ஆளுநர் உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்யக்கோரி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேரவை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில பத்திகளை தவிர்த்துவிட்டு வாசித்தார்.
குறிப்பாக, திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், சமூக நீதி, சமத்துவம், பெண்ணடிமை போன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏறாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் இன்று(ஜனவரி 11) சட்டப்பேரவை அலுவலகத்தில் இருந்து அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கும் இந்த பேரவை வருத்தத்தை பதிவு செய்கிறது.
அதேபோன்று பேரவையின் மாண்பினை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர்களாவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுபோன்ற கடிதம் அனுப்பப்படுவது என்பது இது முதல்முறையாகும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுவதுதான் வழக்கம்.
ஆனால் இந்தமுறை ஆளுநரின் உரையே நீக்கப்பட்டு இருப்பதால் இதுபோன்ற கடிதத்தை சட்டப்பேரவை செயலர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
கலை.ரா
ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா? எம்.எல்.ஏக்களிடம் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!
திரை பிரபலங்களின் வாழ்த்து மழையில் துணிவு வாரிசு