impact of geo politics in space

விண்ணைத் தாண்டி வருவாயா? அமெரிக்கா Vs ரஷ்யா… Space மோதல்!

அரசியல் இந்தியா

வல்லரசு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை தங்களது படைக்களமாக பயன்படுத்தி வருவதையும் அதனால் ஏற்பட்டுள்ள பல உள்நாட்டுக் குழப்பங்களையும், போர்களையும் நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த நிலையில்,  மண்ணுலகில் மட்டுமல்ல, விண்ணைத் தாண்டி…  வெளி (impact of geo politics in space) வரை  தொடர்கிறது வல்லரசுகளின் ஆயுத அரசியல்.  இதைக் கடந்த வாரம் நடந்த  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணமுடிந்தது.

கடந்த (24/04/2024) நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஒரு வரைவு தீர்மானத்தை முன்மொழிந்தது.

அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களை விண்வெளியில் வைப்பதை தடை செய்யும் வகையில் ஏற்கனவே  விண்வெளி ஒப்பந்தம் நாடுகளிடையே கையெழுத்தாகியிருக்கிறது. அதில் உள்ள விதிகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த வரைவுத் தீர்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் கொண்டு வந்தன.

ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு இருக்கும் ’வீட்டோ பவர்’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா இந்த வரைவுத் தீர்மானத்தை எதிர்த்தது.

UNSC

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிகளின்படி நிரந்தர உறுப்பு நாடுகளான 5  நாடுகளில் எந்த ஒருவர் வீட்டோ மூலம் எதிர்ப்பு தெரிவித்தாலும் அந்த தீர்மானம் செல்லாது. அந்த வகையில் அமெரிக்கா, ஜப்பானின் தீர்மானத்தை ரஷ்யா தடுத்து நிறுத்திவிட்டது.

விண்ணைத் தாண்டி,   ‘வெளி’யில் ரஷ்யா செய்யும் சில முக்கிய சம்பவங்களைத் தடுப்பதற்காகத்தான் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை கொண்டுவந்தன. இதை அறிந்துதான் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் பெரும்பகுதியை சேதப்படுத்தும் அல்லது அழிக்கக்கூடிய அணுசக்தி சாதனத்தை (ASAT) ரஷ்யா உருவாக்கி வருவதாக ஏற்கனவே பல முறை பேசப்பட்டாலும்… கடந்த  பிப்ரவரியில் அமெரிக்க உளவுத்துறையும் நாசாவும் இணைந்து இதுகுறித்து வீரியமான எச்சரிக்கைகளை விடுத்தன.

“ரஷ்யா ஒரு புதிய மற்றும் மேம்பட்ட செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத அமைப்பைப் பின்பற்றுகிறது. இது விண்வெளியில் ஆயுதப் போட்டி பற்றிய புதிய கவலைகளை எழுப்பும்” என்று நாசா புகைப்படங்களோடு வெள்ளை மாளிகையை எச்சரித்தது.

இதையடுத்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம், “ரஷ்யா உருவாக்கி வருவது எதிர்ப்பு மற்றும் விரோதத்தோடு தொடர்புடையது. இது செயற்கைக் கோள் ஆயுதம். ரஷ்யா உட்பட 130 க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள விண்வெளி ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும்” என்று கூறினார்.

இந்த பின்னணியில்தான் அமெரிக்காவும், ஜப்பானும் விண்வெளியில் ரஷ்யாவின் செயற்கைக் கோள் எதிர்ப்பு சாதனத்தை எதிர்த்து தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்தன.

வாக்கெடுப்புக்கு முன் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் பேசும்போது, “ரஷ்யாவின் இந்த புதிய சாதனம் உலக நாடுகளின் செயற்கைக்கோள்கள் மற்றும் அவை வழங்கும் சேவைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். விண்வெளியின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ரஷ்யாவின் இந்த முயற்சி ஆபத்தானது. அணு ஆயுதத்தை வெளி சுற்றுப்பாதையில் வைப்பது முன்னோடியில்லாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஆழமான ஆபத்தானது. எனவே இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர் வாசிலி நெபென்சியா இந்தத் தீர்மானத்தை எதிர்த்து பேசும்போது,

impact of geo politics in space Russia

“அமெரிக்கா மற்றும் ஜப்பானின் நேர்மையற்ற நாடகம்தான் இந்தத் தீர்மானம். ரஷ்யாவை சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் தொடர்புடைய கடமைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய நாடாக சித்திரிக்க முயல்கிறது அமெரிக்கா. விண்வெளி பாதுகாப்பு பிரச்சினைகளை விவாதிப்பதற்கு பொருத்தமான மன்றம் இந்த பாதுகாப்பு கவுன்சில் அல்ல” என்று கூறினார்.

தீர்மானத்தில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் ஏற்கப்படாததால் ரஷ்யா வீட்டோ செய்து தோற்கடித்தது.

“ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களை விண்வெளியில் நிலைநிறுத்தும் எண்ணம் இல்லை என்று ஜனாதிபதி புடின் அவர்களே பகிரங்கமாக கூறியுள்ளார். ஆனால் ரஷ்யாவின் வீட்டோ அதற்கு எதிராக உள்ளது.

Image

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, உலகின் தற்போதைய மற்றும் எதிர்கால மக்களுக்கு அனுப்ப விரும்பும் முக்கியமான செய்தி இதுதானா? விண்வெளி அமைதியின் களமாக இருக்க வேண்டும், அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்,” என்று வாக்கெடுப்புக்குப் பிறகு ஐ.நா.வுக்கான ஜப்பான் தூதர் Kazuyuki Yamazaki கூறினார்.

தீர்மானத்தின் மீதான ரஷ்யாவின் வீட்டோவை வெள்ளை மாளிகையும் விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஒரு அறிக்கையில், “நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல, ரஷ்யா  அணுசக்தியை  சுமந்து செல்லும் புதிய செயற்கைக்கோள் எதிர்ப்பு சாதனத்தை உருவாக்குகிறது என்று அமெரிக்கா மதிப்பிடுகிறது. விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்று அதிபர் புடின் பகிரங்கமாக கூறியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்படி இருந்திருந்தால், இந்த தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ செய்திருக்காது” என்று கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ பவர் மூலம் எதிர்த்து தோற்கடித்தது. பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற 13 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சீனா இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

வாக்கெடுப்புக்குப் பிறகு ஒரு கூட்டறிக்கையில், அமெரிக்காவும் ஜப்பானும் “நம்பமுடியாத அளவிற்கு ஏமாற்றமடைந்ததாக” தெரிவித்தன.

மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்து, ‘எவ்வளவு அமைதியா இருக்கு” என்று நம்பிக் கொண்டிருக்காதீர்கள். அங்கே அவ்வளவு போர்களுக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இரசிக பிரியா (மாணவ நிருபர்)

VD 12 : அனிருத் இசை இருக்கும் ஆனால் பாடல்கள் இல்லை..!

ஒருபக்கம் மோடி பிரச்சாரம்… மறுபக்கம் காலி சொம்புடன் சித்தராமையா டி.கே.சிவக்குமார் தர்ணா!

சீதை வேடத்துக்கு சாய் பல்லவி மேட்ச் இல்லையா? என்ன சொல்றாங்க பாருங்க!

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *