மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை: கே.என்.நேரு விளக்கம்!

அரசியல்

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலையை தடைச்செய்யக்கூடிய தடைச்சட்டம் 2013, முற்றிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது.

அந்தவகையில் இன்று (மார்ச் 30 ) நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது,”

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலையை தடைச் செய்யக்கூடிய தடைச்சட்டம் 2013 முற்றிலும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

நகரின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி தங்களை அப்பணியில் முழுமையாக அர்ப்பணித்துள்ள தூய்மைப் பணியாளர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக முதலமைச்சரால் “சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டம் 09.12.2022 அன்று மதுரை மாநகரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பணியினை, முற்றிலுமாக இயந்திரமயமாக்கி அதற்கான பயிற்சிகளை வழங்கி, இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் அவர், “பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் முறைகேடாக கழிவுநீர் வெளியேற்றுவதை தடுத்து நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் இந்த அரசு ஆணை பிறப்பித்து அதற்கான விதிகளையும் உருவாக்கியுள்ளது.

31 நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.

இந்த 31 நகரங்களில், 9 நகரங்களில் விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தினை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மேட்டுப்பாளையம், இராமேஸ்வரம், காரைக்குடி, சாத்தூர், ஆம்பூர், இராஜபாளையம், திண்டிவனம் மற்றும் பொன்னேரி ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ.1,033 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.

மேட்டூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டிலும், விழுப்புரம் நகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.263 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நந்தினி, குந்தவை, பூங்குழலி: பாரதிராஜாவின் காதல் பேச்சு!

பேராசியரின் பாலியல் தொல்லை: கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம்!

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031.32 கோடி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *