக்கள் நேற்று நேரில் சந்தித்து டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு இன்று மாலை அறிவித்தது. இதனை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
அதில், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்!
சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோகக் கூடாது” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.