முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
பிரிட்டனின் வடமேற்குப் பகுதியில் கம்ப்ரியா (cumbria) என்ற ஒரு மாகாணம் உள்ளது. இயற்கை அழகு ததும்பும் இப்பகுதியில், மலைகளுக்கு நடுவே, 2362 சதுர கிலோமீட்டர் அளவுள்ள அடர்ந்த தேசியப் வனப் பூங்கா இயற்கையாகவே அமைந்துள்ளது. லேக் டிஸ்ட்ரிக்ட் (ஏரி மாவட்டம்) என்றழைக்கப்படும் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத்துக்கான களங்களில் ஒன்றாக 2017இல் அறிவிக்கப்பட்டது.
நான் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு வாக்கில் ஏரி மாவட்டத்துக்குச் சென்றபோது நீர்நிலையை ஒட்டியுள்ள ரம்மியமான மலைப்பகுதியில் நடந்து செல்லும்போது எனது ஒரு இரும்புத் தட்டி கண்ணில் பட்டது. தட்டியில் ஒரு திசைக் குறி வரையப்பட்டு இருந்தது: அத்திசை நோக்கி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அத்தட்டியில் எழுதப்பட்டிருந்தது. காரணம்: அத்திசையில், ஒரு சில கிலோமீட்டர் தாண்டி அணுக் கழிவுகள் தேக்கிவைக்கப்படும் நிலையம் உள்ளது. அந்நிலையத்தில் இருந்து வெளிப்படக்கூடிய உயிராபத்துள்ள அணுக்கதிர் வீச்சுகளில் இருந்து விலகியிருக்குமாறு அந்தத் தட்டியில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
அணுக்கழிவின் குப்பைத் தொட்டி
கம்ப்ரியா போன்ற பச்சைக் கம்பளி போர்த்திய மாகாணத்தில் இப்படி ஆபத்தான கழிவு நிலையங்கள் பெரிய அளவில் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிறகு விசாரித்ததில், 1970களில் அணு மின்சார உற்பத்திகள் பிரிட்டனில் அதிகரித்தபோது அணு சக்தியினால் நிகழக்கூடிய எதிர்மறையான விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு கிடையாது என்பது தெரியவந்தது. அப்போதுதான் கம்ப்ரியா பிரிட்டனின் அணுக்கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, 1970களில் கம்ப்ரிய மாகாண மக்களிடம் அணுசக்தி உலையினால் நவீனம், வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என்ற பிரிட்டன் அளித்த உறுதி மற்றொரு காரணம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அவற்றிற்கு கம்ப்ரிய மக்கள் இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்பது தெரியாது போனது.
பொதுமக்களின் கருத்தை ஆறு மாதங்களுக்கு மேல் கேட்டறிந்த பின், ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு கம்ப்ரியா மாகாணத்தின் கவுன்சில் கூடி ஒரு முடிவெடுத்தது: இனிமேலும் பிரிட்டனின் அணுக்கழிவின் குப்பைத் தொட்டியாக நாங்கள் இருக்க முடியாது என்பதே அது. கம்ப்ரிய மாகாண நிர்வாக அமைப்பை எதிர்த்து பிரிட்டனின் நாடாளுமன்றமோ, உச்ச நீதிமன்றமோ செயல்பட முடியாது. பிரிட்டன் மட்டுமல்ல, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் சுற்றுப்புற சூழல் குறித்த இறுதி முடிவினை உள்ளூர் மக்களே எடுக்கலாம். அவர்கள் முடிவே கடைசிச் சொல்லாகும்.
கம்ப்ரியா மறுத்ததினால் பிரிட்டன் இப்போது அணுக்கழிவைக் கொட்ட வேறு இடத்தைத் தருமாறு மற்ற உள்ளூர் மாகாணங்களைக் கெஞ்சிவருகிறது. அதாவது உள்ளூர் மாகாணங்கள் தானாக முன்வந்து தந்தால் ஒழிய பிரிட்டனின் நாடாளுமன்றமோ, நீதிமன்றமோ அணுக்கழிவை எங்கும் போய் கொட்ட முடியாது (இதனால் கப்பலில் ஏற்றி நடுக்கடலில் சர்வதேசப் பகுதியில் நிறுத்தி ‘சேமித்து வைக்கும்’ முயற்சியும் நடைமுறையில் உள்ளது. இதற்கும் கிரீன்பீஸ் போன்ற நிறுவனங்களின் மூலம் எதிர்ப்பு வலுத்துவருகிறது).
