கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளையே மீண்டும் கேட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் இன்று (பிப்ரவரி 29) 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி காலையில் சென்னை அறிவாலயத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி. பேசுகையில், “கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் (மார்ச் 1) கொண்டாட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா