சமீபத்திய மழை வெள்ளத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டம். இன்னமும் கூட பாதிப்பில் இருந்து 100% விடுபடவில்லை.
தூத்துக்குடி திமுக எம்.பி.யான துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுதி முழுதும் நிவாரணப் பணிகளை இன்னமும் மேற்கொண்டு வருகிறார். உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களும் இங்கே நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.
இதற்கிடையே தூத்துக்குடி மாநகரத்தில் நேற்று (ஜனவரி 9) திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆயிரத்து முந்நூறு ஆட்டோ ஒட்டுனர்களுக்கு நிவாரணம் அடங்கிய பொங்கல் தொகுப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளருமான ஜோயல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொருட்களை வழங்கினார்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கான பேண்ட், சட்டை முதல் சமையல் எண்ணெய், சீனி, டீ தூள் வரை 13 பொருட்கள் இடம்பெற்றுள்ள இந்த தொகுப்பு ஆட்டோ ஒட்டுநர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இளைஞரணி சார்பிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தது. ஆனால் வேறு சில காரணங்களுக்காக உதயநிதி நற்பணி மன்றத்தின் காரணமாக மாற்றப்பட்டது என்கிறார்கள் தூத்துக்குடி திமுக வட்டாரத்தில்.
என்ன ஏதென விசாரித்தபோது, “தூத்துக்குடி மாநகரத்தை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளராக இருக்கிறார் அமைச்சர் கீதாஜீவன். ஏற்கனவே கனிமொழி எம்பி தூத்துக்குடியில் வலிமையான அரசியல் அதிகார மையமாக இருக்கும் நிலையில், மெல்ல மெல்ல கனிமொழியின் வட்டாரத்துக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கனிமொழியோடு தூத்துக்குடி மேயர் ஜெகன் தான் நிவாரணப் பணிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில்தான் மாநகரத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளர் ஜோயல் இதில் கலந்துகொள்ளட்டும் என மன்றத்தின் தலைமையில் இருந்து சொல்லிவிட்டார்கள். கட்சி நிகழ்ச்சி என்றால் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கீதாஜீவனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரையும் அழைக்க வேண்டும். ஆனால் இது உதயநிதி நற்பணி மன்ற நிகழ்வு என்பதால் மாசெ என்ற வகையில் அமைச்சர் கீதாஜீவனுக்கு தகவல் தெரிவித்தனர் மன்றத்தினர்.
நிகழ்ச்சிக்கு ஓரிரு நாட்கள் முன்பாக தூத்துக்குடி மாநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை இளைஞரணியினர் மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது மாசெவும் அமைச்சருமான கீதாஜீவனின் ஆதரவாளரான பகுதிச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் எந்த ஆட்டோ ஓட்டுநனரும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வுக்கு செல்ல வேண்டாம், அமைச்சர் தலைமையில் தனியாக நிகழ்ச்சி நடத்துவோம்,. அதற்கு வாருங்கள் என்று ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகளிடம் பேசி பிரேக் போட பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் ஆட்டோ ஒட்டுநர்களோ, ‘நீங்களும் கொடுங்க வந்து வாங்கிக்கறோம். அவங்க கொடுக்கறதை ஏன் வாங்க வேணாம்னு சொல்றீங்க?’ என்று கேட்டு கொட்டும் மழையிலும் ஜோயல் வழங்கிய பொங்கல் தொகுப்புகளை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். உதவி செய்றதுல எவ்வளவு அரசியலைத் தாண்ட வேண்டியிருக்கு பாருங்க” என்கிறார்கள் இளைஞரணியினர்.
இந்த முயற்சி அமைச்சர் கீதாஜீவனுக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் நடந்திருக்கிறது என்று இளைஞரணியினர் அமைச்சர் உதயநிதிக்கும் தகவல் அனுப்பிவிட்டார்கள். உளவுத்துறையும் தனியாக நோட் போட்டு முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இவ்வளவு அரசியலுக்கு இடையே இந்நிகழ்ச்சி நடந்த இடத்தின் பெயர் என்ன தெரியுமா? அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கனி பேலஸ்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாள் ஸ்ட்ரைக்!
ஒரு பக்கம் அரசு, மறுபக்கம் வனத்துறை: இரட்டைக் கட்டண வசூலுக்குத் தடை!