The ed has completed the raid in places related to Vaithilingam!

வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய நிறுவனத்தில் அமலாக்க துறை நடத்தி வந்த சோதனை நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை மற்றும் தஞ்சையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர்.

தமிழ்நாட்டில்  கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் ஆ.வைத்திலிங்கம். அப்போது, சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் அண்ட்இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்க இவர் ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் அதனை உறுதி செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், வைத்திலிங்கம், அவரது இரு மகன்கள் உட்பட 11 பேர் மீது  கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களிலும், லஞ்சம் கொடுத்த ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் தொடர்பான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனையை தொடங்கினர்.

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிகாடு ஊரில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, தஞ்சை கணபதி நகரில் உள்ள அவரது இளைய மகன் சண்முக பிரபு வீடு, சென்னையில்  எம்.எல்.ஏ விடுதியில் உள்ள அவரது அறை, சென்னை அசோக் நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம்,  எழும்பூரில் உள்ள எம்.எம்.டி.ஏ அலுவலகம் உட்பட 13 இடங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டது.

நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ள இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அசோக் நகரில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வரும் வைத்திலிங்கத்தின் 6 நிறுவனங்களில் பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வாங்கி குவித்து வைத்துள்ள பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பங்கு முதலீட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விரைவில் சொத்து முடக்க நடவடிக்கைகள் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க உத்தரவு!

மெய்யழகன் முதல் ஹிட்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன?

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *