படம் ரிலீசாகும்போது ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்காமல் 2,000 ரூபாய்க்கு விற்பவர்களால் நாட்டை பாதுகாக்க முடியுமா? என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாங்காட்டில், மாங்காடு வடக்கு நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 3) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு காஞ்சிபுரம் வடக்கு திமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாளை, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடித்த ‘தி கோட்’ படம் வெளியாகிறது. இந்த படத்துக்கான டிக்கெட், 500 ரூபாய் தொடங்கி 1000 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
இந்தசூழலில் தான் அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னதாக, புது புது ஆட்கள் எல்லாம் வருவார்கள். சத்தமாக பேசுவார்கள். குரல் கொடுப்பார்கள், கூட்டம் எல்லாம் நடத்துவார்கள். ஆனால் தேர்தலுக்கு பிறகு ஆளே இருக்கமாட்டார்கள்.
ஆனால் நமது கட்சியில் அப்படி கிடையாது… வாழ்வோ சாவோ… வெற்றியோ… தோல்வியோ மக்களோடு இருக்கிற கட்சி திமுகதான்.
மற்றவர்கள் எல்லாம் புதிதாக ஒரு கட்சி பேரை கொடுத்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுககாரர்களுக்கு மட்டும் தான் உண்டு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு படத்துக்கு ரூ.200, 250 கோடி சம்பளம் வாங்குகிறவர்கள், படம் ரிலீஸ் ஆகும் போது தனது ரசிகர்களுக்கு இலவசமாகத்தானே டிக்கெட் கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இவர்கள் நாட்டை பாதுகாக்க முடியுமா?
ஏதோ கடந்த வருடம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள். குன்றத்தூரில் 15 ஆண்டுகளாக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சிலர் கட்சி ஆரம்பித்ததால் இப்போது பரிசு கொடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் 10, 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும் ஊக்கத்தொகையும் ஆண்டுதோறும் கொடுத்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கட்சி பெயரை அறிவித்த விஜய் கடந்த மாதம் கொடியை அறிமுகம் செய்தார். வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு இன்னும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
இந்த சூழலில் தான் அமைச்சர் தா.மோ. அன்பரசன் இவ்வாறு பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கே? எப்போது?: ஐசிசி அறிவிப்பு!
தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?