தேமுதிக என்ற கட்சியை 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் விஜயகாந்த். அதற்கு முன்பாக 2001 உள்ளாட்சித் தேர்தலிலேயே தனது ரசிகர் மன்றங்களை போட்டியிட வைத்தார். வட மாவட்டங்களில் விஜயகாந்த் மன்றத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
குறிப்பாக பாமக செல்வாக்கு பெற்ற இடங்களில் எல்லாம் விஜயகாந்த் அக்கட்சிக்கு கடும் சவாலாக இருந்தார். இதனால் விஜயகாந்தால் பாதிக்கப்படும் கட்சிகளில் திமுக, அதிமுக என்பதற்கு முன்னால் பாமகவே இருந்தது. அதனால் பாமக விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வந்தது.
இந்த நிலையில் கட்சி ஆரம்பித்த பிறகு 2006 இல் வந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட முடிவெடுத்தார் விஜயகாந்த் 232 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. அதில் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதை அறிய ஆர்வம் மேலிட்டது. தனது சொந்த மாவட்டமான மதுரையில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்… தனக்கு வட மாவட்டங்களில் பலம் அதிகமாக இருக்கிற அடிப்படையில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார் விஜயகாந்த்.
இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரையில் பிறந்த விஜயகாந்த் தனது முதல் தேர்தல் போட்டியில் வட மாவட்டத்தில், அதுவும் அப்போது பாமகவின் வசம் இருந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததுதான் பரபரப்புக்குக் காரணம்.
அப்போது விருத்தாசலம் தொகுதியில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் கோவிந்தசாமி இருந்தார். இவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உறவினரும் கூட. மீண்டும் இவரே பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
விஜயகாந்துக்குக்காக விருத்தாசலம் தொகுதியில் இருக்கும் தலித் இளைஞர்களும், வன்னிய சமுதாய இளைஞர்களும் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதை உணர்ந்து அதிர்ந்த டாக்டர் ராமதாஸ் விருத்தாசலம் என்பது பாமகவின் கோட்டை. இங்கே விஜயகாந்த் தோற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வியூகங்களை செய்தார்.
அதில் ஒன்றாக விஜயகாந்தை எதிர்த்து தேர்தல் பணியாற்றுவதற்காக சினிமா உலகத்தில் இருந்தே ஒரு குழுவை களமிறக்கினார்.
விஜயகாந்தை வீழ்த்துவதற்கான அந்த குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளர் தாகம் செங்குட்டுவன், இப்போது விஜயகாந்த் மறைந்துவிட்ட நிலையில் அந்த நிகழ்வுகளை நெருடலோடும் கண்ணீரோடும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
நம்மிடம் பேசிய தாகம் செங்குட்டுவன்,
” தே.மு.தி.க சந்தித்த முதல் தேர்தலில் விஜய்காந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அப்போது விருத்தாசலம் பா.ம.கவின் கோட்டை. தி.மு.க கூட்டணியில் பா.ம.க அத்தொகுதியில் போட்டியிட்டது. விஜய்காந்த்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் மருத்துவர் கோவிந்தசாமி. மருத்துவர் ராமதாஸ் அய்யாவின் நெருங்கிய உறவினர். அவர் ஏற்கனவே அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
முதல் தேர்தலிலேயே விஜய்காந்த் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க தீவிரமாக செயல்பட்டது.
தி.மு.கவுக்கு ஆதரவாக அன்று தமிழகம் முழுவதும் பரப்புரை செய்தவர் இன்றைய “நாம் தமிழர் கட்சி” ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விஜயகாந்தை விருத்தாசலம் தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் கவுதமன் தலைமையில் பரப்புரை குழு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பரப்புரை குழுவில் அண்ணன் சீமான், மறைந்த ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கவிஞர் அறிவுமதி, நான் உட்பட பலர் இடம்பெற்றோம். அண்ணன் சுபவீ தி.மு.க சார்பில் பரப்புரையில் கலந்துகொண்டார். பரப்புரை குழுவை இயக்குனர் அய்கோ தலைமையிலான கலைக்குழு வழி நடத்தி சென்றது. அதில் ஜெ, சசி போல் வேடமணிந்து இரண்டு பெண்கள் நடித்தனர்.
சுமார் ஒரு வார காலம் விருத்தாச்சலம் முழுவதும் விஜய்காந்த்திற்கு எதிராகப் பரப்புரை செய்தோம்.
சின்னக்கவுண்டர் படத்தில் சுகன்யா வயிற்றில் விஜய்காந்த் பம்பரம் விடுவது போல் ஒரு காட்சி வரும். அந்த புகைப்படத்தை பெரிதாக்கி விருத்தாசலம் முழுவதும் சுவரொட்டியாக ஒட்ட வேண்டும் என்ற அரியப்பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
“இந்த நடிகருக்கா ஓட்டு?” என்பது சுவரொட்டி தலைப்பு!
சின்னக்கவுண்டர் புகைப்படக்கலைஞரை தேடி அலைந்து அவரிடம் அசல் நெகட்டிவை கைப்பற்றினேன். வெற்றிக்களிப்பில் விருத்தாசலம் பறந்தேன்.
சீமான் உட்பட பரப்புரை குழு கடும் கோபத்தில் இருந்தது. காரணம் சிட்டிங் எம்.எல்.ஏ மருத்துவர் கோவிந்தசாமி கடைசி வரை பரப்புரைக்கு வரவே இல்லை. விஜய்காந்த்தை அவர் ஒரு போட்டியாளராகவே கருதவில்லை.
கோவிந்தசாமியின் தலைகனம் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக மாறும் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய்காந்த்துக்கு ஆதரவாக களம் மாறியது.
தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் இதை உணர்ந்த சீமான், தொலைபேசி மூலம் மருத்துவர் ராமதாஸிடம் நிலவரத்தை தெரிவித்தார்.
இனியும் விஜயகாந்தை தோற்கடிப்பது வீண் வேலை என்று எண்ணி நாங்கள் அனைவரும் பண்ருட்டி தொகுதிக்கு சென்று அண்ணன் வேல்முருகனுக்கு ஆதரவாக தீவிரப் பரப்புரை செய்தோம். பண்ருட்டி ராமச்சந்திரனை வீழ்த்தி அண்ணன் வேல்முருகன் வென்றார். விருத்தாசலத்தில் எதிர்பார்த்ததுப்போல் கேப்டன் வென்றார்.
விஜயகாந்தை வீழ்த்தும் குழுவில் அன்று நானும் பணியாற்றினேன். இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்த்தின் இறுதி மரியாதையை கண்ணீரோடு காண்கிறேன்” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் தாகம் செங்குட்டுவன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–ஆரா