உண்மைகளை  மூடிமறைக்க மோடியும் சங் பரிவாரமும்  செய்யும் சூழ்ச்சிகள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை

2002 இல் குஜராத்தில்  முஸ்லிம்கள் இனக்கொலை செய்யப்பட்டதில் அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும் இப்போது இந்தியாவின் பிரதமராக இருப்பவருமான  நரேந்திர மோடி வகித்த பாத்திரம் பற்றி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை, அதைப் பார்க்காமலேயே தடை செய்த ஒன்றிய அரசாங்கத்தால் , அவர் வகித்த பாத்திரம் உலகறியச் செய்யப்பட்டுவிட்டது என்ற ஆத்திரத்தில்,  ‘ பிபிசி காலனிய மனோபாவத்துடன் செயல்படுவதாகக்’ குற்றம் சாட்டுவதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை.

’மூத்த, நடுநிலைப் பத்திரிகையாளர்’ என்று சொல்லப்பட்டு தொலைக்காட்சி விவாதங்களில் நூற்றுக்கணக்கான முறை பங்கேற்ற ஒருவர், தன் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் விதமாக, பிபிசியின் காலனிய மனப்பான்மையைப் பற்றியும் அது  ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களில் பிரிட்டன் வகித்த பாத்திரம் பற்றிய ஆவணப்படம் எதையும் தயாரித்ததில்லை என்பது பற்றியும் பேசினார்.

ஆனால், அதே பிபிசிதான் சில ஆண்டுகளுக்கு முன்  பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 1940களில் ஏற்பட்ட –  வரலாற்றில் காணப்பட்ட மிகப் பெரும் பஞ்சத்தை  – பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டு, அந்தக் கொடூர நிகழ்வுக்கான முழுப்பொறுப்பையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மீது  சுமத்தியது.

உலகிலுள்ள எல்லா நாடுகளிலுமுள்ள தொலைக்காட்சி சானல்களைப் போலவே,  பிபிசியும் பாரபட்சம் கொண்டதுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால், குஜராத் இனக்கொலை பற்றிய ‘ மோடி பிரச்சினை’ என்ற ஆவணப்படத்தில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்ற மையப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இந்த மூத்த பத்திரிகையாளர் உள்ளிட்ட பலரும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருவதைப் பார்க்கிறோம்.

அந்த ஆவணப்படத்திற்கு சங் பரிவாரத்தினரின் முதல்  எதிர்வினை  ஒரு  ‘மீம்ஸ்’ வடிவத்தில் வெளிவந்தது.  ராகுல் காந்தியும் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் முன்னாள்  தலைவர் ஜெரெமி  கோர்பின்னும்  பல மாதங்களுக்கு முன் சந்தித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ” ராகுல் காந்தி ஆறு மாதங்களுக்கு முன் பிபிசியின் இயக்குநரைச் சந்தித்தார்,  அதன் விளைவு இப்போது தெரிகிறதா” என்ற வாக்கியங்களும் அடங்கிய ’மீம்ஸ்’ அது,

தொழிற்கட்சியின்  முன்னாள் தலைவர் யார், பிபிசியின் இயக்குநர் யார் என்பன சங் கூலிப்படைகளை ஏவுகின்றவர்களுக்கு தெரியாதது அல்ல. அந்தப் படையிலுள்ள மூடர்கள், மூர்க்கர்கள், புளுகர்கள் ஆகியோரை அந்த ‘ மீம்ஸை’ வெளியிடச் செய்து  இந்திய மக்களை முட்டாள்களாகச் செய்ய முயன்றனர் சங் பரிவாரத்தின் குதர்க்கவாதிகள்.

நல்லவேளையாக, அந்தப் புகைப்படத்தில் இருந்த தாடி வைத்திருந்த ஒரு மனிதரை, ’மார்கரெட் தாட்சர்’ என்று சொல்லுமளவுக்கு அந்த ’மீம்ஸ்’ செல்லவில்லை! 

அந்த ஆவணப்படத்தை இந்திய மக்கள் பார்க்க முடியாதபடி செய்வதற்காக இந்தியாவில் அதை ஒளிபரப்பிக் கொண்டிருந்த யுட்யூப், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்குத் தடைவிதித்த மோடி அரசாங்கம், அதற்கு அடுத்தபடியாக உலகமனைத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான ஆவணங்களை வைத்துள்ளதும் அமெரிக்காவைத் தலைமையமாகக் கொண்டிருப்பதுமான ‘இன்டெர்நெட் ஆர்கைவும்’ அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்த சில மணி நேரங்களிலேயே அதை அந்த ’ஆர்க்கைவி’ லிருந்து நீக்கச் செய்வதில் வெற்றி பெற்றது.

ஆனால், சங் பரிவாரம் அறிந்துகொள்ளாதது என்னவென்றால், இந்த மின்னணு யுகத்தில் எதையும் தடை செய்வது சாத்தியமில்லை என்ற எளிய  உண்மையைத்தான். புதிய புதிய இணைப்புகள் மூலம் எண்ணற்ற இந்தியர்களால் அந்த ஆவணப்படத்தைப் பார்ப்பதும் பதிவிறக்கம் செய்து கொள்வதும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் சாத்தியமாயிற்று.

அதன் பிறகு அமெரிக்காவிலுள்ள ஹிண்டென்பெர்க் நிறுவனம்,  மோடியின் மிக நெருக்கமான நண்பரும் மோடி அரசாங்கத்தின் தயவால் பல இலட்சக்கணக்கான கோடி டாலர் பெறுமானமுள்ள நிலங்கள், விமானத் தளங்கள், துறைமுகங்கள் முதலியவற்றை மட்டுமல்லாது, அரசு நிதி நிறுவனங்களிலிருந்து பல இலட்சம் கோடி ரூபாய்களைக் கடன் வாங்கியும், தன் நிறுவனங்களின் பங்கு  மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டியும்,

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிக்காத மொரிஷியஸ் போன்ற நாடுகளில்  போலி நிறுவனங்களை உருவாக்கி பல இலட்சம் கோடி ரூபாய்களை சேமித்து வைத்திருந்ததுமான  பலவகையான ஊழல்களை அம்பலப்படுத்திய பிறகு,

’இஞ்சி தின்ற குரங்கு’ போல முகத்தை வைத்துக் கொண்டிருந்த சங்கிகளும் அவர்களின் தலைவர் மோடியும் ( மோகன் பகவத்  இப்போது ஓரங்கட்டிவிடப்பட்டுள்ளார்), நாடாளுமன்றத்தில் அதானி ஊழலைப் பற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு,

‘ரெய்டுகள்தான் எதிர்க்கட்சிகளை ஒன்று சேரச் செய்கின்றன’ என்று, அதன் கட்டுப்பாட்டிலுள்ள அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும் அவற்றை அவதூறு செய்வதற்காகவும் திட்டமிட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை மறைமுகமாக ஒப்புக் கொண்டு, சங் பரிவாரத்தினர் மட்டுமே  சர்வோத்தமர்கள், களங்கமற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க முனைந்தனர். 

