1972 இல் உருவானது எம்.ஜிஆர்., தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். எந்த சூழலில் அதிமுக ஆரம்பிக்கப்பட்டது என்று எம்.ஜி.ஆரே விளக்கிய ஒரு ரகசியத்தை இன்று (அக்டோபர் 4) வெளியிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்றைய (அக்டோபர் 4) முரசொலி நாளேட்டில், கலைஞருடனான தனது அனுபவத்தைப் பற்றி எழுதிய கட்டுரையில்தான் ரஜினி இந்த ரகசியத்தை உடைத்துள்ளார்.
அந்தக் கட்டுரையில், “பல நேரங்களில் நான் கலைஞருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்.
எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்துப் பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார்.
அதற்கு சம்பந்தப்பட்டவர்களில் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார்.
அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் அவர்கள் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்”,
என்று ஒரு முன்னுரை கொடுத்துவிட்டுத்தான் அந்த ரகசியத்துக்குள் செல்கிறார் ரஜினிகாந்த்.
“எனக்கு தெரிந்த ஒருவர். அவர் பெயர் கூற இயலாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து ‘இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்.
அது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவருக்கும் திரு. எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் ஆகும்.
அதில் திரு. எஸ்.எஸ்.ஆர். அவர்கள் “அண்ணே… ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும்.
வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப் பேசினால் எல்லாம் சரி ஆகிடும். கலைஞரிடம் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள்” என்று கூறுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் “இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள்.
நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே” என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.
அதன் பின்னர்தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கினார்” என்று அந்த ரகசிய உரையாடல் பற்றி முரசொலி கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் ஏ.ஆர்.ரகுமான்
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை!