நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். மூவரில் ஒருவரான அனுப் பாண்டே கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அன்றே ஓய்வு பெற்றுவிட்டார். அவர் ஓய்வுபெற்று ஒரு மாத காலம் நெருங்கும் சூழலில் அவரது இடமும் இன்னும் புதிய நியமனங்கள் எதுவும் இல்லாமல் காலியாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பதால் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒருவர் மட்டுமே இருக்கிறார். தேர்தல் மிக அருகில் நெருங்கிவிட்ட காலச்சூழலில் தேர்தல் ஆணையத்தில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
சாதாரணமாக ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனங்களிலேயே பணியிலிருந்து விலகுவதற்கு 2 அல்லது 3 மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் இங்கே உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கால இடைவெளியும் இல்லாமல், குறிப்பிடத்தக்க சரியான காரணமும் இல்லாமல் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்வது பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல், காலசூழலின் முக்கியத்துவம் புரிந்திருந்தும் 24 மணி நேரத்திற்குள்ளாகவே அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றிருப்பதும் பல கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் ஆணையர் ராஜினாமா விவகாரத்தின் பின்னணியில் பாஜக அரசின் கை இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
யார் இந்த அருண் கோயல்?
அருண் கோயலின் ராஜினாமா மட்டுமல்ல, அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே நிகழ்ந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண் கோயல் மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் செயலராக இருந்தார். அச்சமயத்தில் 17 நவம்பர் 2022 அன்று தேர்தல் ஆணையரை அரசே நியமித்தால் அது சுதந்திரமாக செயல்பட முடியாது, இந்த வழிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அடுத்த நாளான 18 நவம்பர் 2022 அன்று அவர் விருப்ப ஓய்வு கோரி அப்பதவியிலிருந்து விடுவித்துக் கொண்டார். அதற்கு அடுத்த நாளே 19 நவம்பர் 2022 அன்று மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையில் அருண் கோயல் தேர்தல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
எந்த அடிப்படையில் இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்?, பணியிலிருந்து விடுவித்துக் கொண்ட அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. அவர் ஆணையராக நியமிக்கப்பட்ட நேரமும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்கள் முன்னதாகத்தான் அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினைத் தொடர்ந்த ADR (Association for Democratic Reforms) அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.
அருண் கோயல் பதவியேற்ற 5 நாட்களில், 24 நவம்பர் 2023 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அருண் கோயலை நியமிப்பதில் எதற்காக இத்தனை அவசரம் காட்டப்பட்டது? ஏதேனும் தவறுகள் நடந்திருக்கிறதா? என்று உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. ஆனால் சில மாதங்கள் கழித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பெஞ்ச் இந்த வழக்கிலிருந்து விலகியது. இப்படி அருண் கோயல் பதவியேற்றதே பெரும் சர்ச்சையுடன் தான் துவங்கியது.
தேர்தல் ஆணையர்கள் நியமனம்… உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!
தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெற வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர்களை அரசாங்கம் நியமிக்கக் கூடாது, அதற்கான புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் கீழ் நடைபெற்ற வழக்கில் 2 மார்ச் 2023 அன்று தீர்ப்பு வெளிவந்தது. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் பிரதமர், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூவரும் இருக்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதற்கு மாறாக டிசம்பர் 2023 இல் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தினைக் கொண்டு வந்து (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் கமிட்டியிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது பாஜக அரசு. அக்கமிட்டியில் மூன்றாவது நபராக தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் இருக்கலாம் என்று இணைக்கப்பட்டது. மூவரில் பிரதமர் மற்றும் ஒரு கேபினெட் அமைச்சர் என இருவர் ஆளும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்பதால் தேர்வுக் குழுவில் பாஜக அரசே பெரும்பான்மை பெற்றது. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதித்துவம் என்பது அதிகாரமற்ற ஒன்றாக மாற்றப்பட்டது.
இப்போது புதிய சட்டத்தின் அடிப்படையில், அருண் கோயலுக்குப் பதிலாக புதிய தேர்தல் ஆணையராக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பாஜக அரசு தான் முடிவு செய்யும் என்பதால் அருண் கோயல் ராஜினாமா பல கேள்விகளை எழுப்புகிறது.
தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழு வரும் மார்ச் 14 அல்லது 15 ஆம் தேதி கூடும் என்று தெரிய வந்துள்ளது. அக்கமிட்டியில் ஒரே உறுப்பினராக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செளத்ரிக்கு தேர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என்ற செய்தியை மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக புதிய தேர்தல் ஆணையர்கள் யாரையும் நியமிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த தீர்ப்பு!
பிப்ரவரி 15, 2024 அன்று உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் நடைமுறை சட்டவிரோதம் என்று அறிவித்து ரத்து செய்தது. அத்துடன் மார்ச் 6 ஆம் தேதிக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விவரங்களை வெளியிட ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றம் சென்றது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. எஸ்.பி.ஐ-யின் மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.
மார்ச் 12, 2024க்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதுடன், மார்ச் 15, 2024க்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எல்லா விவரங்களையும் தொகுத்து வெளியிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது.
மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையர் பதவி விலகியிருப்பதும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் அளித்த பேட்டியில், தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தையொட்டி தேர்தல் ஆணையர் பதவி விலகியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும், இதன் பின்னணியில் பாஜக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறார்.
இதற்கு முன் பதவி விலகிய தேர்தல் ஆணையர்!
அருண் கோயலுக்கு முன்பு 2020 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவசா பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் விதிகளை மீறியதை அறிவித்தவர்.
முதல் முறை வாக்காளர்கள் தங்கள் முதல் வாக்கை புல்வாமா மாவீரர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசினார். அதேபோல் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடத் தேர்ந்தெடுத்திருப்பது அங்கு பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையாக இருப்பதால் என்று மத ரீதியான கருத்துகளை முன்வைத்தார். இப்படி 5 விடயங்களில் மோடி தேர்தல் விதிகளை மீறியதாக புகார் எழுந்த போது, மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் இதனை விதிமீறலாக ஏற்க மறுத்தபோது, அசோக் லவசா மட்டும் இது விதிமீறல்தான் என்று அறிவித்தார்.
தேர்தல் முடிந்த சில மாதங்களில் அவரது மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 2019 நவம்பர் மாதத்தில் அசோக் லவசாவின் மகன் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை விசாரணையைத் துவங்கியது. டிசம்பர் மாதம் அசோக் லவசாவின் சகோதரிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல் பெகாசஸ் உளவு செயலியால் கண்காணிக்கப்பட்டோரின் உத்தேசப் பட்டியலிலும் அசோக் லவசாவின் தொலைபேசி எண் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து அசோக் லவசா தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தற்போது அருண் கோயல் ராஜினாமா செய்ததன் பின்னால் முறையான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படாததால் எதிர்கட்சிகள் பல விதமான கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளன.
எதிர்கட்சிகளின் கருத்து!
காங்கிரஸ் கட்சி, “அருண் கோயல் தலைமை தேர்தல் ஆணையருடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்கிறாரா அல்லது எல்லா சுதந்திரமான அமைப்புகளிலும் டிரைவர் போல் முதல் சீட்டில் அமர்ந்திருக்கும் மோடி அரசுடனான வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்கிறாரா?
அல்லது கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியைப் போல, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் சீட்டு வாங்கி மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி, “அருண் கோயல் நியமிக்கப்பட்டபோதே திடீரென தான் நியமிக்கப்பட்டார். 24 மணி நேரத்தில் அவர் நியமிக்கப்பட்டதில் உள்ள வேகத்தினை உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பியிருந்தது. இவர் பாஜகவின் ஆள் தான். அவரே ராஜினாமா செய்கிறார் என்றால் நாட்டு மக்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், பாஜக அரசு அருண் கோயலை என்ன செய்யச் சொல்லிக் கேட்டது? நாம் இதனை செய்ய முடியாது அதற்குப் பதிலாக ராஜினாமாவே செய்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு என்ன விதிமீறல்களை செய்யும்படி அவர் பாஜகவால் கேட்டுக்கொள்ளப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ”தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் புதிய சட்டப்படி தேர்தல் ஆணையத்தின் அனைத்து விவகாரங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்றால், இப்படிப்பட்ட சூழல் ஏன் எழுந்தது எனும் சரியான விளக்கத்தினை அரசாங்கம் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவேகானந்தன்
அமலுக்கு வந்தது ’சிஏஏ’ சட்டம்!
இரட்டை இலை சின்னம் : எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!