புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளம் இல்லை என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாளை மறுநாள் (மே 28) திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திறப்பு விழாவையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், நாடு சுதந்திரம் அடைந்த போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய செங்கோல் வைக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோலை தமிழகத்தை சேர்ந்த ஆதினம் வழங்க, அதனை மோடி பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் வைக்க உள்ளார்.
ஆதாரங்கள் எதுவும் இல்லை
இந்நிலையில், நேருவிற்கு செங்கோல் மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டது என்றும், செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளம் இல்லை என்றும் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அப்போதைய மதராஸ் மாகாணத்தில் ஒரு மத ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட கம்பீரமான செங்கோல் 1947 ஆம் ஆண்டு நேருவுக்கு வழங்கப்பட்டது உண்மைதான்.
மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் நேரு ஆகியோர் இந்த செங்கோலை பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவிற்கு மாற்றியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதற்கான உரிமைகோரல்கள் அனைத்தும் போலியானவை.
இது முழுக்க முழுக்க ஒரு சிலரின் மனதில் உற்பத்தியாகி, வாட்ஸ் அப்பில் பரவி தற்போது ஊடகங்கள் மூலம் தம்பட்டம் அடிப்பவர்களின் கைகளில் சென்றுள்ளது.
பொய்யான வாதத்தை முன்வைக்கின்றனர்
இந்த செங்கோல் பின்னர் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அந்த செங்கோலை தான் தமிழ்நாட்டில் கால்பதிக்க வேண்டும் என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்காக இப்போது பிரதமரும் அவருக்கு ஆதரவாளர்களும் பயன்படுத்துகின்றனர். அதற்காக செங்கோல் விவகாரத்தில் தங்களது பொய்யான வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் உண்மையான கேள்வி செங்கோல் குறித்து அல்ல. மாறாக புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை ஏன் அனுமதிக்கவில்லை?” என்பது தான்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செங்கோல் – வாக்கிங் ஸ்டிக்?
ஜெய்ராம் ரமேஷின் இந்த அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “காங்கிரஸ் இப்போது மற்றொரு வெட்கக்கேடான அவமானத்தை செய்துள்ளது. திருவாவடுதுறை ஆதினம், ஒரு புனித சைவ மடம் இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவம் குறித்துப் பேசியது. காங்கிரஸ் ஆதினத்தின் வரலாற்றை போலி என்கிறது. காங்கிரஸ் அவர்களது நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இவ்வளவு வெறுக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டின் புனித சைவ மடத்தால் நேருவிற்கு ஒரு புனிதமான செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால் அது ஒரு வாக்கிங் ஸ்டிக் ஆக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பாமக பங்கேற்கும்: அன்புமணி
‘எனது வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெறவில்லை’: செந்தில் பாலாஜி விளக்கம்!