’அதானிக்கும் உங்களுக்குமுள்ள உறவு என்ன?’ என்ற மோடியைப் பார்த்து ராகுல் காந்தி நேரடியாகக் கேட்ட கேள்விக்கும், அதானி ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் எழுப்பிய கேள்விக்கும் பதில் சொல்லாத மோடி, அதற்கு சம்பந்தமில்லாததும் காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் செய்த தவறுகளைப் பற்றியும் 9.02.2023இல் மாநிலங்களவையில்  பேசியதோடு, ராகுல் காந்தியின் குடும்பத்தைத் தனிப்பட்ட முறையில் அவதூறும் செய்தார்.

அந்தக் குடும்பம் நேருவின் பெயரை வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், நேருவின் மரபை நிராகரித்துள்ளதா?  நேருவையும் காந்தியையும் வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று திட்டமிட்டு வேலைசெய்து கொண்டிருக்கும் சங்கிகளின் தலைவர் மோடி,

ராகுலின் குடும்பம் நேருவின் பெயரை வைத்துக்கொண்டிருந்தால் அதைப் புகழ்ந்திருப்பாரா? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ மாநில அரசாங்கங்கள்  கலைக்கப்பட்டிருக்கின்றன; மாநில அரசாங்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும், அவற்றை இப்போது  மோடி  சொல்வதற்கான ஒரே காரணம், அதானி  பிரச்சினையைத் தட்டிக் கழிப்பதுதான்.

அதைவிட வேடிக்கை என்னவென்றால், தன்னுடைய அரசாங்கம்தான் இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை உண்மையிலேயே கடைப்பிடிப்பதாக மோடி கூறியதுதான்.   பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசாங்கங்கள் எந்த மக்கள்நலத் திட்டத்தையும் முழுமைமையாக  நிறைவேற்ற முடியாமல் செய்யும் ஜி.எஸ்.டி., தேசியக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு  என்று ஒவ்வொரு நாளும் மாநிலங்களை நகராட்சி மன்றங்களின் நிலைக்குக் குறுக்கிக் கொண்டிருப்பது மோடி அரசாங்கமல்லவா?.

மாநில அரசாங்கங்கள் வேறு வழியின்றி கடன்களை வாங்குவதற்கும்கூட  உச்சவரம்பு விதித்திருப்பது யார்? ஜி.எஸ்.டி. குழுக்கூட்டங்களைக்கூட உரிய காலத்தில் கூட்டாமல் இருப்பது யார்? மேலும்,  1977 தேர்தலில் இந்திரா காங்கிரஸைத் தோற்கடித்து ஆட்சி அமைத்த ஜனதா அரசாங்கத்தையும் பின்னர் வி.பி.சிங்கின் அரசாங்கத்தையும் கவிழ்த்தது யார்?,

சங் பரிவார ஜன் சங்கமும் பாஜகவும்தானே? மக்கள் நலம் கருதியா அதைச் செய்தன? நாட்டின் பெரும்பான்மையான மக்களான தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோரின் நலன்களுக்கான திட்டங்களை அந்த அரசாங்கங்கள்  செய்து கொண்டிருந்தன என்பதால்தானே?  இவற்றுக்கெல்லாம்  ஓரடி  முன்னே சென்று தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற எதிர்க்கட்சிகள் மாநில அரசாங்கங்களை உருவாக்குவதற்கு முன்பே அவற்றின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது யார்?,

‘கட்சி மாறமாட்டோம்’ என்று கடவுள் சிலைக்கு முன்னால் சத்தியம் செய்து கொடுத்த கோவா காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்களை ‘ தெய்வ நிந்தனை’ செய்யும் வகையில் – அதுவும் இந்துக் கடவுள்களை நிந்தனை செய்யும் வகையில் –  கட்சி மாற வைத்தது யார்?,

அஇஅதிமுகவை இரண்டாகப் பிளந்து, இருபிரிவுகளின் தலைவர்களையும் தன் முழு நேர அடிமைகளாக்கியது யார்? அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள கட்சியைச் சேர்ந்த இந்த மானமற்றவர்கள்,  ’அறிஞர் சி. என்.அண்ணாதுரை’ என்ற  பெயரைக்கூடத் தன் உரையில் சொல்ல மறுத்த ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தபோது அவருடைய வால்களாகக் கூடவே செல்ல வைத்தது யார்?,

’ரெய்டு’ என்கிற ‘ டெமாகிள்ஸ் வாளை’ அந்த இரு பிரிவினரின்  தலைக்கு மேல் தொங்க வைத்துக் கொண்டிருப்பது யார்? ஜெயலலிதா இருக்கும்போதுகூட அஇதிமுக மேடைகளில் பெரியார் படம் இருக்கும்; பெரியார் பிறந்த நாளிலும், நினைவுநாளிலும் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வந்தவர் அவர்.

ஆனால், அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு அக்கட்சியின் மேடைகளிலிருந்து பெரியார் படம் அகற்றப்பட்டது ஏன்?  பெரும்பாலான எதிர்க்கட்சிகளையும் போலவே ஜெயலலிதாவும் பல சந்தர்ப்பவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார், சுயநலம் கொண்டிருந்தார் என்றாலும், மோடியின், சங்  பரிவாரத்தின் அடிமையாகச் செயல்பட்டிருக்கிறாரா? இப்போது இரு பிரிவுகளும் ஒன்றுசேரும் வாய்ப்பை பாஜக திணித்துள்ளதால், அவை இப்போது ‘அம்மா, அம்மா’ என்றுகூட அலறுவதில்லை.

