சமூக நீதிக்கு எதிரான “கிரீமி லேயர் விலக்கம்” என்ற கருத்தாக்கம்!

Published On:

| By Minnambalam

ராஜன் குறை Concept of Creamy Layer Exclusion

கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சரியான அடிப்படைகள், தரவுகள் இருந்தால் மாநில அரசுகள் சில வகுப்பினருக்கான உள் ஒதுக்கீட்டைச் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. உதாரணமாக, கலைஞரால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட அருந்ததியருக்கான மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு இதனால் உறுதியான சட்ட அங்கீகாரம் பெறுகிறது. போதிய தரவுகள், அடிப்படைகள் இன்றி அரசியல் காரணங்களுக்காக எந்த ஒரு மாநில அரசாவது இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினால் நிச்சயம் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வழக்கு தொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், தமிழ்நாட்டு அருந்ததியர் உள் ஒதுக்கீடு போல, தேவைப்படும் இடத்தில் சமூக நீதியை உறுதி செய்ய உள் ஒதுக்கீடு செய்வது என்பது முற்போக்கானது என்றுதான் கருத முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் ஓர் எதிர்பாராத விபரீத எண்ணமும் விதைக்கப்பட்டிருந்ததுதான் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. தீர்ப்பை எழுதிய ஏழு நீதியரசர்களில் நான்கு பேர் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் என்ற பிரிவினரை விலக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். ஏற்கனவே மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கம் செய்தபோது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமி லேயரை விலக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்று இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்த போராட்ட சூழலில் இந்த கிரீமி லேயர் இடையீட்டை அரசியல் சக்திகளால் எதிர்க்க இயலாமல் போயிற்று எனலாம். அதனால்தான் இந்த தவறான அணுகுமுறையை இப்போது பட்டியலினத்தவருக்கும் நீடிக்க முன்வருகிறது உச்ச நீதிமன்றம். இந்த விபரீதப் போக்கை முளையிலேயே கிள்ள வேண்டியதும், பிற்படுத்தப்பட்டோருக்கும் கிரீமி லேயர் என்ற தடையை நீக்குவதும் முற்றிலும் அவசியமானதாகும். ஏன் என்று பார்ப்போம்.

கிரீமி லேயர் என்றால் என்ன?

பாலைக் கடைந்தால் அதன் மேல்புறத்தில் வெண்ணெய் திரளும். அந்த வெண்ணெய்க்குப் பெயர்தான் கிரீம். அது போல ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பொருளாதார அளவில் மேம்பட்டவர்களை கிரீமி லேயர் என்று குறிக்கிறார்கள். உதாரணமாக கிராமப் புறத்தில் ஏழ்மையிலிருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருவர் அரசு வேலையில் சேர்கிறார். அவர் சிறிது காலத்தில் வீடு ஒன்றை கட்டிக்கொள்கிறார். அவரது குழந்தைகளை இடையூறில்லாமல் பள்ளிக்கு அனுப்புகிறார். பதவி உயர்வு பெறுகிறார். அவரது ஆண்டு வருமானம் எட்டு லட்ச ரூபாயாக உயர்கிறது. அப்போது அவர் கிரீமி லேயர் ஆகிவிடுவார். அவருடைய பிள்ளைகள் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கோ, ஒன்றிய அரசு வேலைக்கோ விண்ணப்பித்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் வேலை கிடைக்காது. ஏனெனில் அவர் கிரீமி லேயர்.

இந்தக் கருத்தாக்கம் சமூக நீதியை செயல்படுத்துவதில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஆய்வாளர் சுபகுணராஜன் கூறுவதுபோல கிரீமி என்பது ஒரு கிருமி. சமூக நீதியைத் தாக்கும் கிருமி. ஏன் என்பதை விரிவாக சிந்தித்து புரிந்துகொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் வரலாற்று அடிப்படை என்ன?

இந்திய சமூகத்தில் பரவலாக வர்ண அமைப்பு நிறுவப்பட்டது. அது மனிதர்களை நான்கு வகைகளாகப் பிரித்தது. பிராமணர்கள் பூசாரிகளாகவும், கல்வி பயில்பவர்களாகவும், கணக்கெழுதுபவர்களாகவும் விளங்கினர். சத்திரியர்கள் போர் வீரர்களாக, தளபதிகளாக, மன்னர்களாக விளங்கினர். வைசியர்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். சூத்திரர்கள் விவசாயிகளாகவும், பல்வேறு தொழில்களை செய்பவர்களாகவும் இருந்தனர். இதற்கும் அப்பால் பட்டியலினத்தவர் தீண்டப்படாதோராக வைக்கப்பட்டு பல்வேறு சேவைகள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக இருந்தனர்.

