வைஃபை ஆன் செய்ததும் பாமக பொதுக்குழு கூட்டம் பற்றிய போட்டோக்களும், வீடியோக்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பாமகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை எழும்பூரில் நடந்தது. மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து பாமக முடிவு செய்யப் போகிறது என்பதால் இது தொடர்பாக அக்கட்சிக்குள் மட்டுமல்ல, அரசியல் அரங்கிலும் எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தன.
அந்த வகையில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் சில சிக்னலை கொடுத்திருக்கிறது. கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திப்பது என்றும், கூட்டணி யாரோடு என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கொடுப்பது எனவும்… அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கொண்டு வந்த அரசியல் தீர்மானம் சொல்கிறது.
இதையடுத்து பாமக தலைவர் அன்புமணியும், நிறுவனர் டாக்டர் ராமதாஸும் பேசிய பேச்சுகள் பாமகவின் அரசியல் கூட்டணித் திசையை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
அன்புமணி பேசும்போது, ‘மத்திய அரசு சமீபத்தில் பாரத் ரத்னா விருதை வழங்கினார்கள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருது வழங்கினார்கள். இந்தியாவின் முதன்மை விருது பாரத் ரத்னா. அதை சமூக போராளி பிகாரின் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பிகாரின் முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கினார்கள். மிக்க மகிழ்ச்சி. அவர் அந்த விருதுக்கு தகுதியானவர். நிச்சயமாக அவருக்கு வழங்க வேண்டும். ஆனால் எனக்கு பெரிய வருத்தம்.
85 வயதில் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த, நம்முடைய மருத்துவர் அய்யாவுக்கு ஏன் வழங்கவில்லை என்ற வருத்தம்.
கர்பூரி தாகூர் முடிதிருத்துகிற சமுதாயத்தைச் சேர்ந்தவர். பிகாரில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். முதலமைச்சராக இருந்து அதிகாரத்தில் சாதனைகள் செய்வது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் சாதனை செய்வதுதான் உயர்ந்த சாதனை.
இந்தியாவில் 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்த ஒரே தலைவர் டாக்டர் அய்யாதான். தமிழ்நாட்டில் 4, இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தவர். அவருக்கல்லவா விருது அளித்திருக்க வேண்டும்?’ என்று மத்திய பாஜக அரசு மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தினார் அன்புமணி. தேமுதிக நிறுவனரான மறைந்த விஜயகாந்துக்கு பத்ம விருது வழங்கிய பிஜேபி, தனது தந்தை ராமதாஸை புறக்கணித்தது பற்றி ஏற்கனவே தனக்கு நெருக்கமான சில நண்பர்களிடம் கோபப்பட்டிருக்கிறார் அன்புமணி.
அதுமட்டுமல்ல மாநில ஆளுங்கட்சியான திமுகவையும் கடுமையாகத் தாக்கினார் அன்புமணி.
“ஐயா முதல்வரை சந்தித்து ஒரு மாதம் ஆச்சு? சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி உங்களைத் தேடி வந்து கோரிக்கை வைத்தார். இன்னும் எவ்வளவு காலம் ஐயாவை கெஞ்ச வைப்பீர்கள்? சமூக நீதி என்று சொல்லி வெற்று மாநாடு நடத்தி, வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,
முதலமைச்சர் சமீபத்தில் ஒரு மாநாட்டில் பேசினார். மகளிருக்கு மாதம் ஆயிரம் , பொங்கலுக்கு ஆயிரம், வெள்ள நிவாரணம் ஆறாயிரம் இதெல்லாம் திட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால் 108 ஆம்புலன்ஸ், தேசிய சுகாதாரத் திட்டம் போன்றவை எல்லாம் என்ன? சும்மா வசனம் பேசிக் கொண்டிருக்கும் ஆட்சி இந்த ஆட்சி’ என்று திமுகவையும் கடுமையாக தாக்கினார்.
எப்போதும் சகல கட்சிகளையும் தாக்கும் அன்புமணி, இம்முறை அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை.
ஒருபடி மேலே சென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, ‘அன்புமணி எனக்கு பாரத் ரத்னா விருது கொடுப்பதை பற்றி பேசினார். அப்படி கொடுத்தால் கூட நான் வாங்க மாட்டேன். குறைந்தது ஏழு இடங்களில் நாம் வென்றாக வேண்டும். கூட்டணி பற்றி நல்ல முடிவெடுப்பேன்’ என்று பேசினார்.
ஆக இந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அதிமுக அணியை நோக்கி பாமக நகர்வதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. ஜனவரி 31 டிஜிட்டல் திண்ணையில், ‘வேலுமணியின் மெகா டீல்… தனிமைப்படுத்தப்படும் அண்ணாமலை’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
பொங்கலுக்கு சில நாட்கள் கழித்து அதிமுகவின் தலைமை கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியது பற்றி அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் இன்றைய பாமக பொதுக் குழுவின் பாஜக மீதான ஆதங்கம், திமுக மீதான அட்டாக், அதிமுக மீதான அமைதி ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் வரும் மக்களவைத் தேர்தலில் குறைந்தது ஏழு தொகுதிகளோடு அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்பது மெல்ல மெல்ல தெளிவாகி வருகிறது” என்று மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : நீதிமன்றம் பாராட்டு!
300 யூனிட் இலவச மின்சாரம் : பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
பாமக டிராமா இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும்..