அறிஞர் அண்ணாவின் பெயரையும் அவரது எழுத்துகளையும் பற்றி மேடையில் பேசும் தைரியம் இந்த இரு குழுக்களுக்கும் உண்டா? பெரியாரின் நூற்றாண்டு நிறைவின்போது அவரது மணிமொழிகளைத் தொகுக்கச் செய்து அரசாங்கச் செலவில் இலட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விநியோகம் செய்யச் செய்தாரே ‘இரட்டை இலை’ சின்னத்தை  உருவாக்கிய எம்.ஜி.ஆர். , அந்தச் செயலைப் பற்றி மேடையில் பேசும் தைரியம் உண்டா இந்த இரு குழுக்களுக்கும்?,

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் வாழ்நாள் முழுக்கப் போராடியதன் காரணமாகத்தானே ஒரு ஈபிஎஸ்ஸும் ஒரு ஓபிஎஸ்ஸும் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது?  அவர்களின் தொண்டர்களாக உள்ள பல்லாயிரக்கணக்கானோர் பள்ளி, கல்லூரிப் படிப்புகளையும் அரசாங்கப் பணிகளையும் பெற முடிந்தது? அவற்றிலும்கூட கைவைக்கின்ற , பார்ப்பனர்களின் நலன்களையே பெரிதும் கருத்தில் கொண்ட வகையில் இட ஒதுக்கீடு கொள்கையில் கைவைத்தது யார்?,

பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில்களையும் சிறு வணிகர்களையும் மட்டுமின்றி ’அன்றாடங் காய்ச்சிகளின்’ வயிற்றிலும் அடித்த பணமதிப்புக் குறைப்பு செய்தது யார்? 2020இல் கோவிட் தொற்று நோய்க்காலத்தில் அனாதைகளாக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் ( பெரும்பாலும் இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) ஆயிரக்கணக்கில் இறந்ததற்குக் காரணம் யார்?

அவர்களோடு  சேர்ந்து  பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும் ( இவற்றில் ’புனிதப் பசுக்களும்’ அடங்கும்) மடிந்ததற்குக் காரணம் யார்? பரிசோதிக்கப்படாத தடுப்பூசி மருந்துகளை இரண்டே இரண்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின்  முற்றுரிமையாக்கியது யார்?,

’குஜராத்தின் மாநில முதலமைச்சராக இருந்தவர் என்ற முறையில் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்தவன்  நான் ‘ என்று மார் தட்டிக் கொள்கிற மோடி, இவ்வாண்டு பட்ஜெட்டில், விரைவில் சட்டமன்றத் தேர்தல்களை சந்திக்கவிருக்கும்  மாநிலங்களுக்கு மட்டும் வேண்டிய சலுகைகளை அளித்துவிட்டு, பாஜக ஆட்சி செலுத்தாத மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை காட்டுவது ஏன்?,

‘மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வரும் திட்டம் எங்களால்தான் சாத்தியமாயிற்று’ எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த  ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டத்தினர், இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் ஒரு ரூபாய்கூட மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதைப் பற்றிய கவலையில் ஒரு துளியையாவது வெளிப்படுத்தியுள்ளனரா? இல்லை.

அவர்களுக்கு பதவியும் பணமும் மட்டுமே முக்கியம், உயிர் மூச்சு, அதனால்தான் தங்கள் திராவிடத் தமிழ் தொண்டர்களில் ஒரு சிலருக்கு மட்டும் சலுகைகள் கொடுத்தும், பாஜகவுடன் சேர்ந்து தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்தும்  இலட்சக்கணக்கானோரின்  எதிர்காலத்தைப் பார்ப்பன –பனியா கூட்டத்திற்குப் பலி கொடுக்கத் தயாராகிவிட்டனர்.

பிபிசி ஆவணப்படம், அதானி ஊழல் ஆகியவற்றைப் பற்றி மூச்சு விடாமல் இருந்த வானதி சீனிவாசன் போன்ற சூத்திரர்கள், இந்து அறநிலைய அமைச்சர் சேகர் பாபு பழனி முருகன் கோவிலில் கருவறைக்குள் நுழைந்ததைப் பெரிய பிரச்சினையாக்கி, அது ஆகம விதிகளை அவமதித்துவிட்டதாகப் புலம்புகின்றனர்.

அதாவது, தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, சூத்திரர்களும்கூடத் தீண்டாதவர்கள்தான், அவர்களது  நுழைவால் கருவறை தீட்டுப்பட்டுவிட்டது என்பதுதான் அவரது கூற்றின் பொருள்.  வழக்குரைஞராக இருந்த அந்த அம்மையாருக்கு ஆகமவிதிகள் பற்றி ஏதேனும் தெரியுமா? அந்த ஆகம விதிகளை மீறித்தானே தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது? அந்த ஆகம விதிகளை மீறித்தானே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, இப்போது சங் பரிவாரத்தின் கணிசமான வாக்கு வங்கியாகத் தங்களை இணைத்துக் கொண்டுவரும் நாடார் சமூகத்தினரும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குள் நுழையும் உரிமை தரப்பட்டது.

அதேவேளை  சைவக் கோவில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், வைணவக் கோவில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும் என்ற ஆகம விதிகளை மீறித்தான் சென்னையில் தியாகராயநகரில் உள்ள சிவா-விஷ்ணு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அதேபோலத்தான் பெசண்ட் நகரிலுள்ள இன்னொரு பெரிய இந்துக் கோவிலும். இதைப் பற்றி சங்கராச்சாரியார்களிடமும் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் ஹெச்.ராஜா போன்றவர்களிடமும் வானதி சீனிவாசன் கேள்வி கேட்பாரா?

அது மட்டுமல்ல; ஆகம விதிகளுக்குள் வராத, பார்ப்பனரல்லாதவர்களையே பூசாரிகளாகக் கொண்ட சிறு தெய்வங்களை, கிராம தெய்வங்களைப் பார்ப்பன ஆகம விதிகளுக்குள் கொண்டுவந்து, அந்தப் பூசாரிகளும்கூட  வருங்காலத்தில் அந்தக் கோவில்களின் கருவறைக்குள் நுழைய முடியாதபடி செய்து கொண்டிருக்கும் சங்கிகளைப் பற்றி வானதி சீனிவாசன் பேசுவாரா? வட இந்தியாவிலுள்ள இந்துக் கோவில்களில் ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா?

மேலும் மக்களின் மத உணர்வையும் நம்பிக்கையையும் தேர்தலின்போது பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்துக் கோவிலிலும் முக்கிய, முக்கியமல்லாத பண்டிகை நாளையும்  நேரத்தையும் திட்டமிட்டு நீட்டித்து, அதன் பொருட்டு இலட்சக்கணக்கில் செலவு செய்து வரும் சக்திகள், வேலையற்ற இளைஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியையாவது செலவிடுமா?

