ஜூன் மாதம் செந்தில் பாலாஜி, ஜூலை மாதம் பொன்முடி ஆகஸ்டு மாதம் யார் என்ற கேள்விதான் இப்போது திமுகவின் தலைமை வட்டாரங்களில் தகிக்கும் விவாதமாக இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க திமுக புள்ளிகளைக் குறிவைத்து மத்திய அரசின் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகளின் வேட்டை தொடரும் என்றே திமுக தலைமை எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்… ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாக அழைத்து, ‘ஜாக்கிரதையா இருந்துக்கங்க. எப்ப வேணும்னாலும் உங்க வீட்டுக்கு ரெய்டு வரலாம்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்து யார் யாரை திமுகவில் டெல்லி குறிவைத்திருக்கிறது என்பது பற்றிய அலாரம் அறிவாலயத்துக்கு கிடைத்துள்ளது.
அதன்படி விரைவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய சென்னை எம்.பி.யுமான தயாநிதி மாறன், முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனின் உறவினர் ப்ரவீன் ஆகியோர்தான் ஹிட் லிஸ்டில் இருப்பதாக முதல்வருக்கு சில சமிக்ஞைகள் கிடைத்திருக்கின்றன.
அதையடுத்து சம்பந்தப்பட்ட இந்த மூவருக்குமே தனிப்பட்ட முறையில் இந்த எச்சரிக்கைத் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை தொடர்பாக ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்திருக்கிறார். சபரீசனுக்கு உறவினரும் அவரது நெருக்கமானவருமான ப்ரவீன் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. பல நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் ப்ரவீன் மூலம் சபரீசனுக்கு வலை விரிக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த நிலையில் உதயநிதி, தயாநிதி, ப்ரவீன் ஆகிய மூவரது பெயர்கள் அடுத்தகட்ட சோதனைப் பட்டியலில் இருப்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது: எடப்பாடி
ஜி.வி.பிரகாஷின் 100 வது பட அப்டேட்!