2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ட்விட்டரில் மட்டும் அரசியல் பேசி வந்த கமல்ஹாசன், கட்சி தொடங்கப் போகிறாரா என பல அனுமானங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இந்த அனுமானங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்த அவர், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று கட்சி துவங்கி மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்தி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரை அறிவித்தார்.
தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்த திராவிடம் vs தேசியம், இடது vs வலது என்ற அரசியல் கோட்பாட்டு விவாதங்களுக்கு மாற்றாக மய்யம் என்பதை முன்வைத்தார் கமல். நான் இடதும் அல்ல வலதும் அல்ல மய்யம் என்பதே தனது கட்சியின் விளக்கமாகக் கூறினார். இந்த பெயரே பல விவாதங்களுக்கு உள்ளானது. அரசியல் நிலைப்பாட்டிலும், கொள்கையிலும் மய்யம் என்ற ஒன்று எப்படி இருக்க முடியும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
அதற்கு ஏற்றார்போலவே, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் எதுவும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மக்களை சந்தித்து ஆதரவு வழங்கியது ஒன்றுதான் மக்கள் பிரச்சினைக்காக கமல்ஹாசன் களத்திற்கு வந்த நிகழ்வு. மேலும் கட்சி ஆரம்பித்த பிறகும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து பங்கேற்று வந்ததும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
கவனிக்க வைத்த 2019 பாராளுமன்றத் தேர்தல்!
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கியது. பங்கெடுத்த முதல் தேர்தலிலேயே 16 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. தமிழ்நாட்டு அரசியலில் எடுத்த எடுப்பிலேயே 3.7% வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றது மக்கள் நீதி மய்யம். சென்னை, கோவை மற்றும் மதுரை போன்ற நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றது. நகர்ப்புறப் பகுதிகளில் பல இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. ஆனால் அதே சமயம் ஊரகப் பகுதிகளில் குறைவான வாக்குகளையே பெற்றிருந்ததும் கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்பட்டது.
கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட மகேந்திரன் 1,45,104 வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த 21 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவித்தது. கிராம சபைகளை வலுப்படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டு கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த கமல், ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தது பல கேள்விகளுக்கு உள்ளானது.
சட்டமன்றத் தேர்தலில் சறுக்கல்!
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துக் களம் கண்டது மக்கள் நீதி மய்யம். ஆனால் அத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தினால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை மனதில் வைத்து கோவையில் களமிறங்கினார் கமல்ஹாசன். கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தொகுதியில் மட்டும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்த கமல்ஹாசன், இறுதியில் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். தான் மட்டுமாவது வெற்றி பெறுவோம் என இறுதி வரை வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்திருந்த கமல்ஹாசன், தோய்ந்த முகத்தோடு மையத்திலிருந்து வெளியேறினார்.
நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் 4 லட்சம் வாக்குகள் குறைந்து 12 லட்சம் வாக்குகளைப் பெற்றது மக்கள் நீதி மய்யம். வாக்கு சதவீதத்தில் ஒரு சதவீதம் குறைந்து 2.62% சதவீதமாகக் குறுகியது.
அடுத்தடுத்து வெளியேறிய நிர்வாகிகள்!
கமல்ஹாசன் தான் மட்டுமே தலைவர், எல்லா முடிவையும் நான் மட்டுமே எடுப்பேன் என தன்னிச்சையாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு வைத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். கோவை தொகுதியில் முக்கியப் பொறுப்புகளை நிர்வகித்து வந்த மகேந்திரன், கட்சியின் பொதுச்செயலாளரும் நேச்சுரல்ஸ் உரிமையாளருமான சி.கே.குமரவேல், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா, திருச்சியின் முக்கியப் புள்ளியான முருகானந்தம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் என அடுத்தடுத்து எல்லோரும் ‘கமல்ஹாசனிடம் ஜனநாயகம் இல்லை’ என குற்றச்சாட்டை வைத்துவிட்டு வெளியேறினர்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த கமல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள் என்ற ஒரு அறிக்கையுடன் வெளியே வந்தார். ”களையே தன்னை களையெடுத்துக் கொண்டதில் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி. இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான்” என்று அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அதிலிருந்து மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து இறங்கு முகத்தைத் தான் சந்தித்தது.
