மாணவர்களின் போராட்டத்தை தடுக்க போலீசார் தவறிவிட்டதாக கூறி கேரள ஆளுநர் ஆரிப் கான் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தலையிட வைப்பதாகக் கேரள ஆளுநர் ஆரிப் கான் முகமதுக்கு எதிராக எஸ்எப்ஐ மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று (ஜனவரி 27) ஆளுநருக்கு எதிராக கொல்லம் நில்லமேலி பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் ஆரிப் கான் அவ்வழியே வந்தார்.
அங்கு மாணவர்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட ஆளுநர் தனது காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, மாணவர்களை நோக்கி முழக்கமிட்டவாறு சென்றார்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை உடனடியாக கைது செய்யச் சொல்லி அங்கிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அப்போது மாணவர்கள் ‘ஆளுநரே கோ பேக்’ என கோஷமிட்டு போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
இதனால் கோபமடைந்த ஆளுநர் தானும் சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
“மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை தடுக்க தவறிவிட்டது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, எப்.ஐ.ஆர்-ஐ காட்டுங்கள். அப்போதுதான் இங்கிருந்து நகருவேன். அதுவரை இடத்தை காலி செய்ய மாட்டேன்” என கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
முதல்வர் செல்லும் சாலையில் இதுபோன்று போராட்டத்துக்கு அனுமதிப்பீர்களா என கேள்வி எழுப்பிய ஆளுநரிடம், போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் கூறினர்.
போலீசாரின் பேச்சை ஏற்க மறுத்த ஆளுநர், நான் 50க்கும் மேற்பட்டவர்களைப் பார்த்தேன். வெறும் 12 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்து சதி வேலை செய்கிறீகளா. மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது மாநில காவல்துறை தலைமையிடம் இருந்து ஆளுநருக்கு போன் வந்தது. ‘உங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்’ என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இதையும் ஏற்க மறுத்த ஆளுநர், ‘நான் உங்களிடம் பேச விரும்பவில்லை. சாலையில் குண்டர்களை அனுமதிக்கமாட்டேன்’ என்று கூறி அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் ஜெகன்நாதனை சந்திக்கச் சென்ற போது அவருக்கு எதிராக மாணவர்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மாட்டிக்கொள்ளாமல் சூப்பர் மார்க்கெட்டில் திருடுவது எப்படி?… ரீல்ஸ் போட்டு சிக்கிய இளைஞர்கள்
சர்ச்சைகளுக்கு மையமாக ஆளுநர் இருப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி!