சக்கர வியூகம் போன்று மோடியின் தாமரை வியூகத்தில் நாடு சிக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கூறினார்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை விமர்சித்து வரும் நிலையில், இன்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
பிரதமர் மோடி தனது மார்பில் அணிந்திருக்கும் தாமரை வடிவிலான சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கி தவிக்கிறது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருசேத்ராவில் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கியதைப் போல தற்போது நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிக்கியுள்ளனர்.
இளைஞர்கள் அக்னிவீர் சக்கரத்தில் சிக்கியுள்ளனர். அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறுகுறு தொழில் செய்பவர்கள் என அனைவரும் பிரதமர் மோடியின் தாமரை வியூகத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
அபிமன்யு ஆறு பேரால் கொல்லப்பட்டார். அதுபோல இன்றும் ஆறு பேர் உள்ளனர்.
அவர்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழில்துறையினர் அதாவது அம்பானி அதானி, ஆகியோர் அடங்குவர்” என்று பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, அஜித் தோவல் அம்பானி அதானி ஆகியோர் பெயர் நீக்கப்படுவதாக கூறினார்.
அம்பானி, அதானி என்ற பெயரை சொல்லக்கூடாது என சபாநாயகர் கூறியதால் ஏ1,ஏ2 என ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கத்துறை வருமான வரித்துறை ஆகிய மூன்றும் சக்கர வியூகத்தின் மையத்தில் உள்ளன. பாஜக அரசின் நடவடிக்கையால் இவை இந்த நாட்டை சீரழித்துவிட்டன என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மொய்தாம்கள் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு !
நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம்: ஏன்?