 இவற்றையெல்லாம்விட முக்கிய விஷயம், கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆண்டுப் பிறப்பான ஜனவரி முதல் நாளன்று  தமிழக இந்துக் கோவில்களில் சிறப்புப் பூசைகள், சிறப்பு அர்ச்சனைகள் ஆகியன நடத்தப்படுகின்றன என்பதல்லவா? இவை எந்த ஆகம விதிக்குள் வருகின்றன?,

‘மிலேச்சன்’ என்று சங் பரிவாரம் கூறிவரும் வெள்ளையன் கொண்டு வந்ததுதான் ஆங்கில நாள்காட்டி. ’தமிழ் வருஷப் பிறப்பு’ என்று தமிழர்களின் ஆண்டுகளை அறுபதாண்டுகளுக்குள் திரும்பத்திரும்பக் கொண்டு வரும், நேர்கோட்டில் செல்கின்ற வரலாற்றை மீண்டும் மீண்டும்  அறுபதாண்டுகளுக்குள் முடக்கிவிடும்  திட்டமும் அந்த அறுபதாண்டுகளின் பெயர்களும்  எப்படி வந்தன என்ற புராணக் கதையைத்  தங்கள் மேடைகளில் எடுத்துச் சொல்ல சங்கிகள் தயாரா?,

ஆகம விதிகளை அப்பட்டமாக மீறும் வகையில்,  ‘மிலேச்சன்’ கொண்டு வந்த கிரிகோரியன் ஆங்கில நாள்காட்டியின்படி ஜனவரி 1ஆம் தேதியைப் புத்தாண்டுப் பிறப்பாகக்  கொண்டாடுவதையும் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதையும்  கண்டும் காணாமல் இருக்கும் சங் பரிவாரத்தினருக்கு இப்போது கண்ணை உறுத்துவது அந்த நாள்காட்டியில் உள்ள ‘பிப்ரவரி 14’.

கடந்த பல்லாண்டுகளாக வட மாநிலங்களிலும், சங் பரிவாரத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், அரசின் மறைமுக ஆதரவு  பெற்ற கண்காணிப்புக் குழு குண்டர்கள், பூங்காக்களுக்கும் பிற பொது இடங்களுக்கும் சென்று அங்கு  உட்கார்ந்துகொண்டிருக்கும் அல்லது நின்றுகொண்டிருக்கும் இளம் காதலர்களை அடித்துத் துன்புறுத்துவதும் அவமானப்படுத்துவதுமான நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே.

ஆனால், தமிழகத்தில்  சங் பரிவாரத்தின் சூத்திர, தலித்  அடிமைகள்  உள்ள இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, வி.ஹெச்.பி., போன்றவை இன்னும் தங்கள் வடநாட்டு , கர்நாடக சகாக்களின் அளவுக்கு வன்முறையில் இறங்கியதில்லை என்றாலும், ‘ பிப்ரவரி 14 ‘ அன்று  உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ( ‘வாலெண்டின் நாள்’ என்று கூறப்படும்) ’ காதலர் தினத்’தை இழிவுபடுத்தும் வகையில் பல செயல்களைச் செய்து வந்தனர்.

அவற்றிலொன்றுதான், பிப்ரவரி 14 அன்று   கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் செயல். நமக்கு அதில் ஆட்சேபணை இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றே கருதினோம். இப்போது ஒன்றிய அரசாங்கமே அந்த வேலையை – சற்று நாகரிகத்துடன் – எடுத்துக் கொண்டுவிட்டது.

அதாவது கழுதைக்குப் பதிலாக பசு. ஒன்றிய அரசாங்கத்தின் விலங்குகள் நல வாரியம் சில நாள்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கை,   இந்தியாவிலுள்ள ’பசு நேசர்கள்’, வேதகாலத்திலிருந்து இன்றுவரை இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் பசுவை  கட்டியணைத்துக் கொள்ளும் நாளாக பிப்ரவரி 14ஐக் கொண்டாட வேண்டும் என்று ‘மிலேச்சர்கள்’ கண்டுபிடித்த  கணிணி, தட்டச்சு, மின்னணு சாதனங்கள் மூலம் அறிவித்தது.

அதேபோன்ற ‘மிலேச்ச’ சாதனங்கள் மூலம் சங் பரிவாரம் அந்த செய்தியைப் பரப்பி வருகிறது. மக்களின் வாழ்வாதாரங்களிலொன்றான பசு மட்டுமல்ல, காளை மாடுகளும் பொங்கல் நாளில் தமிழர்களால் சிறப்புச் செய்யப்படுகின்றன. எருமைகளை இழிவாகக் கருதும் சங்கிகளும் பார்ப்பனர்களும்  தாங்கள் பயன்படுத்தும் ‘ஆவின்’ போன்ற பால்களில் எருமைப் பாலும் உள்ளது என்பதை அறியாமலா இருக்கிறார்கள்?,

பொங்கல் போன்ற அறுவடைத்  திருநாள்களைக் கொண்டாடும் பிற மாநிலத்தவரும் பசுவைப் போற்றுகிறார்கள். எனவே பசுவைக் கொண்டாடுவது  சங்கிகளின் கண்டுபிடிப்பல்ல என்றாலும், ஒரு பசு மலடாகவோ, வயதானதாகவோ ஆகிவிட்டால் அவற்றை கசாப்புக் கடைகளுக்கு , அல்லது சங் பரிவாரத்தின் மிரட்டல்களுக்குப் பயந்து ‘கோசாலை’களுக்கு அனுப்பிவிடுகின்றனர் அதன் உரிமையாளர்கள் . ஆக, அவர்களும்கூட எல்லாக் காலத்திலும் பசுவை வணங்குவதில்லை. 

இனி, வேத காலத்திலிருந்து பசு புனிதமானதாகவும், ‘காமதேனு ‘ என்ற கடவுளாகவும் இந்துக்களால் கருதப்பட்டு வந்துள்ளது என்ற ஒன்றிய அரசாங்கத்தின் கூற்றைப் பரிசீலிப்பதற்கு முன்,  நகரங்களில் வசிக்கும் ‘பசு நேயர்கள்’ ஒன்றிய அரசாங்கத்தின் அறிவுரையை எப்படிக் கடைப்பிடிக்கப் போகிறார்கள் என்ற கவலை  என்னை ஆட்டிவந்ததைச்  சொல்லியாக வேண்டும்.

நகர்ப்புறப் ’பசு நேயர்கள்’. ஒன்று கணிசமான எண்ணிக்கையில் இருக்கமாட்டார்கள் அல்லது அப்படிப் போதுமான எண்ணிக்கையில் உள்ள ’பசு நேயர்கள்’ கட்டியணைப்பதற்குத் தேவையான அளவுக்குப் பசுக்கள் நகர்ப்புறங்களில் இருக்காது. எனவே  இந்த பிரச்சினையை ஒன்றிய அரசாங்கம் எவ்வாறு தீர்க்கப் போகிறது என்ற கவலையால் என்னால் இரண்டு நாள்களாகத் தூங்க முடியவில்லை.

ஒன்றிய அரசாங்கம்,   கிராமப்புறங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பசு மாடுகளை நகரங்களுக்கு ஓட்டிக்கொண்டு வந்து  கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகக் கருதப்படும் ‘ பசு நேயர்கள்’ அவற்றைக் கட்டியணைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் அதற்கான ‘லாஜிஸ்டுகள்’ என்ன? போக்குவரத்து நெரிசலை எப்படிச் சமாளிப்பது? பலவிதமான நோய்கள் நிலவிவரும் நகர்ப்புறங்களுக்குத் தங்கள் பசு மாடுகளை ஓட்டிச்செல்ல கிராமப்புறத்தினர் விரும்புவார்களா?,

இதற்கு மாற்றாக, நகர்ப்புறங்களில் கணிசமாக உள்ள ‘பசு நேயர்கள்’ நாட்டுபுறங்களுக்குக் கால்நடையாகவோ அல்லது வாகனங்களிலோ ஓட்டிச் செல்லப்படுவார்களா?  அப்படியானால் எந்தெந்த கிராமங்களுக்கு?  திடீரென்று  தங்கள் கிராமங்களுக்குப் படையெடுத்து வரும் நகர்ப்புற  ‘பசு நேயர்களை’ கிராமவாசிகள்  வரவேற்பார்களா அல்லது வெறுப்பார்களா?  எப்படியிருந்தாலும் பிப்ரவரி 14  அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்படுமா?,

இந்தக் கேள்விகள் என்னைத் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நான் ’பசு நேயன்’ மட்டுமல்ல; கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரையும்   நேசிப்பதுடன் மட்டுமல்லாது வள்ளலார் போல வாடிய  பயிரைக் கண்டாலே  வாடுபவன்.  அனைத்து  உயிர்ராசிகளையும் நேசிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரின் பெளத்த  ’மைத்ரி’ கொள்கையைப் பின்பற்றுவனும்கூட. ஆனால், ‘பிளஷ் அவுட்’ கழிப்பறை  வைத்தால் மலத்தில் இருக்கும் புழுக்கள் அழிந்துவிடும் என்றும், எனவே,  மனிதக் கரங்களால்தான் மலம் அள்ளப்பட்டு குழிகளில்  தள்ளப்பட  வேண்டும் என்றும்  கூறுமளவுக்குச் சென்றுள்ள குஜராத் சமணர்களைப் போன்ற ‘ஜீவோபுகாரி’ அல்ல.

நற்பேறாக என் தூக்கத்தைக் கெடுத்து வந்த கேள்விகளிலிருந்து என்னைக் காப்பாற்ற ஒன்றிய அரசாங்கத்தின் விலங்கு  நல வாரியமே வந்துவிட்டது. அதாவது பிப்ரவரி 14ஆம் நாளை பசுவைத் தழுவிக் கொள்ளும் நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அறிவித்துவிட்டது.  இந்தத் தலைகீழ் மாற்றத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதேவேளை கழுதைத் திருமணங்கள் இந்த ஆண்டும் தொடர்ந்து நடக்குமா என்பதும் தெரியவில்லை.

எனினும், வேதகாலத்திலிருந்தே பசு புனிதமானதாகக் கருதப்பட்டு வருவதாகச் சொல்லப்படுவதைச் சற்று கவனிப்போம்.  இந்தக் கருத்தை மறுப்பவர்கள் எல்லோரும் ‘மிலேச்ச’க் கொள்கைகளான மார்க்ஸியத்தையோ, நாத்திகத்தையோ கடைப்பிடிப்பவர்கள், தேச விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு   மார்க்ஸிய அறிஞர் டி.என்.ஜா  தக்க ஆதாரங்களுடனும் ஆழ்ந்த புலமையுடனும்  எடுத்துரைத்த கருத்துகளை முன்வைக்க மாட்டேன்.

மாறாக, வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள்,  ஸ்ருதிகள்,ஸ்மிரிதிகள் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தவரும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றிலும்கூட தனது கருத்துகளும் விளக்கங்களும் மேற்கோளாகக் காட்டப்படும் பேறு பெற்றிருந்தவருமான காலஞ்சென்ற மகாராஷ்டிர அறிஞர் பி.வெ.கானே (P.V.Kane), 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த வங்காள அறிஞர்  ராஜேந்தர்லால் மிதர (Rajendralal Mitra), ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்த முக்கியப் பிரமுகர்களிலொருவரும் அதன் அதிகாரபூர்வமான ஆங்கில ஏடான ‘ தி ஆர்கனைஸரின்’ நீண்டகால ஆசிரியராக இருந்தவருமான கே.ஆர். மல்கானி (K.R.Malkani) ஆகியோரும்கூட பசுக்களும் மாடுகளும் எருமைகளும்  உணவுக்காகவும் வேள்விகளுக்காகவும் கொல்லப்படுவது  வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ராஜேந்திர்லால் மித்ர, பிறப்பால் காயஸ்தர் என்ற இருபிறப்பாளர்தான் என்றாலும், அவர் வேத , புராணங்களிலுள்ள கட்டுக்கதைகளை விமர்சித்தவர் என்பதால்  இந்து தேசியவாதிகளால்  முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டார்.  ஆர்.கே. மல்கானி,   எல்.கே.அத்வானியைப் போலவே இப்போதைய பாகிஸ்தானிலுள்ள ஓர் ஊரில் பிறந்தவர். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை  தேசியமயமாக்குவதை ஆதரித்தவர்.

மாநில அரசாங்கங்களைக் கலைப்பதற்காக ஒன்றிய அரசாங்கம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 356ஐப் பயன்படுத்தி வந்ததை  எதிர்த்தவர்;  பாபர் மசூதியை கர சேவகர்கள் இடித்துத் தள்ளியதை விமர்சித்தவர். எனவே அவர் சங் பரிவாரத்தினரால் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் பி.வி.கானெ, டி.டி.கோசம்பியைப் போலவே பிறப்பால் பார்ப்பனர். அதிலும் பார்ப்பனர்களில்  மிக உயர்ந்த இடத்தை வகிப்பதாகச் சொல்லப்படும் சித்பவன் பார்ப்பனர். 

டி.என்.ஜா,  பி.வி.கானெ ஆகியோர்களின் ஆதாரபூர்வமான கருத்துகளை மறுதலிக்கும் ஆள்களுக்குப்  சங் பரிவாரத்திடம் பஞ்சமா இருக்கிறது? அவர்களிலொருவரும் பசுப் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணியாளருமான சந்தியா ஜெயின் (Sandhya Jain) கூறுகிறார்:  வேதங்களில் அந்தந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப ’பசு  (gau)’ என்ற சொல்லுக்கு  பசு என்ற விலங்கு,  நீர், சூரியக் கதிர்கள், கற்றறிந்தோர்  , பிரித்வி (தெய்விகத் தாய்), அக்னயா (aghnya) , அதிதி (Aditi) என்ற பல பொருள்கள் உள்ளன.  பசுவைக் குறிக்கும் கடைசி இரண்டு சொற்களிள் பொருள் ‘கொல்லப்படக்கூடாதது’ என்பதாகும். இறைச்சி உண்பவர்கள், இறைச்சி உண்ணாதவர்கள் உள்ளிட்டதாக வேதகாலச் சமுதாயம் பலதரப்பட்டதாக இருந்தபோதிலும், பசுவை உணவுக்காகக் கொல்லுதல் என்பது இருக்கவே இல்லை. 

