முதல்வர் போனை எடுக்காத கலெக்டர்: காரணம் என்ன?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட சில மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் நேற்று (டிசம்பர் 9) ஆலோசனை நடத்தினார்.
அப்போது, முக்கிய கலெக்டர் ஒருவர், முதல்வர் அழைத்தபோது, போனை எடுக்கவில்லை என்கிறார்கள் தலைமை செயலகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்.
டிசம்பர் மாதம் என்றாலே தமிழக மக்களுக்கு கொஞ்சம் அச்சம் தான். கடந்த இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்பட்ட துன்பங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறக்கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனமாக இருந்து வருகிறார்.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி இருந்ததால், முன்னெச்சரிக்கையாக குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதனை உறுதி செய்யும் வகையில், மாவட்ட கலெக்டர்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை விசாரிக்க, நேற்று மாலை 6.30 மணியளவில் எழிலகத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தின் கண்ட்ரோல் அறைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.
காணொளி காட்சி வாயிலாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்புகொண்டு மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார்.
மாலை சுமார் 6.45 மணியளவில் கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியன் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் காலில் முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ரிங் சென்றும் அவர் போனை எடுக்கவில்லை.
உடனடியாக முதல்வர் அலுவலகத்திலிருந்து கடலூர் மாவட்ட மானிட்டரிங் ஆபிசர் அன்சுல் மிஸ்ரா ஐஏஎஸ்-க்கு தகவல் சென்றது. அவர், கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார்.
அவர் “நெட் வொர்க் ஃப்ராப்ளம் சார்… கால் வந்ததை கவனிக்கல சார்… வெரி வெரி சாரி சார்…” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து உடனடியாக பேரிடர் மேலாண்மை கண்ட்ரோல் அறையைத் தொடர்புகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி பேசியுள்ளார் கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியன்.
முதல்வர் போனை கடலூர் கலெக்டர் எடுக்காததைப்பற்றி அவரது அலுவலகத்தில் விசாரித்தபோது,
”பேரிடர் மேலாண்மை கண்ட்ரோல் அறையிலிருந்து காணொளி காட்சி மூலமாக முதல்வர் தொடர்புகொண்டபோது என்ஜிஒ மீட்டிங்கில் இருந்தார் கலெக்டர், அதனால் கால் வந்தது தெரியவில்லை.
தகவல் தெரிந்ததும் சில நிமிடங்களில் கலெக்டரே தொடர்புகொண்டு பேசிவிட்டார்.” என்றார்கள்.
எப்படியோ அதிகாரிகள் அலார்ட்டாக இருந்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதுதானே.
வணங்காமுடி
உலக கோப்பை கால்பந்து: பிரேசிலை துவம்சம் செய்த குரோஷியா
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்!