திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளார்.
கனமழையால் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவில், அதன் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ள வீட்டின் மீது நேற்று சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வந்து விழுந்தது.
இதில் அந்த வீட்டில் தங்கியிருந்த ராஜேந்திரன், மீனா அவர்களது இரு பிள்ளைகள், உறவினர் பிள்ளைகள் உட்பட 7 பேரும் மொத்தமாக மண்ணுக்குள் சிக்கினர்.
அந்த இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தேசிய, மாநில பேரிடர் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 24 மணி நேரமாக தேடும் பணி தொடர்ந்த நிலையில், ஒரு சிறுவன், சிறுமி உட்பட இதுவரை மண்ணில் புதையுண்ட 4 பேரின் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. மீதமுள்ள 3 பேரின் உடல்களை கொட்டும் மழைக்கிடையே தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே திருவண்ணாமலையில் பாறை, மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான சம்பவ இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடனிருந்தனர்.
தலா ரூ. 5 லட்சம் நிதி!
பின்னர் கொட்டும் மழையில் நனைந்தபடி செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”எப்படியாவது நல்ல செய்தி வரும், அனைவரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடன் எதிர்ப்பார்த்தோம். கடந்த 24 மணி நேரமாக போராடிய நிலையில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரின் உடல்களை மீட்கும் பணியை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உண்மையில் மிக துயரமான சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாறை, மண் சரிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை நாளை மாலைக்குள் வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.
மேலும் அவர், “திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கின்றோம். சென்னை ஐஐடியில் இருந்து மண் பரிசோதனை குழுவினர் நாளை காலை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மழை வெள்ள பாதிப்பு… ரூ.2000 கோடி வேண்டும் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!
வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி
புயல் பாதிப்பு… நிவாரணம் வழங்கப்படுமா? : ஸ்டாலின் பதில்!
இரண்டு நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் : அப்பாவு அறிவிப்பு!