இரண்டு மாதங்களுக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 18) உத்தரவிட்டுள்ளது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யாமல், அரசிடம் இடைக்கால நிவாரணம் பெற விண்ணப்பிக்குமாறு சவுக்கு சங்கர் தாய்க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் ஏ.கமலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும். தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஏ.அமானுல்லா அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
இதற்கிடையே கடந்த 16ஆம் தேதி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவை தமிழ்நாடு காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
அதில் சென்னை போலீஸ் கமிஷனர் சவுக்கு சங்கருக்கு எதிராக கடந்த மே 12-ம் தேதி பிறப்பித்த தடுப்புக்காவல் ஆணையை உறுதிப்படுத்தி, அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாளிலிருந்து 12 மாத கால அளவிற்கு தடுப்புக்காவலில் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் ஆங்கில மொழியாக்க நகல் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், “ஏற்கனவே அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்தது அதை தவறாக பயன்படுத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டவர் என்றும், நீதிமன்ற அவதூறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் என்றும், தொடர்ச்சியாக இது போன்ற அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பதால் தான் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் தொடர்ந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இது சவுக்கு சங்கரின் உரிமை சார்ந்த விவகாரம், உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க அதிகாரம் இருக்கிறது . தமிழக அமைச்சரவையில் இருந்த ஒருவர் குறித்து பேசியதாக சவுக்கு சங்கருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த அமைச்சர் பதவி இழந்து தற்போது சிறையில் இருக்கிறார்” என வாதிட்டார்.
தொடர்ந்து 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கில் தற்போது சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் குண்டர் தடுப்புச்சட்டத்திற்கு எதிரான வழக்கில் உத்தரவிடும் வரை இந்த இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிராக பதியப்பட்ட வழக்கிற்கு மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற வழக்குகளுக்கு இந்த ஜாமீன் பொருந்தாது என்றும் நீதிபதிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையே சவுக்கு சங்கர் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
30 வயது பெண்ணாக இனி நடிக்கமாட்டேன்: நடிகை தபு