கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்று (நவம்பர் 26) தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கோவை மற்றும் விருதுநகரில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனைத்தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அம்மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
அடுத்தகட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28, 29ஆம் தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில், தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது விழுப்புரம் வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் பள்ளமான பகுதியென்றும், கனமழை பெய்தால் அங்கு நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விழுப்புரத்தில் 28, 29ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள், கள ஆய்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜனாதிபதிக்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் வாபஸ் : எஸ்.எஃப்.ஐ அறிவிப்பு!
13 வயது சூர்யவன்சி ஐ.பி.எல்லில் ஆட முடியுமா… ஐ.சி.சி. ரூல்ஸ் சொல்வதென்ன?
முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவதா? : சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!