சட்டமன்றத்தில் ஆளுநரின் உரையை ஆளுநர் ரவி புறக்கணித்திருக்கும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். Minister Raghupathi reply about governor rn ravi
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் 2 நிமிடங்களிலேயே அதை புறக்கணித்தார்.
இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 12) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கேரள ஆளுநர் 2 வார்த்தை பேசிவிட்டு இறங்கி போய்விட்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நம்முடைய ஆளுநர் உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல், சொந்தமாக சில கருத்துகளை சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.
தேசிய கீதம் வாசிக்கவில்லை என்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் வாசிப்பதுதான் நமது மரபு. இதை கடந்த ஆண்டிலேயே சபாநாயகர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆளுநர்களின் செயல்கள் வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வண்ணம் உள்ளது. ஜனநாயகத்தை கொச்சைப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தனக்கு எழுதிக் கொடுத்த உரையில் எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம். இது உண்மைக்கு புறம்பாக இருக்கிறது, பொய்யாக இருக்கிறது என சொன்னால் அதற்கு நாம் விளக்கமளிக்கலாம்.
தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது என்று புள்ளிவிவரங்களோடு நாம் சொல்லும் போது, அதை ஏற்கிற சக்தி ஆளுநருக்கு இல்லை என்பதுதான் ஆளுநரின் செயல்பாடுகள் காட்டுகிறது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரகுபதி, “தேசிய கீதத்தை வாசிக்க வேண்டும் என்று சொல்லும் ஆளுநர், நமது சட்டப்பேரவை தலைவர் உரையை வாசித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தார். அவர் தமிழில் வாசித்தார். அவர் என்ன சொல்கிறார் என்று இவருக்கு தெரியாது.
ஆனால் வேறு எதோ பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு அவையில் இருந்து திடீரென வெளியேறிவிட்டார்.
இரண்டு நிமிடம் பொறுமையாக இருந்து தேசிய கீதத்தையும் மதித்து நின்று அதற்கு பிறகு உரிய மரியாதையோடு சென்றிருக்க வேண்டும். அவர் மரியாதையை அவரே இழக்கிறார்” என்றார்.
சபாநாயகர் சாவர்க்கர், கோட்சேவை குறிப்பிட்டு பேசியது பற்றிய கேள்விக்கு, “.சாவர்க்கர் கோட்சே ஆகியோருக்குதானே ஒன்றிய அரசு விழா கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அது சபாநாயகர் கருத்து. அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அவரே சொல்லிவிட்டார்.
எங்களை அசிங்கப்படுத்த நினைப்பவர்களை, மக்கள் அசிங்கப்படுத்துவார்கள்” என கூறினார்.
தெலங்கானா அரசு ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்றத்தை நடத்தியது போல இங்கும் நடத்த வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, “ஆளுநருக்கு மரியாதை கொடுத்து சட்டமன்ற கூட்டத்தொடரை தொடங்க வேண்டும். ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கையுள்ளவர்கள். எனவே ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்று முதல்வர் சொன்னார். நாம் நினைத்திருந்தால் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கியிருக்கலாம். ஆனால் நம் முதல்வர் ஜனநாயகத்துக்கு எதிரானவர் அல்ல.
ஆளுநர் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி போல் அல்லாமல், விளம்பரத்துக்கு முக்கியத் துவம் கொடுக்காமல் மக்களின் நலனுக்காக இந்த உரை தயாரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை பார்த்த பிறகு உச்ச நீதிமன்றம் என்ன முடிவுக்கு வரும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் மரியாதையோடு அழைத்தோம், அதை ஆளுநர் காப்பாற்றிக்கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிந்துகொள்ளும்.
உச்ச நீதிமன்றம் சமரசமாக செல்ல வேண்டும் என்று சொன்னது. முதல்வர் அதற்கு தயாராக இருந்தார். ஆளுநரை சென்று பார்த்தார். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்.
ஆளுநரோடு அனுசரித்து போக வேண்டும் என்றுதான் முதல்வர் நினைக்கிறார். ஆனால் ஆளுநர் அப்படி நினைக்கவில்லை” என கூறினார் அமைச்சர் ரகுபதி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழகத்தில் மழை : மக்களை குளிர்வித்த வானிலை மையம்!
Tennis : முதன்முறையாக டாப்-100ல் நுழைந்து இந்திய வீரர் சாதனை!
Minister Raghupathi reply about governor rn ravi