சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாள் நேற்று (செப்டம்பர் 5) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்துக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, வ.உ.சிதம்பரனாரின் கடைசி மகனின் பேத்தி மரகத வள்ளி ரங்கநாதன், பேரன் சி.வி.சிதம்பரம் மற்றும் உறவினர்களை ஆர்.என்.ரவி கெளரவித்தார். அவர்கள் அனைவரோடும் இணைந்து ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் வ.உ.சி சிதம்பரனாரின் மூத்த கொள்ளுப்பேத்தியான செல்வியை (54) கெளரவிக்காமல், அவரை புறக்கணித்து ஆளுநர் பாரபட்சம் காட்டியுள்ளதாக வழக்கறிஞரும், செல்வியின் கணவருமான முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் மூத்த மகனான ஆறுமுகத்தின் பேத்தி செல்வி தற்போது கோவில்பட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் கடந்த 2ம் தேதி ஆளுநர் மாளிகையில் இருந்து வ.உ.சி வாரிசுகள் குறித்து விசாரித்துள்ளனர். ஆனாலும் செல்வி குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தொடர்ந்து பாஜகவில் இருக்கும் வ.உ.சிதம்பரனாரின் கடைசி மகனான வாலேஸ்வரன் பேத்தி மரகத வள்ளி ரங்கநாதன், பேரன் சி.வி.சிதம்பரம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வியின் கணவர் முருகானந்தம் ஆளுநர் மாளிகையை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ’இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் முடிவெடுக்கவில்லை. ஆளுநர் தான் இறுதி முடிவெடுத்துள்ளார். பாஜக மற்றும் விவேகானந்தா கேந்திரா அமைப்பு கொடுத்த பட்டியலின் அடிப்படையிலேயே வ.உ.சி வாரிசுகள் அழைக்கப்பட்டுள்ளனர்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செல்வி!
வ.உ.சிதம்பரனாரின் மூத்த கொள்ளுப்பேத்தியான செல்வி, தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரரும், தனது தாத்தாவுமான வ.உ.சி.யின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்தாண்டு குடியரசு தினத்தில் தமிழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து “மத்திய அரசின் இந்த முடிவு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், தமிழக மக்களின் உணர்வுகளை வேதனை அடையச் செய்துள்ளது.” என்று செல்வி தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
முன்னாள் முதல்வர்களும்; வ.உ.சி வாரிசுகளும்!
இதுகுறித்து முருகானந்தத்திடம் தொடர்பு கொண்டு பேசுகையில், ”வ.உ.சி.யின் 100-வது பிறந்த நாள் விழா 1972-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது.
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அழைத்து வந்து, வ.உ.சி.யின் சிலையைத் திறந்துவைத்துப் பெருமை சேர்த்தார். 1998ம் ஆண்டு கருணாநிதியால் வ.உ.சி எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனாருக்கு மணி மண்டபம் 2005ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போதெல்லாம் வ.உ.சி.யின் மூத்த கொள்ளுப்பேத்தியான செல்வி மற்றும் அவரது மற்ற வாரிசுகள் அனைவரும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
பாரபட்சம் காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
இந்நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த 151வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மரகத வள்ளி ரங்கநாதன், பேரன் சி.வி.சிதம்பரம் ஆகியோர் பாஜகவில் உறுப்பினராக உள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து மட்டுமே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆளுநர் அழைத்து கெளரவித்துள்ளார்.
வ.உ. சிதம்பரனாரின் மூத்த வாரிசுகள் என்ற முறையில் எங்களை தான் முதலில் அழைக்க வேண்டும். இது எங்களது உரிமை மட்டுமல்ல. அரசின் நடைமுறையும் அதுதான். ஆனால் நாங்கள் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கட்சி அடிப்படையில் ஆளுநர் பாரபட்சம் காட்டி எங்களை புறக்கணித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளை கெளரவிக்கும் விஷயத்திலும் ஆளுநர் அரசியல் செய்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.
கட்சி சார்பின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஆளுநரின் பாரபட்ச மிக்க ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக பிரதமரின் அலுவலகத்துக்கு முருகானந்தம் புகார் கொடுத்துள்ளார். இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடவும் தயார் என அவர் தெரிவித்துள்ளார்
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் 2024- தமிழில் உரையாற்றத் தயாராகும் ஆளுநர் ரவி