தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு தடைகோரி குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று (மார்ச் 12) கடிதம் எழுதியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்து, கடந்த பிப்ரவரி 15 அன்று, உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு ரத்து செய்தது.
மேலும், மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உத்தரவிட்டது.
ஆனால் இதுதொடர்பான தரவுகளை தொகுப்பதில் உள்ள சிக்கலான செயல்முறையை காரணம் காட்டி, தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரி எஸ்பிஐ வங்கி மனு தாக்கல் செய்திருந்தது.
கோரிக்கை நிராகரிப்பு!
அதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது எஸ்பிஐ வங்கி கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் மார்ச் 12ஆம் தேதிக்குள் (இன்று) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்!
இந்த நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குடியரசுத் தலைவரின் கருத்தை பெறும் வரை தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்று திரெளபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ஆதிஷ் சி அகர்வாலா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “இந்திய நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தில் கூடியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டு அறிவை குறைக்கும் வகையிலும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக செயல்பாடு மீது கேள்விக்குறியை ஏற்படுத்தும் வகையிலும் தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் ஒருபோதும் வழங்க கூடாது.
அந்த வகையில் தேர்தல் பத்திர வழக்கில் இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்ற 22,217 தேர்தல் பத்திரங்களும் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவை.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பலிகடா?
கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி பங்களிப்பு செய்ய அரசியலமைப்பில் வெளிப்படையான விதிகள் மற்றும் திருத்தப்பட்ட சட்டங்கள் இருக்கும்போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பங்களிப்பு செய்ததற்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை எவ்வாறு தண்டிக்க முடியும்?
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் தடை செய்திருப்பது, வருங்காலத்திற்கு தானே தவிர, அவை கடந்த காலத்திற்கு பொருந்தாது.
இந்தத் தீர்ப்பின் மிகவும் ஆபத்தான பகுதி, ’நன்கொடைகளை தொடர்புபடுத்தி, எந்த அரசியல் கட்சிக்கு எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு தொகை கிடைத்தது என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்’ என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த உத்தரவு தான்.
இந்த தீர்ப்பு நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கார்ப்பரேட் ஆகிய இரண்டிற்கும் சாவுமணி அடிக்கும் சாத்தியம் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர் மற்றும் நன்கொடையின் அளவை வெளிப்படுத்துவது அவர்களின் உரிமையை மீறுவதாகும். நம் நாட்டின் அரசியலமைப்பு நம்பிக்கை மற்றும் இறையாண்மை உத்தரவாதத்தை காட்டிக் கொடுப்பதாகும். இது பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பங்களித்த கார்ப்பரேட் நிறுவனங்களை பலிகடா ஆக்கும்.
இதுபோன்ற முக்கியமான தகவல்களை வெளியிடுவது கார்ப்பரேட் நன்கொடைகள் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதை தடுக்கும். மேலும் இதுபோன்ற செயல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்பதை தடுக்க செய்யும். மேலும் இந்த தீர்ப்பை அமல்படுத்தி தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் வெளியிட்டால், அது சர்வதேச அரங்கில் தேசத்தின் நற்பெயரை சிதைத்துவிடும்.
குடியரசுத் தலைவரின் கருத்தை பெற வேண்டும்!
அரசியலமைப்பின் 143 வது பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு பொது விஷயங்களில் ஆலோசனை வழங்க குடியரசுத் தலைவருக்கு அதிகார வரம்பை அளித்துள்ளது.
அதன் அடிப்படையில், தேர்தல் பத்திர வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் முழுமையான நீதியை உறுதி செய்வதற்காக இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவரின் கருத்தை பெற வேண்டும்.
அதுவரை தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமலாக்குவதைத் தடுத்து நிறுத்துமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அகர்வாலா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு!
கொடநாடு வழக்கை விசாரித்த ஐஜி பணியிடமாற்றம்!
SK : விஜய் இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்?
பிஜேபி ஆட்சிக்கு வந்த அடுத்த கவர்னர் பதிவி இவருக்கு உண்டு
இப்ப குடியரசுத் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டும் மோத விட்டாச்சி…
இப்ப குடியரசுத் தலைவரையும், சுப்ரீம் கோர்ட்டையும் மோத விட்டாச்சி…