கேலோ இந்தியாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் இதுதான் : மேடையில் உடைத்த உதயநிதி

Published On:

| By christopher

The next target after khelo India

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டும் அல்ல எல்லோரும் வர வேண்டும், விளையாட்டில் வெல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

கடந்த 19ஆம் தேதி தொடங்கி சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் நடைபெற்று வந்த 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது.

அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜனவரி 31) நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் நிறைவு நாள் விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கடந்த 13 நாட்களாக நடைபெற்று வந்த கேலோ இந்தியா தொடரில் ஒட்டுமொத்தமாக முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா, இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அமைச்சர் அனுராக் சிங் மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

The next target after khelo India

முதல்முறையாக டாப் 3 வந்த தமிழ்நாடு!

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பேசுகையில், “இந்திய ஒன்றியத்தின் விளையாட்டு துறையின் தலைநகர் என்ற நிலையை அடைவதற்கு தமிழ்நாட்டிற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா 2023 மீண்டும் நிரூபித்திருக்கிறது.

இந்த நேரத்தில் முதல் இடம் பிடித்துள்ள மகாராஷ்டிரா, 2வது இடம் பிடித்துள்ள நம்முடைய தமிழ்நாடு மாநிலத்திற்கும், 3வது இடம் பிடித்துள்ள ஹரியானா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் வாழ்த்துகளை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் வரலாற்றில் எத்தனையோ தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், அதில் பங்கேற்றிருந்தாலும் பதக்கப் பட்டியலில் இந்த முறைதான் தமிழ்நாடு முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது.

பதக்கம் வெல்ல காரணம் இது தான்!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக திராவிட மாடல் தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைகள்தான் இதற்கு ஒரே காரணம்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஏழை, எளிய கிராமப்புற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலரை அடையாளம் காண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான அந்த பயிற்சியை நம் அரசு கொடுத்தது. அதன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்று 2வது இடத்திற்கு வந்திருக்கிறது.

விளையாட்டு என்பதை ஒரு இயக்கமாகவே நம்முடைய தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு துறையின் சாதனையாளர்கள் நகரத்தில் இருந்து மட்டும் அல்ல கிராமத்தில் இருந்தும் வரவேண்டும்.

The next target after khelo India

அடுத்து கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்!

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டும் அல்ல எல்லோரும் வர வேண்டும், விளையாட்டில் வெல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம். அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் (Kalaignar Sports Kit) திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள 12,000 கிராம ஊராட்சிகளில் நம்முடைய அரசு துவக்க இருக்கிறது. திருச்சியில் வரும் 7ம் தேதி இந்த திட்டத்தை நான் துவக்கி வைக்கின்றேன்.

எப்படி படிப்பதற்கு புத்தகங்களை நமது அரசு கொடுக்கின்றதோ, அதேபோல விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று விளையாட்டு உபகரணங்களையும் நாம் கொடுக்க இருக்கின்றோம். அதுவும் விளையாட்டை எப்போதும் நேசித்த கலைஞருடைய நூற்றாண்டில் கலைஞரின் பெயரிலேயே கொடுக்க உள்ளோம்.

வெற்றியாளர்களுக்கு பதக்கமும், விருதுகளும் ஒரு அங்கீகாரம் என்றால் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்த அனுபவம் தான் பதக்கம். எனவே உங்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருக்கலாம் ஆனால் உங்களுக்கான களம் அப்படியேதான் இருக்கிறது.

உங்கள் திறமைக்கான அங்கீகாரம் வெகுதொலைவில் இல்லை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 சர்வதேச அளவில் சாதிக்க அவர்களுடைய திறமையை மேன்மேலும் வளர்த்தெடுத்து அவர்களை வெற்றியாளர்களாக்கிட இந்த அரசு அயராது உழைக்கும். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்முடைய வீரர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் STR 48 படக்குழு!

இனி Paytm-ல் பண பரிமாற்றம் கிடையாது : ரிசர்வ் வங்கி அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel