அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற திட்டம் பலிக்காது என இன்று (ஏப்ரல் 15) காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் அதிமுக சிதறி கிடப்பதாக சொல்கிறார். அதிமுகவை பிரிக்க நினைக்கிறார்கள். அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
அண்ணா கண்ட கனவை அதிமுக நிச்சயமாக நிறைவேற்றும். அண்ணாவின் கனவை நிறைவேற்றுவதுதான் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கொள்கை. அவர்களது வழியில் நடக்கும் எங்களுக்கு அதுவே கொள்கை.
அதிமுகவின் தலைவர்கள் அனைவரும் பொதுமக்களுக்காக வாழ்ந்தவர்கள். ஆனால், கருணாநிதி அவரது சொந்த குடும்பத்திற்காக வாழ்ந்தவர். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு மக்களாகிய நீங்கள் தான் வாரிசு. அதனால்தான், அவர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்கினர்.
அதிமுகவின் திட்டங்களால் தான் தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எத்தனையோ தலைவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், மக்களுக்காக சேவை செய்வது அதிமுக தான்.
அதிமுக ஆட்சியில் மக்களுக்காக தடையில்லா மின்சாரம் கொண்டுவரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு என்பது தொடர்கதையாகி வருகிறது.
திமுக ஆட்சியில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த திமுக ஆட்சியை மக்கள் ஊழல் ஆட்சியாகத்தான் பார்க்கிறார்கள்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க, போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை செயல்படுத்தினார். இதில், 2.o, 3.o என்று அடுத்தடுத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. சைலேந்திரபாபுவும் தற்போது பணி ஓய்விற்கு சென்றுவிட்டார். ஆனால், போதைப்பொருள் புழக்கம் ஒழிந்ததாக தெரியவில்லை.
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பல மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊழலால் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான்.
கண்ணிற்கு தெரியாத காற்றில்கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக கட்சி. தமிழக மக்களை தலைகுனிய செய்யும் அளவிற்கு ஊழல் செய்த கட்சி திமுக கட்சி” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?
Thalaivar 171: ரஜினிக்கு வில்லன் இவர்தான்… வேற லெவல் காம்போ!