அறப்போர் இயக்கம் தன் மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 2019, 2020, 2021 ஆண்டுகளில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் டெண்டர் பணிகளில், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் மூலம் ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியது.
இதனைதொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலில் தனக்கு தொடர்பு இருப்பதாக அறப்போர் இயக்கம் கூறும் குற்றச்சாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும். ஏற்கெனவே வெளியிட்டதற்காக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு இன்று (ஆகஸ்ட் 02) வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடைவிதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரித்தார்.
அதேவேளையில் இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கினை வரும் ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் நோட்டீஸ் அனுப்பியும், இதுபோன்று தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஊழல் குற்றச்சாட்டு விவரங்களை பதிவிட்டால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரும்படி எடப்பாடி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
கிறிஸ்டோபர் ஜெமா