சனாதனமும், மூத்த அமைச்சரும்: இளைஞரணிக் கூட்டத்தில் உதயநிதி சொன்ன சீக்ரெட்!

Published On:

| By Aara

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 17) வேலூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.

திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் பலர் மாலை வேளையில் வேலூரை அடையும் வகையில் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டனர். ஆனால் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் மட்டும் வேலூருக்கு முதல் நாள் இரவே வந்து குவிந்துவிட்டனர்.

வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்… அதற்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து காணொளி வாயிலாக நடத்தி வருகிறார் உதயநிதி. அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களின் நேரடி ஆலோசனைக் கூட்டத்துக்காக அவர் திட்டமிட்ட நிலையில் தொடர் பயணம் காரணமாக அந்த நிகழ்ச்சி தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.
இந்த நிலையில் முப்பெரும் விழா அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 17 மாலையில்தான் முப்பெரும் விழா நடக்கிறது. அன்று காலை வேலூரிலேயே மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதை அறிவித்தார் உதயநிதி.

இதற்கிடையே… செப்டம்பர் 16 ஆம் தேதி கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் மகன்  பிரபாகரன் – இரா.இந்துஜா இணையரின் திருமண விழாவில் கலந்துகொள்ள ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தேதி கொடுத்திருந்தார். ஆனால் அதன் பின் முப்பெரும் விழா வேலூரில் அறிவிக்கப்பட்டதால் முதல்வரால் 16 ஆம் தேதி கோவை செல்ல இயலவில்லை. மாசெ இல்ல திருமணம் என்பதால் முதல்வருக்கு பதில் அமைச்சர் உதயநிதி வரவேற்பு நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூரில்  16 ஆம் தேதி மாலை கலந்துகொண்டார்.  அவரோடு  நீலகிரி எம்பி ஆ.ராசா, அமைச்சர் முத்துசாமி, அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கே சென்றதும் மேலும் சில திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

மறுநாள் வேலூர் முப்பெரும் விழா, காலை இளைஞரணி அமைப்பாளர் கூட்டம் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டியிருந்த நிலையில் கோவையில் இருந்து உதயநிதி புறப்படவே தாமதமாகிவிட்டது. எனவே அங்கிருந்து காரில் புறப்பட்டு நள்ளிரவு சேலம் வந்து தங்கினார் உதயநிதி.  செப்டம்பர் 17 ஆம் தேதி காலை  சீக்கிரமே சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரோடு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியும் அப்போது இருந்தார்.


அதன் பின் சேலத்தில் இருந்து அவசரமாக புறப்பட்டு வேலூருக்கு விரைந்தார். காலை 11 மணிக்கு  அனுகூலா ஹோட்டலை அடைந்து நேரடியாக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடக்கும் அரங்குக்கு சென்றார் உதயநிதி. அதன் பின் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் பின் கூட்டம் தொடங்கியது.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இளைஞர் அணிக்கு என கொடுக்கப்பட்ட டாஸ்க் குகளான தொகுதி தோறும் கலைஞர் நூலகம், மாரத்தான் போட்டிகள், பேச்சு போட்டிகள் நடத்துவது பற்றி விரிவாக ஆலோசித்தார் உதயநிதி. ஒவ்வொரு துணைச் செயலாளரிடமும் அவரவர் பொறுப்பு வகிக்கும் மண்டலத்தில் எத்தனை கலைஞர்  நூலகம்  அமைக்கப்பட்டுள்ளது என்று விசாரித்தார். அமைக்கப்பட்ட கலைஞர் நூலகங்கள் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அமைந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அதன் பின் மாரத்தான், பேச்சு போட்டி பற்றியும் விரிவாக ஆய்வு செய்தார்.

அதன் பிறகு இளைஞரணி மாநில மாநாட்டு ஏற்பாடுகளை பற்றி கலந்துரையாடினார். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டிஷர்ட்டுகளுக்கு உரிய நபர்கள், அவர்களின் உடை அளவு, முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் உதயநிதி. அந்த விவரங்கள் எல்லா மாவட்ட இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களிடம் இருந்தும் வந்துவிட்டதா என்பதை செக் செய்தார்.

இதையடுத்து  மாநில துணைச் செயலாளர்கள், சில மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை பேசச் சொன்னார் உதயநிதி. அந்த வரிசையில் வேலூருக்கு அடுத்து இருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான ஆற்காடு ஈஸ்வரப்பன் பேசினார்.