இந்த வர்ண அமைப்பிலேயே மனிதர்கள் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டதாக மனுதர்ம சாத்திரம் உள்ளிட்ட நூல்களில் கூறப்பட்டது. மனித உடலையும், அதில் இயங்கும் ஆன்மாவையும் பிரித்த இந்த நூல்கள் ஆன்மாவிற்கு வர்ணம் கிடையாது என்றும், அது ஒரு பிறப்பில் செய்யும் செயல்களின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவியில் பிறப்பெடுக்கும் என்று கூறப்பட்டது. நிறைய புண்ணியம் செய்தால் பார்ப்பனராக பிறக்கலாம். பாவம் செய்தவர்கள் சூத்திரர்களாகவோ, தீண்டப்படாதவர்களாகவோ பிறப்பார்கள் என்று தந்திரமாக புனைந்து கூறப்பட்டது. சூத்திரர்களும், பஞ்சமர்களும் சமூக விலக்கம் செய்யப்படுவது முற்பிறவியில் அவர்கள் செய்த பாவத்தால்தான் என்று சமாதானம் கூறப்பட்டது.

வர்ண அமைப்பு எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததா, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருந்ததா என்றெல்லாம் பல ஆய்வாளர்கள் கேட்பதுண்டு. அதெல்லாம் விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம். ஆனால், சமூகம் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, ஒருவர் செய்யும் தொழில் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுவதாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இதுவே ஜாதீய சமூகத்தின் அடிப்படையாக இருந்தது. அண்ணல் அம்பேத்கர் அதனால்தான் ஜாதீய அமைப்பு வேலைப் பிரிவினை அல்ல, வேலை செய்பவர்களின் பிரிவினை என்று கூறினார் (Not division of labor but division of laborers). பெரியார் ஆன்மா, மறுபிறவி ஆகிய கற்பிதங்கள் அனைத்தையுமே பகுத்தறிவு கொண்டு நிராகரிக்க பயிற்றுவித்தார்.

ஆனாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன சமூகம் உருப்பெற்றபோது, அச்சு இயந்திரம் கல்வியைப் பரவலாக்கியது; அரசு நிர்வாகம் என்பது புதிய சட்டத் திட்டங்களின் அடிப்படையில் பரவலாகியது; போக்குவரத்து வசதிகள் ரயில் போன்றவற்றால் மேம்பட்டன; தொழில் உற்பத்தி பெருகியது. இந்த நிலையில் காலம் காலமாக வர்ண, ஜாதி அமைப்பில் கல்வி பெற்றவர்களான பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினர் உடனடியாக நவீன கல்வி பெற்று எல்லா தொழில்களிலும், அரசு நிர்வாகத்திலும், சட்டத்துறை, கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்தனர். கல்வி கற்காமல் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் இந்த வளர்ச்சியில் பின் தங்கினர். ஏராளமான ஆய்வாளர்கள் கூறுவதுபோல இந்திய அளவில் 15% மக்கள் அனைத்து நவீன துறைகளிலும் முன் நிற்க, 85% மக்கள் பின் தங்கினர்.

இவ்வாறு பின் தங்குதல் என்பது பொருளாதாரம் சார்ந்ததல்ல. வர்ண பிரிவினை சார்ந்தது.  உதாரணமாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் நில உடமையாளராக இருக்கலாம். ஆனால், அவர் நிலம் குறித்து ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்க்க முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், நீதிமன்றம் செல்ல வேண்டுமானால் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த வக்கீல்கள் ஆகியோரைத்தான் சார்ந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் நிலம் வைத்திருந்தாலும், கல்வி பெற்றிருக்க மாட்டார்.