கம்ப்ரிய மாகாணத்தின் அதிகாரத்தை ஜாம்பிய அரசாங்கத்தோடு ஒப்பிட்டால், நமக்கு நவீன காலனியச் சுரண்டல் பற்றி தெளிவு பிறக்கும். ஜாம்பியாவில் உள்ள செம்புச் சுரங்கங்களினால் ஏற்படுகிற சுற்றுப்புறச் சூழல் கேடுக்கு அளவே கிடையாது. செம்புத் தாது என்ற கச்சாப் பொருளுக்கான மதிப்பானது தொழில் உபயோகத்துக்காக தயார் நிலையில் இருக்கும் செம்புவின் மதிப்பே அதிகமானது என்பதைப் போன வாரம் பார்த்தோம். ஆனால், கச்சாப் பொருள் தயாரிக்க ஏற்படும் சுற்றுப்புறச் சீர்கேட்டை, கம்ப்ரியா தட்டிக் கேட்டது போல ஜாம்பியக் கிராமங்களோ, அந்நாட்டு அரசாங்கமோ கேட்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீட்டியம், சந்தைகளை அண்டி இருப்பதே இதற்குக் காரணம்.
லண்டனில் உள்ள பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள கேசிஎம் (கொன்கொலா செம்புச் சுரங்கம்) வேதாந்தாவின் கீழ் இருந்து வருகிறது. 2005ஆம் ஆண்டில் கேசிஎம்மின் மொத்தப் பங்குகளில் 79.4% சதவிகிதத்தை வேதாந்தா சந்தையில் வாங்கி முழு நிர்வாகத்தையும் தன் கைக்குள் கொண்டு வந்தது.
ஆபத்தும் நஷ்டஈடும்
அடுத்த ஆண்டே (2006) காஃபுவே (Kafue) ஆற்றில் மிகப் பெரிய அளவில் கழிவினைக் கலந்ததற்காக ஜாம்பியாவின் உயர் நீதிமன்றம் இரண்டு மில்லியன் டாலர் தொகை 2001 பேருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இத்தொகை ஒன்றுமே கிடையாது. மேற்குலகில் இப்படிப்பட்ட நட்ட வழக்குகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதற்கான நடைமுறைகளும் தெளிவாக உள்ளன.
ஆக, கார்ப்பரேட்டுகள் கவனமாகச் செயல்படும். அமெரிக்காவில் இம்மாதிரியான வழக்குகள் நடத்துவதற்கு என்றே ஒரு வழக்கறிஞர்கள் கூட்டம் உள்ளது. களைக்கொல்லி மருந்தைத் தொடர்ந்து தாவரங்களில் மீது உபயோகப்படுத்திய ஒரு விவசாயி, அந்த மருந்தின் பக்கவிளைவாக தனக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக மான்சாண்டோ மீது வழக்குத் தொடுத்து வெற்றிகரமாக நிரூபித்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நஷ்ட ஈடாக 289 மில்லியன் அமெரிக்க டாலர் மான்சாண்டோ அளிக்க வேண்டுமெனெ உத்தரவிட்டது.
இந்த மாதிரியான முறையீடுகள் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சாத்தியமில்லை. சட்ட நடைமுறைகள் வளராததும் நவீன காலனியத்துக்கு ஆதரவாக அரசு அமைப்புகள் இருந்து வருவதையும் காரணமாகச் சொல்லலாம். உதாரணமாக காஃபுவே ஆற்றில் இருந்து வரும் நீரின் வரத்தினைக் கொண்டுதான் ஜாம்பியாவின் 40 சதவிகித மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்கையில் இரண்டு மில்லியன் டாலர் ஈட்டுத்தொகை என்பது சோளப்பொரி கூட கிடையாது. மேற்குலகில் இப்படிப்பட்ட வழக்குகள் கார்ப்பரேட் நிறுவனங்களை இழுத்து மூட வைத்திருக்கிறது (உதாரணம்: என்ரான்).
வேதாந்தாவின் கேசிஎம் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீட்டு செய்துள்ளது. இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்தவிதமான ஈட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இந்த சுரண்டல் சுரங்கத் தொழிலில் மட்டுமல்ல. போபால் விஷ வாயு நமக்கு நினைவிருக்கலாம். அவ்வழக்கின் இறுதியில்கூடப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான அளவுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே இம்மாதிரியான வழக்குகளை இந்நிறுவனங்களில் தலைமை அலுவலகங்கள் உள்ள இடங்களிலேயே / நாட்டிலேயே நடத்தினால் அங்குள்ள சட்ட நடை முறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இதைக் கருத்தில்கொண்டே, 2004 /2010ஆம் ஆண்டுகளில் கேசிஎம்மினால் ஏற்பட்ட தொடர் கழிவுப் பேரிடருக்கான வழக்கையும், அதற்கான இழப்பீட்டுத் தொகை வழக்கையும் பிரிட்டனில் நடத்திக்கொள்ளலாம் என பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை அந்நாட்டின் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதையடுத்து பிரிட்டனில் உள்ள லேஹ் டே (Leigh Day) என்ற சட்ட நிறுவனம் வேதாந்தா மீது வழக்குத் தொடுத்தது. ஆனால், வேதாந்தா இதற்குச் சம்மதிக்கவில்லை. இந்த கழிவுப்பேரிடர் நடந்தது ஜாம்பியாவில். எனவே, அங்கேதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும், பிரிட்டனின் நீதிமன்றங்கள் இதை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது வேதாந்தாவின் வாதம். ஏனெனில் பிரிட்டனின் நீதிமன்றங்களும், ஊடகங்களும் (ஜாம்பிய) மக்களுக்குச் சாதகமாக, கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக மேற்கத்திய அளவுகோலின்படி ஈட்டுத்தொகை வழங்க உத்தரவிடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
இந்தச் சூழ்நிலையில்தான் ஏப்ரல் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பெங்களூரு மாநாட்டில் வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வால், கேசிஎம் சுரங்கம் ஆண்டொன்றுக்கு 500 மில்லியனில் இருந்து ஒரு பில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்டுவதாக தம்பட்டம் அடித்தார். இந்த [வீடியோ](https://www.youtube.com/watch?v=98yKosnwb-Y) ஜாம்பியாவில் வைரலாகப் பரவியது. வேதாந்தா என்ற நிறுவனம் தம் தேசநலனுக்கு எதிரான ஓர் அமைப்போ என்ற நம்பிக்கையில்லா உணர்வு மக்களிடம் அதிகமாகியது.
ஒருபுறம் கச்சாப் பொருளுக்கு அடிமாட்டு விலை; மற்றொருபுறம் கச்சாப்பொருளை அதிக விலைக்கு ஜாம்பிய அரசுக்குத் தெரியாமல் விற்பது; இன்னொருபுறம் செலவினக் கணக்கைக் காட்டி தொடர்ந்து கேசிஎம்மின் வரி ஏய்ப்பு. இது எல்லாவற்றுக்கும் மேல் சுற்றுப்புற பேரிடர், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிப்பு. இந்தச் சூழ்நிலையில் ஜாம்பிய மக்கள் வேதாந்தாவுக்கு எதிராக பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முயற்சிப்பது ஆச்சரியமல்ல.
உலகமயமாக்கலில் ஒரு தேசத்தின் தொழில் வளர்ச்சி பற்றி மட்டும் பேசுபவர்கள் எல்லாம் நிதி ஆண்டறிக்கை பற்றி அக்கறை கொண்டவர்கள். நிலையான வளர்ச்சி மற்றும் வளங்குன்றா முன்னேற்றம் பற்றி கவலைப்படுபவர்களே மக்கள், சுற்றுப்புற சூழல், கழிவு உள்ளூர் வாழ்வாதாரம் பற்றி குரல் எழுப்புகின்றனர்.
வேதாந்தாவின் இந்த மாடல் ஜாம்பியாவுக்கு மட்டுமல்ல: உலகம் முழுவதும் உள்ள அவர்களின் பல தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி உட்பட.
தரவுகள்:
Das, S. (2018): Vedanta’s Billions. Regulatory failure, environment & human rights. Foil Vedanta. London
Vaughan, A. (2018): Search restarts for area willing to host highly radioactive UK waste. https://www.theguardian.com/environment/2018/jan/21/search-area-willing-host-highly-radioactive-waste-uk-geology
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
முந்தைய கட்டுரைகளைப் படிக்க:
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]
கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]
கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]
கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]
கட்டுரை 11:[உலோகமும் காலனியமும்]
கட்டுரை 12: [சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்]
கட்டுரை 13: [இன்றைய உலகில் செம்பு]
கட்டுரை 14: [செம்புச் சுரண்டல்]
கட்டுரை 15: [சுரங்கக் குத்தகை]