இந்த ’மகாபுருஷர்’,  தனது வாதத்தில் தர்க்கம் அடிபட்டுப் போகிறது என்பதை உணரவேயில்லை. ’பசு’ என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்கிற அவர், அதே மூச்சில்  அதற்கு  ‘கொல்லப்படகூடாதது’ என்ற ஒரே பொருள் இருப்பதாக வாதிடுகிறார். 

இனி, சங் பரிவாரம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களால் உயர்த்திப்  பிடிக்கப்படும் பாரதியாரை – ”காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே”என்று பாடியதற்காக – புறக்கணிக்கும் இயக்கத்தைத் தொடங்குவதுதான்!

சுருக்கமாகச் சொல்வதென்றால் மோடி அரசின் ஊழல்கள், வெறுப்பு அரசியல், வெளிநாட்டுக் கொள்கை ஆகியன பற்றிய விமர்சனங்கள் வரும்போதெல்லாம், மத, பண்பாட்டுப் பிரச்சினைகளை எழுப்பி, மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி, அவர்களது கவனத்தைத் திசை திருப்புவதுதான் சங் பரிவாரத்தின் நீண்டகால உத்தி.

அதற்குத்  துணை போகின்றவையாக உள்ளவை இந்திய  முதன்மை ஊடகங்களில் மிகப் பெரும்பாலானவை. பிபிசி ஆவணப் படம், அதானி ஊழல் ஆகியவற்றுக்குப் பெரும் முக்கியத்துவம் தராத  அவை, அந்த விஷயங்களைப் பற்றி ஒரு சொல்கூடப் பேசாமல் எதிர்க்கட்சிகளின் மீது தரம் தாழ்ந்த தாக்குதலை நடத்திவிட்டு அவை இறைக்கும் சேற்றிலிருந்து தாமரை மலரும் என்று கூறிய மோடியின் சொற்ஜாலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.

பன்னூற்றாண்டுக் காலம் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனியத்துக்கும்  செயலாலும் சொல்லாலும் அடிமைப்பட்டிருந்த சூத்திரர்கள் பலருக்கு  சுயமரியாதை  உணர்வை ஊட்டியதுடன் அவர்கள் கல்வியிலும்,  அரசாங்க அலுவல்களிலும், பண்பாட்டுத் தளத்திலும், அரசியல் களத்திலும், பொருளாதரத் துறையிலும்   முன்னேற்றம்  காணத் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார் பெரியார்.

ஆனால் அந்த சுயமரியாதை உணர்வு பெற்றவர்களின் இன்றைய தலைமுறையினரில் கணிசமான பகுதியினர் பார்ப்பன சங்கிகளுக்கு அடிமையாகிவிடுவதைப் பெருமையாகக் கருதி தங்கள் தலையில் தாங்களே சேற்றை வாரி இரைத்துக் கொள்வதைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். அதனால்தான் சில நாள்களுக்கு முன்பு கோவையில் பிராமணர் சங்கத்தில் உரையாற்றிய ‘கலை மாமணி’ திருச்சி கல்யாணராமன் என்பவர், நாடார் சமூகத்தினரைப் பற்றி மிக இழிவான கருத்துகளைக் கூறினார்.

அதற்குப் பல தரப்பிலிருந்து வந்த கண்டனக் குரல்களின்  காரணமாகவோ, அந்த சமூகத்தினரில் கணிசமானோர் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியாக இருப்பது அவருக்கு நினைவூட்டப்பட்டதன் காரணமாகவோ ‘ மன்னிப்பு’க் கேட்டுக் கொண்டார். ஆனால் அதிலும் ஒரு பொய்யைக் கூறினார். அதாவது  தான் ‘ நாடார் சமூகத்தினரைப்’ பற்றி அல்ல, ’பக்தியை நாடார்’ பற்றியே அப்படிக் கூறியதாகப் புளுகினார்!

தந்தை பெரியாரால் சுயமரியாதை உணர்வு ஊட்டப்பட்டவர்களின் சந்ததிகளில் பலர் இன்று சூடு சொரணையற்றவர்களாகப் போய்விட்டனர் என்றால், தற்போது வடநாட்டில் உள்ள சூத்திரர்கள், தலித்துகள் அடங்கிய ‘பகுஜன்’களுக்கு சூடும் சொரணையும் ஏற்படுத்தி வருவதற்கும்கூட ஒரு பார்ப்பனரே காரணமாகியுள்ளார் என்பது  ஒரு வரலாறு முரண்நகை.

அவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மொகலாயப் பேரரசர்கள் அக்பர்-ஜஹாங்கிர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த துளசிதாஸ். 2500 ஆண்டுகளுக்கு முன் வால்மிகியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும்  ‘ இராமாயண’  காப்பியத்தைத் தழுவி , 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துளஸிதாஸ்  உத்தரப்பிரதேசத்தில் இன்றும் புழங்கிவரும் அவதி மொழியில் எழுதிய ’ராமசரித்திரமானாஸ்’ ( ராமரின் வரலாறு)   இந்துத்  துறவிகளால் கொண்டாடப்பட்டும், சங் பரிவாரத்தால் ’புனித நூல்’ என்று மிகவும் போற்றப்பட்டும்  வந்துள்ள  ஒரு புனைவிலக்கியம்.ண

வால்மிகி இராமாயணத்தில் இராமன்  சில பலகீனங்களைக் கொண்ட மனிதனாகச் சித்திரிக்கப்படுவதற்கு மாறாக, துளசிதாஸின் நூலில் அவன் எல்லாம் வல்லவனாக, அனைத்தும் அறிந்தவனாக, பிரமனுக்கு நிகரானவனாகச் சித்திரிக்கப்படுகிறான்.