கல்வியிலிருந்து பல தலைமுறைகளாக ஒதுக்கப்பட்டிருந்த சமூகத்தினரால், பல தலைமுறைகளாக கல்வி பயின்றவர்களுடன் உடனே போட்டியிட்டு முன்னேற இயலாது என்பது இயல்பானது. ஏனெனில், அவர்கள் வாழ்க்கை முறையில் அதற்கான தகவமைப்புகள் இருக்காது. மானுடவியலாளர்கள் இதனை “கலாச்சார மூலதனம்” (Cultural Capital) என்று குறிப்பிடுவார்கள்.

எனவேதான் இந்திய அரசமைப்பு சட்டம் மிகத் தெளிவாக இட ஒதுக்கீடு என்பது சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கிய சமூகத்தினருக்கான என்று கூறியது (Socially and educationally backward) என்று கூறியது.

ஏன் பொருளாதாரம் இட ஒதுக்கீட்டுக்கான காரணி அல்ல?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தர ஏழ்மை காரணமல்ல. இட ஒதுக்கீடு ஏழ்மை ஒழிப்பு திட்டமல்ல. இந்த சமூகங்கள் சந்தித்த சமூக விலக்கத்தை ஈடு செய்யவே இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது.

மேலும், பொருளாதார நிலை என்பது தனி நபர் சார்ந்ததே தவிர, சமூகம் சார்ந்ததல்ல. உதாரணமாக, பார்ப்பன சமூகத்தை சார்ந்த, பூர்வீகச் சொத்து உள்ள ஒருவர், ஓர் அதிகாரியாக வங்கியில் பணி புரிகிறார். இவருக்கு சூதாடும் பழக்கம் வந்துவிடுகிறது. அதில் தன் சொத்துகளையும், சேமிப்புகளையும் இழந்து விடுகிறார். வேலையும் இழந்துவிடுகிறார். இப்போது அவர் குடும்பம் ஏழ்மை நிலையடைகிறது. இன்னொரு வணிகர் பேராசையால் தவறான முதலீடுகளை செய்கிறார். நட்டமடைந்து தன் செல்வத்தையெல்லாம் இழக்கிறார். வறுமை நிலையடைகிறார்.

இவ்வாறு தங்கள் நடவடிக்கைகள் காரணமாக வறுமை நிலையடைந்த குடும்பங்களுக்கெல்லாம் அரசு இட ஒதுக்கீடு செய்வது என்பது பொறுப்பற்ற போக்கை ஆதரிப்பதாகிவிடும். ஒருவர், தான் பொருளை இழந்தால் தன் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நினைக்கும்படியான சூழல் சமூக நீதியல்ல. சமூகப் பொறுப்பற்ற போக்காகும். இப்படிப் பொறுப்பற்ற மனிதர்களின் பிள்ளைகளும் பொறுப்பாகப் படிக்காமல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு உயர்கல்வியில் முன்னுரிமை அளிப்பது எவ்வளவு தவறான அணுகுமுறை என்பதை சிந்திக்க வேண்டும்.

ஆனால், பாஜக அரசு நடைமுறைப்படுத்திய பொருளாதாரத்தில் நலிவுற்ற முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதைத்தான் செய்கிறது. எட்டு லட்ச ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள முன்னேறிய வகுப்பினரின் வாரிசுகள் இப்போது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில், அலுவலகங்களில் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டினை பெறுகிறார்கள். இவர்கள் பெற்றோர் எந்த காரணத்தினால் குறைவாக பொருள் ஈட்டுகிறார்கள் என்பதே கேள்வியல்ல. அவர்கள் தங்கள் பொறுப்பற்ற சோம்பேறி வாழ்க்கையால்கூட அதிகம் பொருளீட்டாமல் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்கிறது. இட ஒதுக்கீட்டில் பொருளாதார காரணிகளை நுழைப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

