நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் ஒரு பரிசாகத்தான் செங்கோல் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர அதிகார மாற்றத்தின் அடையாளமாக கொடுக்கப்படவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழக ஆதீனங்கள் அழைக்கப்பட்டது, செங்கோல் நிறுவப்பட்டது என அனைத்தும் பேசு பொருளானது. இது தமிழகத்தை குறிவைத்து பாஜகவால் நகர்த்தப்படும் அரசியல் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று (மே 31) சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தேசிய சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளருமான என்.ராம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
என்.ராம் பேசுகையில், “செங்கோலை பற்றி பல கட்டுக்கதைகள் வந்துள்ளன. இதன் உண்மைத் தன்மை தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மைகள் என்னவென்று தெரிய வேண்டும். அரசு இணையதளத்தில் ஒரு வீடியோ இருக்கிறது. அதை இங்கு காட்ட வேண்டியதில்லை. நடிகர்களை வைத்து அதை எடுத்திருக்கிறார்கள்.
நேரு பிரதமராகும் போது ஏதேனும் விழா நடத்தப்படவிருக்கிறதா என்று மவுன்ட்பேட்டன் நேருவிடம் கேட்டதாக சொல்கிறார்கள். இதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது.
மவுன்ட் பேட்டன் பற்றி பல புத்தகங்கள் வந்திருக்கிறது. அவரை பற்றி பலர் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். மவுன்ட்பேட்டன் இருந்தபோது இந்தியா குடியரசாக ஆகவில்லை.
1968ஆம் ஆண்டு டிரினிட்டி கல்லூரியில் “அதிகார மாற்றம் மற்றும் ஜவஹர்லால் நேரு” என்ற தலைப்பில் மவுன்ட்பேட்டன் சொற்பொழிவு ஆற்றினார்.
அந்த உரையில், நேருவிடம் பதவி ஏற்பு விழா பற்றி எதுவும் கேட்டது போல் பேசவில்லை. ஜின்னாவை கொல்ல நடந்த சதி உள்ளிட்டவை பற்றி பேசுகிறார். எனவே மவுன்ட்பேட்டன் நேருவிடம் கேட்டதாக இவர்கள் சொல்வது கட்டுக்கதை.
மவுன்ட்பேட்டன் பதவி ஏற்பு விழா பற்றி நேருவிடம் கேட்கும்போது நேருவால் உடனடியாக பதில் சொல்ல முடியாமல் அவர் ராஜாஜியை கேட்டார் என்றும், இதற்காக ராஜாஜி பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். இதற்கு ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. சோழர்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். எனவே இவர்கள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை.
மவுன்ட்பேட்டன் பற்றிய நிகழ்ச்சி திட்ட அறிக்கை ஒன்று இருக்கிறது. அதன்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 8 மணிக்கு மவுன்ட்பேட்டன் கராச்சி வந்து, அங்கிருந்து அதிகார மாற்றம் குறித்த கோப்புகளை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு மாலை 7 மணிக்கு விமானத்தில் வந்து சேர்வார் என்று அன்றைய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அப்படி அல்லாமல் ஆகஸ்ட் 13ஆம் தேதியே கராச்சி வந்துவிட்டார். ஆதினங்களை மவுன்ட்பேட்டன் சந்திக்கவில்லை.
ஆதினங்களுக்கு சிறப்பு விமானம் ஒன்று ஏற்பாடு செய்தார்கள் என்று சொல்கிறார்கள், இதுவும் முழுக்க முழுக்க கட்டுக்கதை. தி இந்து பத்திரிகைக்கு ஆதினங்கள் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதில் நேருவுக்கு செங்கோல் கொடுப்பதாக 3 புகைப்படங்கள் இருக்கிறது.
இவர்கள் விமானத்தில் செல்லவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்றிருக்கின்றனர். குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், ராமலிங்கம் பிள்ளை, சுப்பையா பாரதியார், ஆதீனம் வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை உள்ளிட்டோர் சென்றதாக இந்துவில் செய்தி வந்திருக்கிறது.
செங்கோலை மவுன்ட்பேட்டனிடம் கொடுத்து அதை அவர் நேருவிடம் கொடுக்க சொன்னதாக சொல்வது அனைத்தும் கட்டுக்கதை. ராஜாஜிக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
ஆதினங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு பெரிய லாபம் எல்லாம் கிடைக்கப்போவதில்லை. பிரதமர் மோடி செங்கோல் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார். இந்த செங்கோல் உம்மிடியார் செய்த செங்கோல். அப்படிப் பார்த்தால் உம்மியாடியாரை வணங்கியதுபோல்தான் அர்த்தமாகும்.
அலகாபாத் மியூசியத்தில் கோல்டன் ஸ்டிக் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. நேருவுக்கு அன்று பல பரிசுகள் வந்திருக்கிறது. அப்படிதான் வெள்ளியில் தங்க முலாம் பூசிய செங்கோலும் வழங்கப்பட்டிருக்கிறது. பரிசு பொருள் என்பதால் தான் அவர் மியூசியத்தில் வைக்க சொல்லிவிட்டார்.
அதிகார மாற்றம் என்பது ஒரு அதிகாரப்பூர்வமான விழா. அன்றைக்கு எந்த பேப்பரிலும் ராஜாஜி பேரோ, ராஜேந்திர பிரசாத் பேரோ இல்லை. ராஜேந்திர பிரசாத் வீட்டில் ஒரு விழா நடந்திருக்கிறது. அங்கு நேருவும் சென்றிருக்கிறார். வயதான ஒரு அம்மா திலகம் போட்டிருக்கிறார். அதற்கான டிஸ்கிரிப்ஷன் இருக்கிறது.
எந்த பத்திரிகைகளிலும் அதிகார மாற்றத்துக்காகத்தான் செங்கோல் வழங்கப்பட்டது என்று வரவில்லை. நேருவின் வீட்டில் வைத்து செங்கோல் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று விளக்கிக் கூறினார் என்.ராம்.
பிரியா
“தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” – அமெரிக்காவில் ராகுல்
”விசாரணை முடியும் வரை காத்திருங்கள்” : மத்திய அமைச்சர் பேட்டி!