எடப்பாடி கொடுத்த டாஸ்க் : போட்டி போடும் அதிமுக மா.செ.க்கள்!

அரசியல்

ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கு ஆட்களை அழைத்து வருவதற்கு மாவட்ட செயலாளர்களுக்குள் போட்டியை ஏற்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்தவும், தங்களது பலத்தை காட்டவும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் தென்மாவட்டங்களில் ஒன்றான மதுரையில் மாநாட்டை நடத்த உள்ளார்.

அதன் ஒருபகுதியாக ஜூலை 5ஆம் தேதி மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டிய எடப்பாடி பழனிசாமி அடுத்த ஒரு மாதத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி மீண்டும் மா.செ.க்கள் கூட்டத்தை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடத்தினார்.
இந்த மாநாட்டுக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் முதல் அதிகபட்சம் 10 லட்சம் வரை ஆட்களை அழைத்து வர ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் என்ன நடந்தது?, மாநாட்டுக்காக மாவட்ட செயலாளர்களுக்கு என்னென்ன ஆலோசனைகளை எடப்பாடி வழங்கினார் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிலரிடம் நாம் கேட்டோம்.

அவர்கள் கூறும்போது, ”அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘உறுப்பினர் சேர்க்கைக்கு பலமுறை நேரம் கொடுத்தாச்சு இனி கூடுதலாக நாட்கள் ஒதுக்கீடு செய்ய முடியாது. ஆகஸ்ட் 17 தான் இறுதி தேதி. அதற்குள் உறுப்பினர்களை சேருங்கள்.

உறுப்பினர் சேர்க்கையின் போதே மதுரை மாநாட்டுக்கு அழைப்பு விடுங்கள். இதுகூடவே பூத் கமிட்டி வேலையையும் கவனிக்க தவறிவிடாதீர்கள்’ என்று ஆலோசனை வழங்கினார்.

மாநாட்டுக்கு ஆட்களை சேர்ப்பது பற்றி பேசிய அவர், ‘ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒன்றிய சேர்மன், நகர சேர்மன், மாவட்ட சேர்மன், கவுன்சிலர்கள் என சம்பாதித்தவர்களை செலவு செய்ய சொல்லி பொருளாதாரத்தில் பங்கெடுக்கச் சொல்லுங்கள்.

அடுத்தது நிச்சயம் நமது ஆட்சிதான் என்று அழைத்து வரப்படும் ஆட்களிடம் சொல்லுங்கள். நமது ஆட்சியில் பலன் பெற்றவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பாக பெண்கள், 100 நாள் வேலைக்கு செல்வோரிடம் கடந்த ஆட்சி எப்படி இருந்தது, இந்த திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என கேட்டு நமது ஆட்சியில் செய்த திட்டங்களை பற்றி சொல்லுங்கள்’ என ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் அழைத்து பேசினார்.

அதோடு ஒவ்வொருவரும் அவரவர் மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேரை அழைத்து வருவீர்கள். அதற்காக செலவுக்கு என்ன செய்வீர்கள். மதுரை மாநாட்டுக்கு எத்தனை வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை எவ்வளவு பேரை அழைத்திருக்கிறீர்கள் என்ற விவரங்களையும் கேட்டறிந்தார்.

அதுபோன்று சில மாவட்ட செயலாளர்களிடம், உங்கள் பக்கத்து மாவட்ட செயலாளர் அதிகமாக ஆட்களை அழைத்து வருவதாக சொல்கிறார், நீங்கள் குறைவாக அழைத்து வருவதாக சொல்றீங்களே எனவும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த மாவட்ட செயலாளர் ஒருவர், ‘அண்ணா நீங்கள் சொல்லும் அந்த மாவட்ட செயலாளரைவிட நான் அதிகமான கூட்டத்தை அழைத்து வருகிறேன். அந்த மாவட்ட செயலாளர் எவ்வளவு பேரை அழைத்துக்கொண்டு வருவதாக சொன்னார்’ என்று கேட்க,

அது ரகசியம் ஒருவர் சொன்னதை இன்னொருவரிடம் சொல்லமாட்டேன். மாநாட்டில் பார்க்கிறேன் உங்கள் கூட்டத்தையும், உங்களது பக்கத்து மாவட்ட செயலாளர் கூட்டிட்டு வரும் கூட்டத்தையும் என்றார் ஈபிஎஸ்.

மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வாகனம் புறப்பட்டதும் எத்தனை வாகனம், எவ்வளவு பேர் வருகின்றனர் என்ற கணக்கை தலைமைக்கு தெரிவிக்கவேண்டும்.

அதுபோன்று வன்னியர்கள் மற்றும் தலித்துகள் நிறைந்துள்ள வட மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்ட செயலாளரை அழைத்து கேட்டபோது, ‘என் மாவட்டத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு இரண்டாயிரம் பேர் என மூன்று தொகுதியிலும் ஆறாயிரம் பேரையும், அதற்காக வாகனங்களையும் ஏற்பாடு செய்திருக்கிறேன். செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் அந்த மாவட்ட செயலாளர்.

அதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஒவ்வொரு மா.செ.வையும் தனியாக அழைத்து ரகசியமாக பேசி மா.செ.க்களுக்குள் கூட்டத்தை அழைத்து வர போட்டியை உருவாக்கியிருக்கிறார். முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறார்” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சில மா.செ.க்கள்.

இந்நிலையில் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டுக்கு  எடப்பாடி சொன்னது போல் மற்றவர்களை விடவும் அதிக  நபர்களை அழைத்து வர மா.செ.க்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

வணங்காமுடி

HACT2023: ஜப்பானை சரித்து… இந்தியாவை தாண்டி… மலேசியா முதலிடம்!

மணிப்பூர் விவகாரம்: மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைப்பு!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “எடப்பாடி கொடுத்த டாஸ்க் : போட்டி போடும் அதிமுக மா.செ.க்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *