புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகியை வீடு புகுந்து தவெகவினர் தாக்கியதாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு காண்போம்.
இந்தியாவிலேயே போஸ்டர் கலாச்சாரத்திற்கு பெயர் போனது புதுச்சேரி. அங்கு பிறந்தநாள் முதல் கருமாதி வரை என சகல நிகழ்வுகளுக்கும் போஸ்டர், பேனர் ஒட்டுவதை எழுதப்படாத விதியாக கருதப்படுகிறது.
குறிப்பாக பாகுபலி பிரபாஸ், வந்திய தேவன் கார்த்தி, காலா ரஜினி, சிங்கம் சூர்யா, சார்ப்பட்டா ஆர்யா என விதவிதமா தலையை மட்டும் தூக்கிவிட்டு, சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை வைத்து முக்கிய சாலைகளில் வைப்பது வாடிக்கை. அதனால் அங்கு அடிக்கடி மோதல் ஏற்படுவதும் உண்டு.
இதுதொடர்பாக நீதிமன்றம் எவ்வளவோ முறை கண்டித்தும், புதுச்சேரி அரசும் கண்டுக்கொள்வதில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள மோதலும் அதே போஸ்டரால் தான் வந்துள்ளது.
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவபிரகாசம். இவர் காங்கிரஸ் ஆதரவாளர். கடந்த வாரம் இவருடைய பிறந்தநாளுக்காக போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கிழித்ததாக கூறப்படுகிறது.
அதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளியின் நண்பரான ஆளும் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த மது என்பவரின் பிறந்தநாளன்று ஒட்டப்பட்ட போஸ்டர் மர்ம நபரால் கிழிக்கப்பட்டது. எனினும் அதனை பழிக்குப்பழியாக கிழித்தது சிவ பிரகாசம் தான் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து தான் முரளி, மதுவின் நண்பர்கள், நேற்று காலை சிவபிரகாசத்தின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி, அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமிரா, காங்கிரஸ் கொடி, பூந்தொட்டிகளை அடித்து உடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் சிவபிரகாசம் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், முரளி, மது, அருள்விஜய், சஞ்சய், ரவி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் பாஜக, என்.ஆர். காங்கிரஸ் என கட்சியில் உள்ளனர். இதில் கதிர் கிராமத்தைச் சேர்ந்த அருள் விஜய் என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் தான், போஸ்டர் சண்டை தவெக – காங்கிரஸ் மோதல் என ஊடகங்களில் தகவல் வெளியானது.
தாக்குதலில் காயமடைந்த சிவப்பிரகாசம் மற்றும் அவரது குடும்பத்தினர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
All We Imagine As Light : விமர்சனம்!
IPL Auction Day 2 : ஐபிஎல் ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்!
ரெட் அலர்ட் : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!