“இளைஞரணிச் செயலாளரிடம் உழைப்பைத் தவிர வேறு எந்த சிபாரிசும் செல்லாது. உங்கள் உழைப்பு மட்டும்தான் அவரிடம் செல்லுபடியாகக் கூடிய ஒரே சிபாரிசு. இதற்கு உங்கள் கண்முன் நிற்கும் எடுத்துக் காட்டு நான் தான். நான் 2016 இல் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றினேன். எனக்கு மக்கள் பெரும் ஆதரவும் அளித்தனர். ஆனால் சில காரணங்களால் 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்து ஒதுங்கிவிட்டேன்.

எனது உழைப்பை பல்வேறு கட்ட சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட இளைஞரணிச் செயலாளர் என்னை கூப்பிட்டு, ‘ஏன் போட்டியிடவில்லை?’ என்று கேட்டார். நான் சில காரணங்களைச் சொன்னேன். ஆனால், ‘உங்களைப் போன்றவர்கள்தான் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும்’ என்று சொல்லி கடைசி நேரத்தில் என்னிடம் விருப்ப மனு பெற்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய வைத்து வெற்றி பெறவும் வைத்தார். உழைப்பவர்களை கைவிடமாட்டார் உதயநிதி” என்று பேச அரங்கமே அதிர்ந்தது.

தொடர்ந்த ஈஸ்வரப்பன், “நான் இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்த நிலையில் திடீரென எனக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியில் மாநில துணைச் செயலாளர் என்ற பதவி அறிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதிதான் என்னை மீண்டும் இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக நியமித்தார். பிற அணிகளில் மாநிலப் பொறுப்பில் இருப்பதை விட இளைஞரணியில் மாவட்டப் பொறுப்பில் இருப்பதே சிறப்பு. இப்படி கட்சி அளவிலும் சரி, தேர்தல் போட்டி என்ற அளவிலும் சரி உழைப்பவர்களை ஒருபோதும் உதயநிதி கைவிட மாட்டார். உங்கள் எல்லாருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு” என்று பேசி அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களையும் உற்சாகப்படுத்திவிட்டார் ஈஸ்வரப்பன்.

ராணிப்பேட்டை இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக தனது மகனை கொண்டுவருவதற்காக அமைச்சர் காந்தி தீவிர முயற்சி எடுத்தும் அதை உதயநிதி ஏற்கவில்லை என்பதை மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத் தக்கது.

நிறைவாக பேசிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, “கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இளைஞரணிக்கு கொடுக்கப்பட்ட இலக்குகள், சேலம் மாநாடு ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். உங்கள் மீது எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது.

சமீபத்தில் நான் சனாதனம் பற்றி பேசிய பேச்சு இந்திய அளவில் எப்படி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்கெல்லாம் தெரியும். ஆந்திராவில் எனக்கு பாலாபிஷேகம் நடத்துகிறார்கள் என்று இங்கே கூறினார்கள். என் தலைக்கு பாலாபிஷேகமும் நடத்துறாங்க. அங்க என் தலைக்கு விலையும் வைக்கிறாங்க.

இன்னிக்கு பெரியார் பிறந்தநாள். சனாதன எதிர்ப்பில் எந்தவித சமரசத்துக்கும் இல்லை. ஆனால் இதை நம் எதிரிகள் ஆயுதமாக ஏந்தவும் நாம் அனுமதிக்க கூடாது. பிரதமர் மோடி வரை நமக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் பெரிய வலை விரிக்கிறார்கள். நாம் அதில் விழுந்துவிடக் கூடாது.

சனாதனம் பற்றி நான் பேசிய பேச்சு பெரிதாக பேசப்பட்ட நேரத்துல ஒரு மூத்த அமைச்சர் பெயர் வேணாம்னு நினைக்கிறேன். என்னைக் கூப்பிட்டு, ‘என்ன தம்பி சனாதனம்னு பேசிக்கிட்டிருக்கீங்க. இந்தியா முழுக்க பேசறாங்க. எனக்கு பயமா இருக்கு…’ என சொன்னார். நான் அவர்கிட்ட, ‘அண்ணே சமீபத்துல நடந்த புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுல குடியரசுத் தலைவர் முர்முவை ஏன் திறந்து வைக்க அனுமதிக்கலைனு தெரியுமா? அவங்களை கைம்பெண் என்பதால் அனுமதிக்கலை. இதுதான் சனாதனம். இதை சொல்றதுக்கு நாம ஏன் பயப்படணும்?’னு கேட்டேன். நாம சனாதன எதிர்ப்புல எந்த பின் வாங்கலும் இல்லை. ஆனா அதேநேரம் மோடியோட வலையிலும் நாம சிக்கிடக் கூடாது” என்று பேசி முடித்தார் உதயநிதி.

வேந்தன்

33% பெண் வாக்காளர்களை குறிவைக்கும் மோடி

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு எதிராக சதுர்த்தியில் எடப்பாடி நடத்திய சதுரங்க வேட்டை! -முழுமையான பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel