அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே… பத்து வருட ஃப்ளாஷ் பேக்!

அரசியல்

பத்து வருடங்களுக்கு முன் 2013 ஆம் ஆண்டு ராகுல்காந்தி டெல்லியில் அப்போது நடைபெற்ற தனது காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கொண்டுவந்த அவசர சட்டத்தை கிழித்து எறிந்தார்.

அதன் ஒரு விளைவாகவே இப்போது 2023 மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற விவாதங்கள் தேசிய அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இப்படி ஒரு நிலை ராகுல் காந்திக்கு அல்ல வேறு எந்த மக்கள் பிரதிநிதிக்கும் வரக் கூடாது என்பதற்காக… 2013 இல் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது  காங்கிரஸ் கூட்டணி அரசு.

2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம், குறைந்தபட்சம் இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்கள் கிடைக்காமல் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று லில்லி தாமஸ் வழக்கில் அதிரடியாகத் தீர்ப்பளித்தது.

அப்போது லாலு பிரசாத் யாதவ், காங்கிரசிலேயே சிலர் வழக்குகளில் தண்டனை கிடைத்து அதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற சூழலை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் 2013 செப்டம்பர் மாதம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது.

அதாவது கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழக்க மாட்டார்கள். அவர்களுக்கு அடுத்த சட்ட நிவாரணத்துக்காக 3 மாத கால அவகாசம் அளிக்கப்படும் என்பதுதான் அந்த அவசர சட்டம். இந்த அவசர சட்டத்தைக் கொண்டுவந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது ராகுல் காந்தி டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘இந்த அவசர சட்டம் என்பது முழுமையான முட்டாள் தனம். இது ஒரு அரசியல் முடிவு, ஒவ்வொரு கட்சியும் அதைச் செய்கிறது, இந்த முட்டாள் தனத்தை நிறுத்தவேண்டிய நேரம் வந்திருக்கிறது.

உண்மையில் ஊழலை தடுக்க வேண்டும் என்றால் இதுபோன்ற சமரசங்களை செய்துகொள்ளக் கூடாது,” என்று ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி அந்த அவசர சட்ட நகலை பத்திரிகையாளர்கள் முன் ஆவேசமாக கிழித்துப் போட்டார்.

இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளான மன்மோகன் சிங் அரசு,. சில நாட்களில் அந்த அவசர சட்டத்தைத் திரும்பப் பெற்றது.

இப்போது அந்த சட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை உடனடியாக இழந்திருக்க மாட்டார். பத்து வருடங்களுக்கு முன் ராகுல் கிழித்துப் போட்ட ஓர் அவசர சட்டம் காங்கிரஸ் அரசால் திரும்பப் பெறப்பட்டது. அதுவே இன்று அவரது எம்பி பதவி பறிபோகவே காரணமாகவும் அமைந்துவிட்டது.

பத்து வருடத்துக்கு முன் ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரது எம்பி பதவியையே கிழித்துவிட்டது.

வேந்தன்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

ஆர்.சி.பி ஏலம்: ஆல்ரவுண்டர் ஷாபாஸ் பயம்!

+1
1
+1
4
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *