அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக அவர் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலமுறை நிராகரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கடைநிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையிலிருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது ஏன்? இதன்மூலம் மக்களுக்கு அரசு என்ன சொல்ல வருகிறது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதம் முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என முதல்வர் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழ்நாடு முதல்வர் 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்து தமிழ்நாடு அமைச்சரவை குழுவில் இருந்து விலகும் செந்தில்பாலாஜி ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தினம்தோறும் – சாதாரண மனிதர்களின் காதலைக் கொண்டாடும் படம்!
”உங்கள் உழைப்பு உங்களுக்கு” திருடிய தேசிய விருதுகளை… திருப்பி அளித்த திருடர்கள்!