மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று (மார்ச் 27) குற்றம்சாட்டியுள்ளார்.
மதிமுக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னம் கோரி மார்ச் 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துரை வைகோ கூறும்போது, “தேர்தல் சின்னம் ஒதுக்கீடு அடிப்படையில் தான் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் கோரப்பட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் அதையே காரணம் காட்டி, முந்தைய காலங்களில் இதுபோன்று நாங்கள் சின்னங்களை ஒதுக்காமல் இருந்துள்ளோம்.
அதில் சட்டப்படி பல சர்ச்சைகள் இருக்கிறது. அதனால், தற்போது சின்னத்தை ஒதுக்கினால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
பம்பரம் சின்னம் என்பது புது சின்னம் கிடையாது. தற்போதும், மதிமுக சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி.
மதிமுக பயன்படுத்திய சின்னம் பம்பரம். அதனால், அந்த சின்னம் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு பட்டியலில் உள்ளது.
மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்காமல் இருப்பது, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதற்கு ஒரு உதாரணம்.
இதேப்போல், நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியுள்ளனர்.
மதிமுக மனுவின் மீது தேர்தல் ஆணையம், 2 தொகுதிகளில் போட்டியிட்டால் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அப்படி பார்த்தால், விசிக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏன் அவர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது.
அதேநேரத்தில், பாஜக கூட்டணியில் உள்ள தமாக-விற்கும், அமமுக-விற்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிய அரசு அலுவலங்களை அவர்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை முடக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.
பம்பரம் சின்னம் மதிமுகவிற்கு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். கிடைக்காத பட்சத்தில் வேறு சின்னங்களை நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம்” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
இவருக்கா 42 வயசாச்சு… தோனி பிடித்த சூப்பர்-மேன் கேட்ச்!