அக்பர்-ஜஹாங்கிர் ஆகியோரின் மொகலாயப் பேரரசு இருந்த காலத்தில் எழுதப்பட்ட அந்த நூலில்,   நம் நாட்டின் பண்பாட்டைச் சீரழித்ததாகவும் சாதி வேறுபாடுகளை  உண்டாக்கியதாகவும்  சங்கிகளால் குற்றம் சாட்டப்படும் மொகலாய மன்னர்களைப் பற்றிய ஒரு கடுஞ்சொல்கூட இல்லை. மாறாக,  மொகலாயர் ஆட்சிக் காலத்தில்  வேளாண் நிலங்களைப் பெருக்கவும், அதன் பொருட்டுக் காடுகளை அழித்து அவற்றைத் திருத்தி விளைநிலங்களாக ஆக்கவும்,  வேறு பல கடினமான உடல் உழைப்புச் செய்யவும் விதிக்கப்பட்டிருந்த,  அன்று ‘சூத்திரர்கள்’ என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தலித்துகளும் பழங்குடியினரும் அவர்களோடு சேர்த்து  பெண்களும்தான் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

அப்படி இழிவுபடுத்தும் சொற்களை ‘ இடைச் செருகல்’ என்று கூறுவதற்கு சங்கிகளாலும்கூட முடியவில்லை    வேளாண் உற்பத்தியில் கடும் உழைப்பைச் செலுத்திய சூத்திரர்கள் மீது மொகலாய ஆட்சி  தாங்க முடியாத வரிகளையும் விதித்தது. துளசிதாஸ் வேளாண்மை தொடர்பான உழைப்பையும் தொழில்களையும் ‘ஆன்மிகவகையில் மரியாதைக்குரியனவல்ல’ என்றும், மாறாக சூத்திரர்களின் இழிவான  தொழில் என்றும் எழுதினார்.

அந்த ‘சரித்திரத்தில்’ உள்ள  கீழ்த்தரமான வரிகள்… )ढोल गवाँर सूद्र पसु नारी। सकल ताड़ना के अधिकारी। (ḍhōla gavāomra sūdra pasu nārī. sakala tāḍanā kē adhikārī). “A drum, an illiterate,  a Shudra, a beast and a woman — all deserve punishment”).”பறை, சூத்திரன், விலங்கு, பெண் ஆகிய அனைவரும் தண்டனைக்குரியவர்களே” என்பதுதான் இதன் பொருள். யாரால் விதிக்கப்படும் தண்டனைக்கு? மொகலாய மன்னரால் விதிக்கப்படும் தண்டனைக்கல்ல; ராமனால் வழங்கப்படும் தண்டனைக்குத்தான்!

இப்படி அவர் எழுதுவதற்குக் காரணம், எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் பார்ப்பன அறிவாளிகள் மொகலாய மன்னர்களின் அரண்மனையிலும் உயர் பதவிகளில்  இருந்ததுதான். அவர்களிலொருவர் அக்பரால் ‘ஒன்பது நவரத்தினங்கள்’ என்றழைக்கப்பட்டவர்களில் ஒருவரான பீர்பால். அவர் சரஸ்வத் பார்ப்பனர். இன்னொருவர் அக்பரின் நிதியமைச்சராக இருந்த தோடர் மால்.  வருண தர்ம முறைப்படி  இருபிறப்பாளர்களாகக் கருதப்படும் காய்ஸ்த வகுப்பைச் சேர்ந்த அவர்,  மொகலாயப் பேரரசின்  ஆலோசகராகவும்  (Vakil-us-Sultanat) இருந்தார்.

அக்பரின் பேரரசின் 15 நிர்வாக அலகுகளுக்கான (Subas) திவான்களாக (இன்றைய மாநில முதலமைச்சர்கள் போன்றவர்கள்) அவரால் நியமிக்கப்பட்டவர்கள் நிச்சயம் பார்ப்பனர்கள், இராஜபுத்திரர்கள், காயஸ்தர்கள் ஆகிய இருபிறப்பாளர்களாகத்தான் இருந்திருப்பர். மொகலாயர்கள் – இந்து இருபிறப்பாளர்கள் ஆகியோரின்  ஆட்சியின் கீழ் சூத்திரர்கள் கடுமையான அளவுக்கு நில வாரத்தையும் இதர வரிகளையும் செலுத்த வேண்டியிருந்தது.

மொகலாயர்களின் வரலாற்றை ஆழமாக ஆய்ந்தறிந்து நூல்களை எழுதிய இர்ஃபான் ஹபீப் போன்ற மார்க்ஸிய அறிஞர்களின் கண்களுக்கும்கூட மேற்சொன்ன ஆளும் வர்க்கக் கூட்டணியின் கீழ் சூத்திரர்கள், தலித்துகள், பெண்கள் ஆகியோருக்கு இருந்த பண்பாட்டு- பொருளாதார – சமுதாய நிலைமைகள்  தெரியவில்லை என்று காஞ்ச்சா அய்லய்யா ஷெப்பர்ட் கூறுகிறார்.  இந்த சமுதாயச் சூழ்நிலையில்தான் துளசிதாஸ் இராமனின் சரித்திரத்தை எழுதினார்.

முஸ்லிம்களின் ஆட்சி பார்ப்பனர்களுக்கு விரோதமானதாக இருந்திருந்தால், துளசிதாஸ் முஸ்லிம் ஆட்சியாளர்களையோ முஸ்லிம்களையோ தண்டிக்கும்படி இராமனை பிரார்த்திருப்பார். ஆனால் அவருடைய ‘சரித்திரத்தில்’ முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கோ அல்லது அக்பருக்கோ எதிராகக் கூறப்பட்டுள்ள  ஒரு வரிகூட இல்லை. ஆனால், சூத்திரர்கள், தலித்துகள், பார்ப்பனப் பெண்கள் உள்பட அனைத்துப் பெண்கள் ஆகியோரைத் தண்டிக்கும்படி இராமனை வேண்டுகிறார்.

சங் பரிவாரத்தினரைப் பொறுத்தவரை துளசிதாஸ்தான் தீர்க்கதரிசி; அவரது நூல்தான் ‘புனித நூல்’. துளதிதாஸ் காலத்தில் இருந்த சூத்திரர்களும் சண்டாளர்களும்தான் இன்றைய அரசமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் பட்டியல் சாதியினராகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பொருள் உற்பத்திச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள சாதியினர் அனைவரும் உடல் உழைப்பில் ஈடுபடாத இரு பிறப்பாளர்களுக்கு (பார்ப்பனர், சத்திரியர், காயஸ்தர், பனியாக்கள் என்று இன்று அழைக்கப்படும் வைசியர்கள்) ஆகியோருக்கு என்றென்றும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன வருணாசிரம சங்கிகளின் திட்டம்.