நகர்ப்புறத் தேர்தலில் பெரும் பின்னடைவு!
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். கட்சி சார்பில் போட்டியிட்ட ஒருவரால் கூட வெற்றி பெற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அரசியலில் பெரிதாக ஆக்டிவ் மோடில் இல்லாமல் இருந்தார் கமல்ஹாசன். அவரை அரசியல் மேடைகளை விட ட்விட்டரிலும், பிக் பாசிலுமே அதிகம் பார்க்க முடிந்தது.
விக்ரம் தந்த உற்சாகம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரும் வெற்றியை திரையுலகில் கமல்ஹாசனுக்கு பெற்றுத் தந்தது. அந்த உற்சாகத்தில் மீண்டும் கட்சிப் பணிகளை முடுக்கி விட்டார் கமல்ஹாசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிர்வாகிகள் கூட்டங்களையும் நடத்தினார். விக்ரம் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலினை புகழவும் தயங்கவில்லை.
ராகுல் காந்தியின் நடைபயணத்தில்…
இதுவரையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சமமாக விமர்சிக்கிறேன் என்று சொல்லி, அவர்களுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துவந்த கமல்ஹாசன், திடீரென ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் பங்கேற்பதாக அறிவித்தார். டிசம்பர் 24, 2022 அன்று டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்றார். ”நீங்கள் எதற்கு இந்த கூட்டத்தில் பங்கேற்கிறீர்கள் என பலரும் என்னிடம் கேட்டார்கள், நான் ஒரு இந்தியனாக இருப்பதால் இக்கூட்டத்தில் பங்கேற்கிறேன்” என்று அங்கு பேசினார். அத்தோடு நில்லாமல் ராகுல் காந்தியை கமல்ஹாசன் எடுத்த நேர்காணலும் யூடியூபில் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தல்!
இந்நிலையில் கடந்த 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு வழங்கினார் கமல்ஹாசன். அவரை ஆதரித்து நேரடியாக தொகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்டார். ”மதவாத சக்திகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடம்!
அதைத்தொடர்ந்து இந்தியா கூட்டணி உருவான பிறகு, கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடனும், இந்தியா கூட்டணியுடனும் பல சமயங்களில் நெருக்கம் காட்டிவந்தார். இரண்டு மக்களவை தொகுதிகள் வேண்டும் என்று திமுகவுடன் கமல்ஹாசன் நடத்திய பேச்சுவார்த்தை கடைசியில், மக்களவை தொகுதிகள் எதுவும் இல்லை என்ற இடத்திற்கு வந்து நின்றிருக்கிறது. எனவே வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக வேட்பாளர் யாரும் போட்டியிடப் போவதில்லை. கமல்ஹாசன் தனக்கான ஒரு ராஜ்யசபா சீட்டினை திமுகவிடம் பேசி பெற்றுக் கொண்டார். திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
பங்கெடுத்த முதல் தேர்தலிலேயே 3.7% வாக்குகளைப் பெற்றதுடன், நகர்ப்புற தொகுதிகள் பலவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தொடர்ந்து பல தேய்வுகளை சந்தித்ததால் 5 ஆண்டுகள் கழித்து இந்த மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டி இல்லை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் இப்படிப்பட்ட சறுக்கல்களை சந்தித்ததற்கு என்ன காரணம்?
அக்கட்சியிலிருந்து வெளியேறிய மகேந்திரன் சொன்னதைப் போல “Its My Party”, நான் மட்டுமே தலைவன் என்ற கமல்ஹாசனின் நிலைப்பாடுதான் காரணமா?
இடதும் அல்ல வலதும் அல்ல என்ற கொள்கைக் குழப்பம் காரணமா?
மக்கள் பிரச்சினைகளுக்குக் களம் காணாமல் ட்விட்டர் அரசியலில் காலத்தைக் கழித்தார் என்ற விமர்சனங்கள் தான் உண்மையானதா?
இவற்றுக்கு கமல்ஹாசன் தான் விடை காண முயல வேண்டும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவேகானந்தன்
சின்னப்பிள்ளைக்கு வீடு : அண்ணாமலை, உதயநிதி ரியாக்சன்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரை மிரட்டும் கல்வித்துறை அதிகாரிகள்?