கன்னட எழுத்தாளர் தேவநூர் மகாதேவாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 12) ‘வைக்கம் விருது’ வழங்கி கெளரவித்தார்.
கேரளாவில் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற கோயில் நுழைவு போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பெரியார் நினைவகம் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது விழா மேடையில் இந்தாண்டுக்கான வைக்கம் வீரர் விருது கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த பிரபல எழுத்தாளர் தேவநூர் மகாதேவாவிற்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கெளரவித்தார்.
விருதுடன் ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.

எல்லைகடந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமைகளுக்கு வைக்கம் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் கையால் முதல் ’வைக்கம் விருது’ பெற்றுள்ள தேவநூர மகாதேவா யார்? அவரது பின்னணி என்ன? அவர் யாருக்காக போராடினார்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
யார் இந்த தேவநூர மஹாதேவா?
1948 ஆம் ஆண்டு கர்நாடகாவின் தேவநூர் கிராமத்தில் பிறந்தவர் தேவநூர் மகாதேவா, விளிம்புநிலை சமூகங்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான பணியில் தனது 76 வயதிலும் உறுதியாக இருக்கிறார்.
மகாதேவாவின் ஆரம்பகால படைப்புகளான ‘ஒடலாலா’ (1978) மற்றும் ‘குசுமபாலே’ (1988) போன்றவை தலித் வாழ்க்கையின் சிக்கல்களையும், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினையும் அவை உள்ளபடியே ரத்தமும், சதையுமாக எதிரொலித்தன.
அவரது இலக்கியப் படைப்பு தலித் சமூகத்தினருக்கு எதிரான சாதி ஆதிக்கம் மற்றும் அவர்களின் எதிர்ப்பையும் நுணுக்கமாக பிரதிபலிக்கிறது.
‘ஒடலாலா’வில், ஒரு தலித் குடும்பத்தின் அன்றாடப் போராட்டங்கள், பசி, வறுமைக்கு இடையே ஒளிர்விடும் அவர்களின் கண்ணியம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை தெளிவாக விவரிக்கிறார் மகாதேவா.
தொடர்ந்து 1988ஆம் ஆண்டு வெளியான ‘குசுமபாலே’ அவரது மகத்தான படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது. இந்த புத்தகம் வெளிவந்தபோது, அது நவீன கன்னட இலக்கியத்தில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. குசுமபாலே நூல் 1990ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதையும் வென்றுள்ளது.
அவரது எழுத்து வாய்வழி மரபு கதைகளின் வழியே சாதிய படிநிலைகளின் வரலாற்று பரிமாணங்களை நாவல்களாக்கி இன்றும் அதன் ஆழத்தையும், வலியையும் படிப்பவருக்குள் கடத்துகிறது.

தீவிர இந்து குழுக்களின் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் கர்நாடகா இலக்கியவாதிகளில் ஒருவர் மகாதேவா. 2022 ஆம் ஆண்டில் மகாதேவா, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) 72 பக்க விமர்சன நூலான ‘ஆர்எஸ்எஸ்–ஆழ மட்டு அகல’ (ஆர்எஸ்எஸ் – தி டெப்த் அண்ட் பிரட்த்) வெளியிட்டார்.
மதமாற்றத் தடைச் சட்டங்கள், ஜாதிப் படிநிலைகள், அதன் ஆதிக்கம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது. இந்திய முற்போக்கு இலக்கியவாதிகளாலும், இந்திய எதிர்க்கட்சியினர் வட்டத்தாலும் கொண்டாடப்பட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது, மராத்தி, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த புத்தகம் இதுவரை பல லட்சம் பிரதிகள் விற்றது.
விளிம்பு நிலை மக்களுக்கான போராளி!
இலக்கிய விமர்சகர்கள் மகாதேவாவின் படைப்புகளை அதன் கலாச்சார ஆழம் மற்றும் புதுமையான வடிவம், நவீன கன்னட இலக்கியத்தில் அதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு நைஜீரிய நாடக ஆசிரியர், கவிஞர் மற்றும் அரசியல் ஆர்வலர் வோல் சோயின்காவுடன் ஒப்பிட்டு விவரிக்கின்றனர்.
புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் ஜி எஸ் அமுர், மகாதேவாவின் எழுத்தாற்றலை விவரிக்கையில், “இருளில் உருகும் ஒரு சமூகத்தை அப்படியே படம்பிடித்து, பெரிய சமூகப் பிரச்சினைகளுக்குள் கட்டமைக்கிறார். மகாதேவாவின் எழுத்து தலித் வாழ்க்கைச் சூழலை ஆவணப்படுத்துவது மட்டுமின்றி, பூர்வீகக் கதை வடிவங்கள் மூலம் சாதிய படிநிலைகளை பாமரருக்கும் புரியும்படி உள்ளது” என தெரிவிக்கிறார்.
தேவநூர் மகாதேவாவின் வாழ்வியல் அவரது இலக்கிய பாதையில் இருந்து பிரிக்க முடியாதது. தலித் சங்கர்ஷா சமிதியின் (டிஎஸ்எஸ்) நிறுவன உறுப்பினராக, அவர் கர்நாடகாவில் விளிம்புநிலை சமூகங்களை அணிதிரட்டி, நில உரிமைகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடினார்.

அவரது தனது கொள்கை வழிகாட்டிகளாக சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தியை கொண்டிருக்கின்றார். அவர்களின் தத்துவங்களை மக்களுக்கான நீதி போராட்டத்தில் முக்கிய சக்திகளாக விதைத்து வருகிறார்.
அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவரான மகாதேவா எதையும் நேரிடையாக விமர்சிக்கும் வழக்கம் கொண்டவர். 2018ஆம் ஆண்டு தனது சொந்த கட்சி குறித்து அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “இந்திய கம்யூனிசம் அதன் தேக்கநிலையை விமர்சித்து, உள்ளூர் எதார்த்தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியது அவசியம். கம்யூனிஸ்டுகள் தான் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும், “அம்பேத்கர் எந்த அளவுக்கு மிதிக்கப்படுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் மக்கள் மனதில் துளிர்விட்டார். இன்று அனைவரும் அம்பேத்கரை குறிப்பிட்ட சாதியைக் கடந்து இந்தியாவின் மகத்தான ஆளுமையாக பார்க்க விரும்புகின்றனர். அதேவேளையில் அம்பேத்கரை சங்பரிவார் கொண்டாடுவது யாருக்கும் நல்லதல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.
விருதுகளுக்கு மறுப்பு!
இலக்கிய உலகிலும், சமூகத்திலும் தலித் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் புரட்சிகரமாக எழுத்தாளராகவே தேவநூர மகாதேவா பார்க்கப்படுகிறார்.
அவர் எழுத்துகள் சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய அதேநேரத்தில், தனது எதிர்ப்பை காட்டும் விதமாக தனக்கு அளிக்கப்பட்ட பல்வேறு விருதுளை அதிரடியாக மறுத்ததும் இன்றளவும் பேசப்படுகிறது.
அவரது இலக்கிய சேவையை பாராட்டி, 1990 ஆம் ஆண்டில், அவரை ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கும் அரசாங்கத்தின் வாய்ப்பை அவர் முதன்முதலாக நிராகரித்தார்.

தொடர்ந்து 2010 ஆம் ஆண்டில் அவர் கர்நாடக மாநில அரசால் வழங்கப்பட்ட 5,01,000 பணமதிப்புமிக்க நிருபதுங்கா விருதை நிராகரித்தார். அது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கன்னடத்தை பயிலும் மொழியாக மாற்றாததற்கு அரசாங்கத்திற்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக அவ்வாறு செய்தார்.
இதுகுறித்து சாகித்ய பரிஷத் தலைவருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கன்னடம், கல்வி கற்கும் இடங்களில் முற்றிலும் புறக்கணிக்கப்படும் போது, பரிஷத் வழங்கும் விருதை ஏற்பது விவேகமான செயல் அல்ல. மேலும், தனது சொந்த மாநிலத்தில் கன்னடம் போராடுகிறது. அதன் பெயரில் நாங்கள் அமைதியாக இருந்து விருதுகளை ஏற்க முடியாது” என தெரிவித்தார்.
சாகித்ய அகாடமி அவரது படைப்புகளுக்காக பெல்லோஷிப் மற்றும் மாதம் 25,000 வழங்க முன்வந்த போது, இரண்டையும் ஏற்க மறுத்தார்.
அவர் எழுதிய எடேகே பித்த அக்ஷரா நூலுக்காக மைசூர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அப்பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் கே.எஸ்.ரங்கப்பா அறிவித்தபோது அதனை ஏற்க மறுத்தார்.
அதேவேளையில், தனக்கு பதிலாக தனது இன மக்களுக்காக பணியாற்றி வந்த ராகி லக்ஷ்மணய்யாவுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரையை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது, அதைப் பெற மகாதேவா டெல்லிக்குச் செல்லவில்லை. எனினும் அவர் வீட்டுக்கே விருது வந்து சேர்ந்தது.
எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி ஒரு முஸ்லீம் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்தது.
இதனையடுத்து நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற சூழலை சுட்டிக்காட்டி பத்ம ஸ்ரீ விருதையும், சாகித்ய அகாடமி விருதையும் 2015ஆம் ஆண்டு முதல் ஆளாக திருப்பி அளித்தார்.
அப்போது அவர், “இந்த விருதுகளை திருப்பி அளிப்பது ஒரு அடையாளம் மட்டுமே, ஏனெனில் இந்த விருதுகளில் இருந்து தான் அனுபவித்த மறைமுக பலன்களை நான் திருப்பித் தர முடியாது என்றும், அதற்காக வருந்துகிறேன்,
நாட்டில் நிலவும் இந்த சகிப்புத்தன்மையற்ற நிலையில், சில எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக நிற்பதை கண்டு நான் வெறுப்படைகிறேன்” என மகாதேவா கூறியிருந்தார்.
சமத்துவ சமுதாயத்தின் கருவி – ஸ்டாலின்
இந்த நிலையில் தான் பெரியாரின் நினைவாக வழங்கப்படும் வைக்கம் விருதை முதல் ஆளுமையாக பெற்றுள்ளார் தேவநூர மகாதேவா.
அவர் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பின்பற்றுபவன் என்ற முறையில், புகழ்பெற்ற இலக்கியச் சின்னமும், சமூக நீதிக்காக அயராது வாதிடும் தேவநூர் மகாதேவாவுக்கு “வைக்கம் விருதை” வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். சமத்துவமின்மைகளை எதிர்கொள்வதற்கும் சமத்துவ சமுதாயத்தை முன்னெடுப்பதற்கும் அவரது படைப்புகள் கருவியாக உள்ளன.
தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிரான வரலாற்று இயக்கத்தை முன்னின்று நடத்தியதால், வைக்கமில் இந்த விருதை வழங்குவது ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது.
சமூக சமத்துவம் மற்றும் நீதிக்காக தேவனூர் மகாதேவாவின் பணி நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பூண்டி ஏரியில் நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
சென்னையில் விட்டு விட்டு கனமழை : 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!