அத்திட்டம்தான் சமஸ்கிருத நூல்கள் பெரும்பாலனவற்றில் காணப்படுகிறது. அந்த வருணதர்மச் சிந்தனை பார்ப்பனரல்லாத, சத்திரிய உயர்சாதியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடமும் மேலோங்கியுள்ளது. அதனால்தான் அவருக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரும் பிற்பட்ட சூத்திர சாதியைச் சேர்ந்தவருமான அகிலேஷ் சிங் யாதவ் அந்த வீட்டைக் காலி செய்த பிறகு,  பசும்பாலையும் பசு மூத்திரத்தையும் அந்த வீடெங்கும் தெளித்து அதைத் ‘தூய்மைப்படுத்திய’ (Shuddikaran) பிறகே அங்கு குடியேறினார் அந்த யோகி.

சங் பரிவாரத்தின் நடைமுறை இப்படி இருக்க,   அதன் பிரசாரமோ சூத்திரர்களும் தலித்துகளும் இந்துக்கள்தான் என்றும் அவர்கள் மாபெரும்  இந்து சமுதாயத்தின்  பிரிக்க முடியாத பகுதி என்றும்  கூறுகிறது. சூத்திரர்களிலும் தலித்துகளிலும்  சூடு சொரணையற்றவர்கள் ஒரு சில சலுகைகளுக்காக  சங்கிகளுடன் கைகோர்த்துக் கொண்டு மதச் சிறுபான்மையினர் மீது வன்முறை செலுத்தவும் பார்ப்பன வருண தர்ம ஆட்சி நிலைத்து நிற்கவும் பாடுபடுகிறார்கள்.

சூத்திரர்களும் சாதிவாரியாகப் பிளவுபட்டிருப்பதால் அவர்களால் ஒன்றுதிரண்டு பார்ப்பனர்களையும் பிற இரு பிறப்பாளர்களையும் எதிர்க்க  முடியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் ஜாட்டுகள் சத்திரிய அந்தஸ்து கோரினர். ஆனால் அவர்களுக்குள்ள இடம் அதுவல்ல என்று ஆதித்யநாத் தெளிவாகக் கூறிவிட்டார்.

தமிழகத்திலும் சில பிற்பட்ட சாதித் தலைவர்கள் தங்கள் சாதியினர் சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும்  நீண்டகாலமாகக் கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவருக்காவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநிலத் தலைவராகவேனும் ஆக முடியுமா?

துளசிதாஸின் பார்ப்பனியத்தையும் சூத்திரர்கள், தலித்துகள், பெண்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பையும் எடுத்துச் சொன்னதற்காக காரணத்துக்காக பிகாரின் கல்வி அமைச்சர் சங்கிகளின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்.  அவருக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் தேஜேஸ்வி யாதவ் பேசி வருகிறார். இந்திய  சமுதாயத்தின் மிகப் பெரும்பகுதினராக  உள்ள பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோரை இழிவுபடுத்தும் பகுதிகளை துளசிதாஸின் நூலிலிருந்து நீக்க வேண்டும் என்ற கிளர்ச்சி உத்தரப் பிரதேசத்திலும் உருவாகியுள்ளது.

 அங்குள்ள முக்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவரும் சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான சுவாமி பிரசாத் மவுரியா, ராமசரித்மனாஸின் சில வசனங்கள் சமூகத்தின் பெரும்பகுதி மக்களை சாதியின் அடிப்படையில் ‘இழிவுபடுத்துவதாக’ குற்றம் சாட்டி, அவற்றைத் ‘தடை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினார். அவருக்கு எதிராக சங்கிகளும், சாமியார்களும்  ஒரு போராட்டத்தை நடத்தியதன் காரணமாக கடந்த ஜனவரி 29இல்  அனைந்திந்திய பிற்படுத்தப்பட்டோர் மகாசபை,  மவுரியாவுக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தை நடத்தியது.

துளசிதாஸின் நூலில் ‘பெண்கள் மற்றும் தலித்துகள் மீதான ஆட்சேபனைக்குரிய கருத்துகள்’ உள்ள பக்கங்களின் நகல்களை அந்த மகாசபை உறுப்பினர்கள் எரித்தனர். இதன் விளைவாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த  சலீம், சத்யேந்திர குஷ்வாஹா ஆகியோரை உத்தரப்பிரதேச அரசு கடந்த பிப்ரவரி 6இல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (NSA ) கைது செய்துள்ளது. வேறு பலர் மீதும் மீதும் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்மா, மறுபிறவி, முன் ஜென்ம வினை, அத்வைதம் கூறும் மாயாவாதத் தத்துவம் ஆகியனவற்றை வலியுறுத்தும் துளஸிதாஸின் நூலில் காணப்படும் வெறுப்புக்குரிய வேறு சில கருத்துகள் பின் வருமாறு: (1) கீழ்சாதி மக்கள் கல்வி கற்றால் பாம்பு குடித்த  பாலைப் போல அவர்கள் உடலிலும் நஞ்சேறிவிடும்; (2)  ஒரு பார்ப்பனன், தீய பண்புகள் நிறைந்தவனாக இருந்தாலும் அவன் வணங்கப்பட வேண்டும். அதேவேளை கீழ்சாதிக்காரனொருவன் வேதவித்தகனாக இருந்தாலும்கூட அவன் மதிக்கப்படத் தக்கவனல்ல.

துளதிதாஸின் நூலிலுள்ள வெறுக்கத்தக்க பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை  இந்தி பேசும் வட மாநிலங்களிலுள்ள தலித்துகள், பிற்பட்ட சாதியினர், பெண்கள் ஆகியோர்  ராமனுக்கு எதிராக அணிதிரளக்கூடும் என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கவ்வியதால், அதன் தலைவர் மோகன் பகவத் தலையிட்டு உண்மையைப் பூசி மெழுகும் வேலையில்  ஈடுபட்டார்.

அதாவது கடவுள்  எவருக்கும்  உயர்வு தாழ்வு கற்பிக்கவில்லையென்றும் அது சில ‘பண்டிட்டுகள்’ செய்த தவறு என்றும் விளக்கம் கூறினார். அந்தப் ‘பண்டிட்டுகள்’ யார் என்பது அவருக்கும் தெரிந்ததுதானே!.

தரவுகள்

 1.Sandhya Jain,Did Vedic People really eat cow –Part 1,  https://ebooks.iskcondesiretree.com/pdf/Voice_of_Cows/Voice_of_Cows_-_Newsletter_Vol-01_-_Issue-05_-_2010-02.pdf (Accessed on 10.02.2023).

2.Kancha  Ilaiah ShepherdWhy Did Tulsidas Ask His God Rama To Punish Shudras And Women Not Mughal Rulers?.

கட்டுரையாளர் குறிப்பு

The maneuvers of Modi and the Sangh Parivar to hide the facts V N Rajadurai

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

40 நாட்களில் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம்: இந்தியாவின் நிலை என்ன?

இழப்பும் துக்கமும்!

குறட்டை பற்றி பேசும் ‘குட் நைட்’!

துருக்கி சிரியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *