The new bridge in disappeared in just three months: Edappadi attack

தி.மலையில் மூன்றே மாதத்தில் உடைந்த புதிய பாலம் : எடப்பாடிக்கு தமிழக அரசு பதில்!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மூன்று மாதங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அதுதொடர்பாக தமிழக அரசு இன்று (டிசம்பர் 3) விளக்கம் அளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திமுக அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையில் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரில் கட்டப்பட்ட மூன்றே மாதத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

தரமற்ற பாலம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலமானது வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் ,அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது .

இந்த திமுக ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி.

பொதுமக்கள் பயணப்பட, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத மு.க.ஸ்டாலின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மறுபடியும் கலெக்ஷன்-கமிஷன்-கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படியே செயல்படாமல், இந்த பாலத்தை படிப்பினையாக கொண்டு இனி கட்டப்படுகிற பாலங்களை , மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளத்தில் சேதமடைந்தது குறித்து தமிழக அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலத்தின் மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு பாய்ந்த வெள்ளம்!

அதில், “அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் கடந்த இரண்டு நாட்களில் (நவம்பர் 30 & டிசம்பர் 2) ஃபெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் சேதமடைந்தது.

நீளம் 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் 12 மீ. ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் – 5 மீ. மற்றும் பாலத்தின் உயரம் – 7 மீ.

நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர் வெளியேற்றம் (Design Discharge) 54.117 கன அடி. திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டது.

தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 200,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் இப்பாலமானது அணையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும் இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சாத்தனூர் அணை விவகாரம் : திமுக அரசுக்கு அன்புமணி வைத்த 7 முக்கிய கேள்விகள்!

திருவண்ணாமலை : ‘மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை’ – ஐஐடி பேராசிரியர் குழு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts