reason behind ed raid on ponmudy and his son house

அமைச்சர் பொன்முடி மற்றும் கெளதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: ஏன்?

அரசியல்

அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜுலை 17) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த திடீர் சோதனைக்கான காரணங்கள் குறித்து தற்போது அமலாக்கத்துறை வட்டாரத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையை முன்னிட்டு மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.

இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக  3  செம்மண் குவாரிகளை ஒதுக்கியதாகவும்,  தனது மகன் கெளதம சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது.

இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு  தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

அதே போன்று, பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள யுனிவர்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ. 7.05 கோடி இலாபம் ஈட்டியுள்ளார். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் 22 லட்ச ரூபாய் முதலீடும் செய்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ரூ,41,57,225 க்கு இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை கெளதம சிகாமணி வாங்கியுள்ளார். இந்த பண பரிவர்த்தனைகள் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் கெளதம சிகாமாணி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் FEMA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தான் தற்போது அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில்  அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தவறு செய்யவில்லை என்றால் பொன்முடி நிரூபிக்கட்டும்: ஜெயக்குமார்

+1
0
+1
1
+1
0
+1
6
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *