ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (அக்டோபர் 8) காலை வெளிவரத் தொடங்கிய நிலையில்… முதல் சுற்றுகளில் எக்சிட் போல் முடிவுகளின்படியே காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
ஆனால் சில சுற்றுகளிலேயே பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் தரவுகளை வெளியிட்டு வருகிறது.
இன்று பகல் 12.30 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் 48 இடங்களில் பாஜக, 36 இடங்களில் காங்கிரஸ் என தரவுகளை வெளியிட்டிருந்தது.
இதே நேரம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
“தேர்தல் கமிஷன் தரவுகள் மூலம் தொலைக்காட்சியில் காட்டப்படும் சுற்றுகளின் எண்ணிக்கையிலும், வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் சுற்றுகளின் எண்ணிக்கையிலும் பொருத்தமில்லாத நிலை உள்ளது. 11 ஆவது சுற்று எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் 4 ஆவது அல்லது 5 ஆவது சுற்று நிலவரத்தைதான் வெளியிடுகிறது. தேர்தல் ஆணையம் யாருடைய அழுத்தத்தால் இப்படி செயல்படுகிறது? ஒவ்வொரு சுற்றிலும் நேரடி தரவு கணக்கிடப்படுகிறது, ஆனால் ஹரியானாவில் அவ்வாறு இல்லை” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ” சில நிமிடங்களில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறோம். எங்கள் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என்று நம்புகிறோம்” என்கிறார்.
இதற்கு பதிலளித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், “காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தை நோக்கி விரல் நீட்டத் தொடங்கிவிட்டால், அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
–வேந்தன்
”கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணம் ரொம்ப அதிகம்” : அன்புமணி குற்றச்சாட்டு!
“தோனி போன்றவர்கள் இருப்பது ஐ.பி.எல் தொடருக்கு நல்லது” : டாம் மூடி