எம்.எல்.ஏ.க்களுக்கு பூஸ்ட்: அமைச்சர்களுக்கு உதயநிதி வைத்த செக்!

Published On:

| By Aara

The game of ministers Udayanidhi's new check

திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக வரவழைத்து அவர்களிடம் தொகுதி பிரச்சனைகளை கேட்டு அறிந்து கொள்கிறார் என்ற தகவலை கடந்த ஜூலை 9 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு உதயநிதி தந்த உறுதி  என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பணி பளு அதிகமாக இருப்பதால் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதாக உத்திரவாதம் கொடுத்து அனுப்புகிறார் உதயநிதி  என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

உதயநிதி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஒவ்வொரு மாவட்ட பயணத்தின்போதும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். மாவட்டங்களில் விரிவாக அவர்களிடம் பேச இயலாத சூழலில் அவர்களை சென்னைக்கே நேரில் வரவழைத்துப் பேசுகிறார்.

இதற்கிடையில், ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் அனுமதியளிக்கும் ஆய்வுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 7) நடந்தது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இருக்கும் முக்கியமான பத்து பிரச்சனைகளை அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் பட்டியலிட்டு கலெக்டர் அலுவலகத்திடம் அளிக்க வேண்டும் அதன் அடிப்படையில் அந்த பிரச்சினைகள் பற்றிய மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆய்வு செய்யும் குழு பரிசீலித்து பட்டியல் அனுப்பும்.

அதன்படி உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முடித்த பணிகளையும், எடுக்க இருக்கும் பணிகளையும் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.  இந்தத் திட்டங்களின் கீழ் சில விவரங்களையும் திமுக உள்ளிட்ட பல கட்சி எம்.எல்.ஏ.களிடம் இருந்தும் பெற்றிருக்கிறார் உதயநிதி. இது அரசு ரீதியாக நடப்பது.

அதேநேரம் திமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கும்போது அரசியல் ரீதியாக அவரவர் தொகுதியின் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறார். குறிப்பாக, ‘என் தொகுதியில் நடக்கும் அரசுத் திட்ட நிகழ்வுகளுக்கும், கட்சி நிகழ்வுகளுக்கும் மாவட்டச் செயலாளர், அமைச்சர், பொறுப்பு அமைச்சர் என்னை அழைப்பதே இல்லை’ என்று கணிசமான எம்.எல்.ஏ.க்கள் உதயநிதியிடம் மனம் திறந்து புகார் சொல்லியிருந்தார்கள்.

இப்போது அதன் மீதான நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டார் உதயநிதி. அதாவது தங்களை மதிக்கவில்லை, தங்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்று குறைபட்டுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார ரீதியாக சில ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறார் உதயநிதி.

‘நீங்கள் உங்கள் தொகுதியில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்துங்கள். மாவட்டச் செயலாளருக்கு முறைப்படி தகவல்  சொல்லுங்கள். அவர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் நடத்துங்கள். தேவைப்பட்டால் என்னையும் அழையுங்கள். நான் வருகிறேன்’ என்று அவர்களுக்கு தைரியம் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் உதயநிதி.

அமைச்சர்களால் தாங்கள் மதிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதியின் நேரடி உத்திரவாதத்தால் உற்சாகம் அடைந்து தங்களது தொகுதிகளில் வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். இது உதயநிதி தங்களுக்கு வைக்கும் செக் தான் என்பதை சீனியர் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் அறிந்து அதிர்ந்துதான் போயிருக்கிறார்கள்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

World cup 2023: 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்… பரிதாப இந்திய அணியை மீட்ட கோலி, ராகுல்

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share