மதுரையில் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்: அதிர வைக்கும் கடிதம்!

Published On:

| By christopher

The death of the DMK executive who set himself on fire...

மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த அக்கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 30) பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

மதுரை ஆவின் பால் பண்ணை திமுக தொழிற்சங்க கௌரவ தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் மானகிரி கணேசன் (73). இவர் நேற்று காலை திருப்பரங்குன்றம் அடுத்த மூலக்கரையில் வசிக்கும் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவும்,  மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதி வீட்டுக்கு வந்தார். தளபதியும் அப்போது வீட்டில் இல்லை. அவரது மகனும் வாக்கிங் போய்விட்டார்.

எம்.எல்.ஏ. வீட்டில் யாரும் இல்லாத நிலையில்  வீட்டு வாசலில் திடீரென  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  அங்கிருந்த உதவியாளர் ஒருவர் பார்த்து பதறிப் போய் தீயை அணைத்திருக்கிறார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் கணேசன்.

அவரிடம் நீதித்துறை நடுவர் லட்சுமி நேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று மானகிரி கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று மானகிரி கணேசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதி கையொப்பமிட்டிருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி இருந்தனர்.

அதில் ”கடந்த ஆண்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் சிலை முன்பாக தமிழக ஆளுநரை கண்டித்து எனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது உடல் முழுவதிலும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். என்னிடம் திமுக மாவட்ட செயலாளர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வேண்டாம் என சொல்லியிருந்தால் நான் தீக்குளித்திருக்க மாட்டேன்.

ஆனால் அவர், எதுவும் சொல்லவில்லை. இதையெல்லாம் உண்மையா என்பதை ஒரு அமைச்சரை அனுப்பி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும், யாரும் நலம் விசாரிக்க வராத நிலையில் மனம் வெறுத்துப் போய் என் நிலையை விளக்கி திமுக தலைமைக்கும், முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளேன். மேலும் என் கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் ஆகஸ்ட்  8,9 ஆம் தேதிக்குள் கலைஞர் சிலை முன்பாக தீக்குளித்து இறந்துவிடுவேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விமர்சனம் : சூர்யா’ஸ் சாட்டர்டே!

’ஹலோ வுமனைசர் என் கிட்ட நிறைய செருப்பு இருக்கு’: விஷாலுக்கு ஸ்ரீரெட்டி அதிரடி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share