கிரீமி லேயர் கொள்கையால் நிரப்பப்படாத இடங்கள்

டெல்லி போன்ற பெரு நகரங்களில் பல அரசு கல்வி நிறுவனங்களில் பல்வேறு நுண் திறன் புலங்களில் பட்ட மேற்படிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. உளவியல், சமூகவியல், நுண்கலைகள், கலாச்சார ஆய்வுகள் எனப் பல துறைகள் உள்ளன. அறிவியலிலும் பல நுண் திறன் புலங்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர் பணியிடங்களிலும் உள்ளது. ஆனால், இந்த இடங்கள் நிரப்பப்படுவது கடினமாக உள்ளது; பல சமயங்களில் நிரப்பப்படுவது இல்லை. காரணம் என்னவென்றால் கிரீமி லேயர் விலக்கம்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பொருளாதார வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பணியில் சேரவே முனைவார்கள். பட்டப்படிப்பினை முடிப்பதே அதிகப்படியான சுமையாக இருக்கும். இவர்கள் மாஸ்டர்ஸ் எனப்படும் பட்ட மேற்படிப்பினை மேற்கொள்வது கடினம். அப்படியே படித்தாலும் அதிக வேலை வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுப்பார்களே தவிர, புதிய நுண் திறன் பயிற்சிக்கான துறைகளில் சேர மாட்டார்கள். அதே சமூகங்களில் உள்ள பொருளாதார வசதியில் மேம்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நுண் துறைகளில் மேற்கல்வி கற்க ஆர்வமிருக்கும். ஆனால், கிரீமி லேயர் கொள்கை அவர்களை விலக்கிவிடும்.

இங்கேதான் இட ஒதுக்கீட்டின் வரலாற்று தத்துவ அடிப்படைகளைக் குறித்த அறியாமை செயல்படுகிறது. காலம் காலமாக பல்வேறு நுண் அறிவுத்துறைகளிலிருந்து விலக்கப்பட்டதுதான் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையை உருவாக்குகிறது. அதை சமூக நீதி கண்கொண்டு மாற்ற வேண்டுமென்றால் அனைத்து துறைகளில் அனைத்து சமூகத்தினரும் ஈடுபட வகை செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு ஈடுபடும் வாய்ப்பினை பெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஓரளவு பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்களை கிரீமி லேயர் என்ற பெயரில் விலக்கிவிட்டால், மீண்டும் கல்வியில் காலம் காலமாக முன்னேறிய 15% மக்களே இந்த நுண் துறைகளை முழுவதும் ஆக்கிரமிப்பார்கள்.

சுருங்கச் சொன்னால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள கிரீமி லேயர்தான் முன்னேறிய வகுப்பினர் ஈடுபடும் பல துறைகளில் ஈடுபட்டு பிரகாசிக்க முடியும். ஏனெனில் இவர்களது பொருளாதார தற்சார்பு அவர்களது கல்வியில் பின்தங்கிய நிலையிலிருந்து மீள்வதற்கு உதவி செய்கிறது. ஆனால், அவர்களை வடிகட்டி விலக்கி விட்டால் பிறகெப்படி இட ஒதுக்கீட்டின்படி இடங்களை நிரப்ப முடியும்? அப்படி நிரப்பப்படாத இடங்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? யார் சீராய்வு செய்கிறார்கள்?

இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரான கிரீமி லேயர் விலக்கத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் நுழைத்த ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தில் நலிவுற்ற முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்று அடுத்த விஷ அம்பை எய்தன. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிப்பது போல இப்போது பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் விலக்கம் என்ற சமூக அநீதியை புகுத்த விரும்புகின்றனர்.

சமூக நீதியில் அக்கறை கொண்டோர் அனைவரும் ஒருங்கிணைந்து பொருளாதாரக் காரணிகளை இட ஒதுக்கீட்டு தத்துவத்தில் இணைக்கும் சமூக அநீதிக்கு முடிவு காண்பது அவசியம்.

கட்டுரையாளர் குறிப்பு:

The Concept of Creamy Layer Exclusion against social justice by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகுல் காந்தி, கமலா ஹாரிஸ்: பிற்போக்கு தேசியம் கேட்கும் ஒற்றை அடையாளம்

நிதிப்பகிர்வு பிரச்சினைகள்: கூட்டாட்சிக் குடியரசு என்பது கூட்டுக்குடும்பமா? குடியிருப்பு வளாகமா?

மாமன்னன மறந்துட்டாரு போல : அப்டேட் குமாரு

”நடுவரே சமரசம் ஆகிவிட்டார்” : செபி தலைவரை ராஜினாமா கோரும் ராகுல்

”வங்கதேசத்தில் ஆட்சிக் கலைப்புக்கு காரணம் அமெரிக்காவின் சதி” : ஷேக் ஷசீனா குற்றச்சாட்டு!

IPL 2025: மெகா ஏலத்தில் ரிடென்ஷன் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Concept of Creamy Layer Exclusion

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share